தமிழ் பேசும் LGBTQIA+ (பால்புது, குயர்) சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பாளர்களின் கருத்துக்களை உள்ளடக்கும் கோரிக்கை.
தமிழ்நாட்டில் உள்ள LGBTQIA+ மக்களுக்கான பதங்களைக் கொண்ட ஒரு பட்டியலைத் தயாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழ்நாடு அரசுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் (W.P.No. 7284 of 2021). வாழ்வின் எல்லா அம்சங்களிலும் பால்புது மக்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்யும் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.
பால்புது சமூகத்தினரை சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும், சரியான பதங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையினரிடம் தமிழ் பால்புது சமூகத்தினர் பல வருடங்களாக தொடர்ந்து பேசிவருகின்றோம்.. ஊடகம்சார் பிரதிநிதித்துவம் மற்றும் பால்புது மக்கள் பற்றிய செய்திகளை வெளியிடுதல் ஆகியவற்றில் பால்புது சமூகத்தினர் ஏற்கனவே செய்துவரும் பணியை ஊக்குவிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
தமிழ்நாடு, இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழ்பேசும் பால்புது மக்கள் ஆகியோர் பால்புதுமையினராக இருப்பது பற்றித் தமிழில் ஆரோக்கியமான விவாதங்களை நடத்தவும், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது பயன்படுத்தவேண்டிய சரியான சொற்களை உருவாக்குவது பற்றியும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் ஒரு அங்கமாக, குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் மற்றும் ஜாஃப்னா குயர் திருவிழாவின் இயக்குநர்கள் ஆகியோர் இணைந்து பன்முகத்தன்மை கொண்ட பால்புது பதங்களை கலந்து ஆலோசித்து, தமிழில் பால்புது பதங்களுக்கான ஒரு கையேட்டை உருவாக்கி வருகிறோம்..
அது மட்டுமின்றி, தி நியூஸ்மினிட் மற்றும் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர்களோடு (LGBTQIA+ என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் பத்திரிக்கையாளர்கள் உட்பட) இணைந்து குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் ஒரு ஊடகக் கையேட்டைத் தயாரித்து வருகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் உருவாக்கப்படும் இந்தக் கையேடு, பால்புது மக்களைப் பற்றிய செய்திகளை அரசியல் சரிநிலையோடும் எப்படி வழங்குவது என்பதற்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும்.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் 2020ம் ஆண்டு பதிப்பில், பால்புது மக்களைப் பற்றிய சில பதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், உலகளாவிய தமிழ் பேசும் பால்புது சமூகத்தின் பன்முகத்தன்மைவாய்ந்த பதங்கள் அனைத்தும் சேர்க்கப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.
குறிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல் ஒரு உதாரணத்துக்காக மட்டுமே என்றும், அது பால்புது மக்களுக்கான எல்லா பதங்களையும் கொண்டதல்ல என்பதும் உத்தரவில் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பதங்கள், பால்புது மக்களின் அன்றாட வாழ்வில் பேச்சிலோ எழுத்திலோ பயன்படுத்தப்படாதவையாகவும் இருக்கின்றன.
உதாரணமாக, ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களைக் குறிக்கும் “நங்கை” என்ற சொல்லோ, ஓர்பாலீர்ப்பு கொண்ட ஆண்களைக் குறிக்கும் “நம்பி” என்ற சொல்லோ அன்றாட வாழ்விலோ அச்சிலோ பயன்படுத்தப்படுவதில்லை. பாலீர்ப்பு குறித்த புரிதலையும் இந்தப் பதங்கள் குறுக்கிவிடுகின்றன. இந்தப் பதங்களின் அடிப்படையில் பார்த்தால், ஓர்பாலீர்ப்பு கொண்ட ஒரு திருநங்கை, திருநங்கை நங்கை என்றும், ஓர்பாலீர்ப்பு கொண்ட திருநம்பி ஒருவர், திருநம்பி நம்பி என்றும் அழைக்கப்படுவார்.தவிர நங்கை என்பது, பொதுவாகப் பெண்களைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நங்கை என்பது உறவுமுறைச் சொல்லாகவும் இருக்கிறது. இது குழப்பங்களை உருவாக்கலாம். Pansexuality என்ற பாலீர்ப்பு வகைமை, பலபாலீர்ப்பு என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது அனைத்துப்பாலீர்ப்பு என்று இருக்கவேண்டும்.
பால்புது சமூகத்தினரின் உணர்வு வெளிப்பாடுகள் பற்றிய சொற்களையும் நெறிப்படுத்தவேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தவு கூறுகிறது. இந்த உத்தரவின் பின்னால் உள்ள எண்ணத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்றாலும் “வெளிப்படுத்திக்கொள்ளுதல்” போன்ற பதங்கள், அவரவரின் சொந்த மொழிப் பயன்பாடுகளின் ஒரு அங்கமாக இருக்கின்றன. இவற்றை நெறிப்படுத்தும்போது, பால்புது மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு அரசு குறுக்கிடுவதாகவோ, பால்புது சமூக மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் பிற முறைகளை அது விலக்கிவிடுவதாகவோ அமையலாம். அந்த ஆபத்தையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஊடகங்களுக்கானது என்றாலும் ஒரு குழு அமைத்து பால்புது சமூக மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு இதை நடைமுறைப்படுத்துவது நல்ல வழிமுறையாக அமையும். பாலினம் மற்றும் பாலீர்ப்பு தொடர்பான பதங்களை உருவாக்குவதிலும் ஊடக வழிகாட்டி உருவாக்கத்திலும் பால்புது சமூக மக்கள் ஏற்கனவே எடுத்து வரும் முயற்சிகளுக்குத் தொழில்முறை மற்றும் நிதி உதவிகள் வழங்குவதன்மூலம் அரசு ஊக்கமளிக்கலாம். பாலினம் மற்றும் பாலீர்ப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் பல்கலைக்கழகங்களுக்கும் ஊக்கம் அளிக்கப்பட்டால், அது உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழ்பேசும் குயர் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் பெரிதும் பயனளிக்கும்.
கருத்துக் கேட்பதற்காகப் பலதரப்பட்ட தமிழ்பேசும் பால்புது மக்களிடம் தமிழ்நாடு அரசு கலந்து ஆலோசித்தால், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சிறப்பாக அமல்படுத்தப்படும், அது தமிழ்நாட்டில் உள்ள பால்புது மக்களுக்கும் பயனளிக்கும்.
இடம், பிறமொழி கல்விப்புலப் படைப்புகளை அணுகும் வாய்ப்பு, தலைமுறைசார் வயது, வளர்ந்த சூழல், மரபு ஆகியவற்றைப் பொறுத்து தமிழ் பால்புது மக்களிடமே பாலீர்ப்பு, பாலின வெளிப்பாடு, பாலின அடையாளம் மற்றும் பால் பண்பு குறித்த பதங்கள் (SOGIESC), பலதரப்பட்டவையாக இருக்கின்றன.
“பெயர்கள் மற்றும் அடையாளங்கள்” என்ற அணுகுமுறை, எல்லா பால்புது மக்களையும் உள்ளடக்கியதாக இல்லாமல் இருக்கிறது. ஆகவே, பாலீர்ப்பு, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு மற்றும் பால் பண்பு குறித்த பதங்கள் (SOGIESC) அணுகுமுறையை வைத்து பால்புது மக்களை அடையாளப்படுத்தும் முறையே சிறந்தது என்று தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
ஒவ்வொருவருக்கும் பாலீர்ப்பு, பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு மற்றும் பால் பண்பு அடிப்படையிலான பண்புகள் (SOGIESC) உண்டு. ஒருபாலீர்ப்பு கொண்ட பெண், ஆண், இருபாலீர்ப்பு கொண்டவர்கள், திருநர், ஊடுபால் கொண்ட நபர்கள், குயர், எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள், சிஸ் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் (பிறப்பின்போது கொடுக்கப்பட்ட பால் அடையாளத்தோடு இருப்பவர்கள்) என எல்லாருக்கும் இது பொருந்தக்கூடியது. பெண்ணால் ஈர்க்கப்படும் ஒரு ஆணுக்கும் ஆணால் ஈர்க்கப்படும் ஒரு பெண்ணுக்கும் பாலீர்ப்பு உண்டு. தவிர, எல்லாருக்கும் உள்ள பாலீர்ப்பு மற்றும் பாலின அடையாளங்களிலிருந்து பால்புது மக்களை ஒதுக்கிவிடாமல் இருக்கவேண்டும். உரிமைக் கண்ணோட்டத்தில் அது முக்கியமானது. எதிர்பாலீர்ப்பைக் கொண்டவர்களுக்கும் சிஸ் பாலினத்தவர்களுக்கும் மட்டுமே பயனளிக்கக் கூடிய சட்டங்கள் மற்றும் நல்வாழ்வுத் திட்டங்களை அடையாளம் காணவும் SOGIESC அணுகுமுறை உதவுகிறது. இதன்மூலம் அனைவருக்குமானவையாக அந்த சட்டதிட்டங்களை மாற்றியமைக்க முடியும். சமமான திட்டங்களை உருவாக்கும்போது அவற்றை எல்லாருக்குமானதாக மாற்றவும் SOGIESC அணுகுமுறை உதவும்.
SOGIESC அணுகுமுறையின் அடிப்படையில், தமிழ்பேசும் பால்புது மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் சில சொற்கள்.
Request for a consultation on Madras High Court’s direction to standardise LGBTQIA+ terminologies