QCCயின் ஒரு வருட பயணம்

தனிமனிதர்கள் எந்த அமைப்பையும் சாராமல் அரசியல் ரீதியாக செயல்படுவது என்பது பால்புதுமையினர் சமூகத்தில் ஏறக்குறைய சாத்தியமே இல்லை என்று இருந்த இடத்தில் தொடங்கப்பட்ட குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் பதிப்பகத்திற்கு (QCC) ஒரு வயதாகிறது.

தொடங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே ‘கருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தோடு இணைந்து ‘விடுபட்டவை’ எனும் புத்தகம் வெளியிட்டதோடு இந்தியாவின் முதல் குயர் இலக்கியவிழாவையும் கடந்த ஜூலை மாதம் ஒரு முழுநாள் நிகழ்வாக QCC நடத்தி இருக்கிறது. ‘திரை’ எனும் பெயரில் திரைப்படங்கள் திரையிடும் முயற்சியைத் தொடங்கி ‘ஹேப்பி பர்த்டே மாஷா’ எனும் குறும்படத்தையும் திரையிட்டிருக்கிறது. வேறு வேலையையும் பார்த்துக்கொண்டே மிஞ்சிய நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைத்ததன் காரணமாகவும், உங்களின் ஆதரவு காரணமாகவுமே இது சாத்தியமாயிற்று. இலக்கிய விழா நடத்திய பணத்தில் கிட்டத்தட்ட 75 சதவீதம் நிதியாக கிடைத்தது. அதைத்தவிர இந்த ஒரு வருடமாக நாங்கள் செய்யும் மற்றச் செலவுகள் அனைத்தும் எங்களது தினசரி வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்தும், நண்பர்களின் உதவியிலிருந்துமே செய்யப்படுகிறது.

இபிகோ பிரிவு 377 மற்றும் எச்ஐவி/எயிட்ஸ்க்கு எதிதாக மட்டுமே வேலை செய்யும் அமைப்புகளுக்கிடையே அதைத்தவிர எதைப் பேசவும் வாய்ப்பில்லாத நிலையில் வெளிப்படையான இடதுசாரி நிலைப்பாட்டோடு இயங்கி வருகிறோம் என்பதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். பெரியாரியம் மற்றும் அம்பேத்கரியத்தின் துணையோடு பால்புதுமையினரின் உரிமைக்கான போராட்டங்களையும், பால்புதுமையினருக்குள்ளே நிலவும் சாதிய, வர்க்க, பாலின வேறுபாட்டினைக் களையும் போராட்டங்களையும் புதிய, வீரியம்மிக்க, இன்னும் பல பால்புதுமையினரின் இலக்கியத்தை வெளிக்கொண்டுவரச் செய்வதன் மூலமாக பல வருடங்களுக்கு தொடருவோம் எனவும் நம்புகிறோம். அதன் ஒரு தொடக்கமாகவே சமூகநீதிக்கான பால்புதுமையினர் கொடியை குயர் இலக்கிய விழாவில் அறிமுகம் செய்தோம். இளம் குயர் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துகிறோம்.

ஒரு வருட மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த சமயத்தில், விடுபட்டவை புத்தகத்தை எந்தத் தயக்கமும் இல்லாமல் பிரசுரித்து உதவிய கருப்புப்பிரதிகள் பதிப்பகத்திற்கு நன்றி.

விடுபட்டவை புத்தக வாசிப்புகளுக்கும், இலக்கியவிழாவுக்கும் வந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி.

இலக்கிய விழாவிற்கும், குறும்படத் திரையிடலுக்கும் பண உதவி செய்த, புகைப்படங்கள் எடுத்து உதவிய, காணொளிகள் எடுத்த, விழாவில் உதவி செய்த, விழாவைப் பற்றி வெளியில் பேசிய, எழுதிய, நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

தேவைகள் ஏற்பட்டபோது சரியான முறையில் வழிகாட்டிக் கொண்டும், தோள்கொடுத்துக் கொண்டும் இருக்கும் நண்பர்களுக்கு நன்றி.

QCC பற்றியும், எங்களது அடுத்தடுத்த செயல்பாடுகள் பற்றியும் தொடர்ந்து எழுதிவரும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.

அடுத்தடுத்த புத்தகங்களுக்கும், மிகப்பெரிய முயற்சியான சிறுவர் இலக்கியத்துக்கும் படைப்புகள் அனுப்பிய, அனுப்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும், படங்கள் வரையப் போகிற ஓவியர்களுக்கும் நன்றி.

~*~*~