தமிழ் பால்புது இலக்கிய தொகுப்பு – பகுதி 2

சமூகசெயற்பாட்டளாரான கல்கியின் முதல் கவிதைத்தொகுப்பு “குறி அறுத்தேன்”. திருநங்கைகள் சமூகம் குறித்த புரிதலையும், உணர்ச்சிகளை சொல்லும் கல்கியின் இக்கவிதைத்தொகுப்பு விகடன் பிரசுரத்தால் 2015- ஆண்டு புத்தகத்திருவிழாவில் வெளியிடப்பட்டது. கல்கி ஒரு திரைக்கலைஞர் மற்றும் ‘சகோதரி’ எனும் என்ஜிஓவை நடத்திவருகிறார்.


அந்தரக்கன்னி (2013) எனும் இக்கவிதைத்தொகுப்பு லெஸ்பியன் பெண்கள் மற்றும் அவர்களது காதலைக்குறித்து தமிழில் வெளியான முதல் தொகுப்பு. இக்கவிதைத்தொகுப்பை எழுதியவர் திரைப்பட இயக்குநரும், கவிஞருமான லீனா மணிமேகலை. தமிழ் நாட்டுப்பாடல்களின் வழியே, அவரது கவிதைகள் ஓர்பாலீர்ப்பு கொண்ட பெண்களைப்பேசுகின்றன. லீனாவின் கவிதைகளோடு புஸ்ஸி ரியாட் (Pussy Riot) – ரஷ்யாவின் பெமினிஸ்ட் பேண்ட பற்றிய “பாலாக்லேவ்” கவிதைகளும், ஜூன் ஜோர்டனின் (June Jordon) “ஐ அம் நாட் ராங்” -ம் இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.


பால்புதுமையினரின் அடையாளங்கள் பற்றிய வெள்ளை மொழி, அ. ரேவதி அவர்கள் எழுதிய தன்வரலாற்று புத்தகம். திருநங்கையான இவர், தனது பாலமைவு அடையாளம் காரணமாக தான் சந்தித்த சிக்கல்களையும், தம்மைப் போன்றோர் சந்திக்கும் சிக்கல்களையும், வாழ்வியல் சமூக சூழலியல் விபரிப்புகளோடு பதிவுசெய்துள்ளார். இந்த புத்தகம் ஆங்கிலத்தில் The Truth about Me என்று வ. கீதாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கன்னடத்திலும் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பாலியல் சமத்துவத்தை நோக்கிய செயலாக, பெண்ணிய உரையாடலின் அடுத்த கட்டமாக” இந்த புத்த்கம் கருதத்தக்கது என்று காலச்சுவடு மதிப்புரையில் கூறப்பட்டுள்ளது (காலச்சுவடு, இதழ் 149, பக்கம் 71, வருடம் 2015).


மூன்றாம் பாலின் முகம் (2008) எனும் நாவல் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான ப்ரியாபாபுவால் எழுதப்பட்டது. திருநங்கை ஒருவரால் தமிழில் எழுதப்பட்ட முதல்நாவலும் இதுவே ஆகும். நடுத்தரவர்க்கக்குடும்பத்தைச்சார்ந்த பாரதி எனும் திருநங்கை ஒருவரின் வாழ்வை இந்நாவல் பேசுகிறது. பாதுகாப்பான குடும்பசூழ்நிலையில் வளரும் பாரதி தனது பாலின அடையாளத்தை அறிந்துகொண்டிருக்கிறாள்.

தனிமையில் இருக்கும் அவள் அப்பகுதியில் வசிக்கும் திருநங்கை சமூகத்துடன் மெதுவாகத்தன்னை இணைத்துக்கொள்கிறாள். திருநங்கைகளின் கடினமான வாழ்க்கையையும், ஒதுக்குதலையும் தனது சுய அனுபவங்கள் ஊடாகவும், தன்னைப்போன்ற விளிம்புநிலையில் இருக்கும் நண்பர்கள் ஊடாகவும் உணர்கிறாள். ஒரு சமூகசேவகர் உதவியுடன் பாரதியின் பாலின அடையாளத்தைப்புரிந்துகொள்ளும் அவளது அம்மா அவள் படிப்பை முடிக்க உதவி செய்வதோடு, பால்மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பாரதியை மொத்த குடும்பமும் கைவிடும்போதும் ஆதரவாக இருக்கிறார். 

திருநங்கைகளைக்குறிக்க இந்நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பால்புதுமையினர் சமூகத்தால். இறுதியில் திருநங்கைகளுக்கு ஆதரவான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்கள் முன்னேற்றத்திற்கு பாரதி வழிவகை செய்வதொடு இந்நாவல் முடிவடைகிறது.

பதிப்பகத்துறையில் பால்புதுமையினர் எனும் தலைப்பில் ப்ரியாபாபுவின் உரையைக்கேட்க…


திருநங்கைகள் குறித்த புரிதலை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இதுவரை தமிழில் வெளியான திருநங்கைகள் குறித்த சிறுகதைகளில் இருந்து ஏழு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து அரங்கக்கலைஞரும், கவிஞருமான லிவிங் ஸ்மைல் வித்யா “மெல்ல விலகும் பனித்திரை” என்னும் பெயரில் தொகுத்திருக்கிறார். 

எழுத்தாளார்கள் கி.ராஜநாராயணன், இரா.நடராசன், பாவண்ணன், இலட்சுமணப்பெருமாள், பாரதி தம்பி, சுதா, திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் மற்றும் கவின்மலர் இந்த ஏழு கதைகளையும் எழுதியுள்ளனர்.

இப்புத்தகம் பாரதி புத்தகாலயத்தால் 2013-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தில் இருக்கும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் முன்னுரை குயர் இலக்கியவிழா சென்னை 2018-ல் சிறப்புரையாக வாசிக்கப்பட்டது.