LGBTQIA+ நபர்களின் உரிமைகள் குறித்து குழப்பமான, முரணான அறிக்கை வெளியிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு திறந்த கடிதம்

தமிழ்நாட்டில் திருநர்களுக்குத் தனி கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிப்ரவரி 17, 2025 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவ ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இவ்வறிக்கை, எந்தவொரு சூழலைக் குறித்த விளக்கமின்றி,  தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமூக வலைத்தளப் பக்கங்கள் (X/Twitter | Facebook) வெளியிடப்பட்டிருக்கிறது. கட்சியின் வலைத்தளத்திலும் இதே அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

தனது 2024 தேர்தல் அறிக்கையில், LGBTQIA+ நபர்கள் தொடர்பான பின்வரும் வாக்குறுதிகளை வழங்கியது சிபிஐ(எம்):

  • சிறப்பு திருமணச் சட்டம், 1954 போலவே, ஒரு பாலின தம்பதிகளுக்கு ‘சிவில் யூனியன்’ அல்லது ‘ஒரே பால் துணைவர்கள்’ – என்ற ஏதோ ஒரு வகையில் திருமணத்தைப் போன்ற சட்ட அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும். இதன்மூலமாக, பரம்பரை சொத்து, விவாகரத்து ஏற்பட்டால் ஜீவனாம்சம் போன்றவற்றிற்காக, ஒருவரின் துணைவரை சார்ந்திருப்பவராகப் (dependent) பட்டியலிடலாம்.
  • LGBTQ+ நபர்களை உள்ளடக்கிய விரிவான ஒரு பாகுபாடு எதிர்ப்பு மசோதா (anti-discriminatory bill) கொண்டுவரப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு; வேலைவாய்ப்பில் கிடைமட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்தல்.
  • LGBTQ+ நபர்களுக்கு எதிரான குற்றங்கள், LGBTQ+ அல்லாத நபர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக நடத்தப்படும் என்பதை உறுதி செய்தல்.
  • கல்வி நிலையங்களில் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாத மற்றும் LGBTQ+ மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; பாலின ஈர்ப்பு மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையில் ராகிங் செய்வதை தடுப்பதற்கு UGC ராகிங் எதிர்ப்பு கொள்கை திருத்தத்தை (2016) அமல்படுத்துதல்; திருநர், ஊடுபால் மற்றும் பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாத மாணவர்களுக்குப் பாதுகாப்பான கழிவறைகளை உறுதி செய்தல்.
  • LGBTQI நபர்களின் பால் மாற்று அறுவை சிகிச்சைகள் அவர்களின் விபரமறிந்த ஒப்புதல் இல்லாமல் செய்யக்கூடாது.

நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகங்களுக்கு எதிராக நிலவிவரும் நீண்டகால பாகுபாடு மற்றும் ஆழமான இழிவை இவை சரிசெய்யும் என்றும், பால்புதுமையினருக்கான சமமான முற்போக்கான ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இந்த வாக்குறுதிகளை பால்புதுமையினர் வரவேற்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் சிபிஐ(எம்) கட்சியின் தமிழ்நாடு பிரிவு மாநிலத்தில் திருநர்களுக்கு ஒரு தனி கொள்கை வேண்டும் என்று ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த குழப்பமான, முரணான அறிக்கை, அறியாமை மற்றும் ஒருபாலீர்ப்பாளர்களின் மீதான வெறுப்பு என்ற இடத்தில் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டைச் சார்ந்த LGBTQIA+ சமூக மக்களான நாங்கள், சிபிஐ(எம்) கட்சியிடமிருந்து பின்வரும் விளக்கங்களைக் கோருகிறோம்:

  • தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும் முற்போக்கான கட்சிகளை நம்பி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள LGBTQIA+ நபர்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த திடீர் அறிக்கையின் காரணம் என்ன?
  • இந்த அறிக்கை எதை அடிப்படையாக வைத்து உருவானது?  தமிழ்நாட்டில் உள்ள LGBTQIA+ சமூக மக்களிடமிருந்து எத்தனை ஆலோசனைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைப் பெற்று தமிழக சிபிஐ(எம்) இந்த முடிவுக்கு வந்தது?
    • கட்சியின் அறிக்கையில், ‘திருநர் அமைப்புகள்’ கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் தொண்டு நிறுவனங்கள், மற்றும் சக திருநங்கைகள் மீது கொடுங்கோன்மை செலுத்தும் ஜமாத் போன்ற குழுக்கள் பாகமாக இல்லாத திருநர்களும் உள்ளனரா?
  • திருநர்களுக்கான தனிக் கொள்கையை நியாயப்படுத்துவதற்கு, அவர்கள் எதிர்கொண்ட “வரலாற்று ரீதியிலான ஒடுக்குமுறை” பற்றி சிபிஐ(எம்) கட்சியின் அறிக்கை பேசுகிறது. இது பல கேள்விகளை எழுப்புகிறது:
    • LGBTQIA+ சமூகத்திலுள்ள ஒருபாலீர்ப்புடைய, இருபாலீர்ப்புடைய, அபாலீர்ப்புடைய நபர்கள், ஊடுபால் நபர்கள், பால்புது நபர்கள் மற்றும் பிறர் வரலாற்று ரீதியிலான ஒடுக்குமுறைக்குட்படுத்தப்படவில்லை என்று நம்புகிறதா சிபிஐ(எம்)? அப்படி என்றால், அதற்கு சான்று உள்ளதா?
  • திருநர் என்று சொல்லும்போது, திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகியோர் இதற்குள் அடங்குவரா? இல்லை, இது குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்குட்பட்ட  திருநங்கைகளை மட்டும் குறிக்கிறதா?
  • தமிழ்நாடு திருநங்கைகள் வாரியத்தின் பெயரை, அனைத்து திருநர்களையும் உள்ளடக்கிய ‘தமிழ்நாடு திருநர்கள் வாரியம்’ என்று மாற்ற வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையைக் குறித்து சிபிஐ(எம்)-க்கு தெரியுமா? இதை, அனைத்து திருநர்கள் மற்றும் ஊடுபால் நபர்களை உள்ளடக்கியதாகக் கூறிக்கொள்ளும் சில தொண்டு நிறுவனங்கள்,  மற்றும் சக திருநங்கைகள் மீது கொடுங்கோன்மை செலுத்தும் ஜமாத் போன்ற குழுக்கள் தடுப்பது கட்சிக்குத் தெரியுமா?
  • தேசிய மற்றும் மாநில அளவில் LGBTQIA+ சமூகங்களுடனான கட்சியின் செயல்பாடுகள் என்ன? கட்சியின் மற்ற பிரிவுகளும் இதைப் போன்ற அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறதா?
  • தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு, இந்த அறிக்கைக்கு முன்பு, LGBTQIA+ நபர்கள் சார்ந்த ஏதேனும் பிரச்சனை பற்றி இந்தக் கட்சி பேசி இருக்கிறதா?
  • சுரண்டல், ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்குச் சமமான ஜமாத் போன்ற நடைமுறைகள் குறித்து கட்சியின் நிலைப்பாடு என்ன?
  • தமிழ்நாடு சிபிஐ(எம்) LGBTQIA+ சமூகங்களுடன் இணைந்து இதுவரை செய்த பணிகள் என்னென்ன?

தொன்மையான சமூகங்கள் மற்றும் அடையாளங்களுக்கு சமகால புரிதல்களையும் பெயர்களையும் கொடுப்பது எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும். தொன்மையான மக்களின் ஈர்ப்புகள், நடத்தைகள், அடையாளங்கள் மற்றும் வெளிப்பாடுகள் ஆகியவற்றை இன்றைய கண்ணோட்டத்தினுள் அடக்கமுடியாத.

எதிர்ப்பாலீர்ப்பு, ஒருபாலீர்ப்பு ஆகிய சொற்களும், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பாலியல் ரீதியிலான நடத்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை வேறுபடுத்தும் முயற்சிகளும் தொழிற்புரட்சி மற்றும் அது உருவாக்கிய முதலாளித்துவத்தின் விளைவுகளாகும். கடந்த காலத்தில், ஒரே பாலின மற்றும் பால் ஈர்ப்புகளைக் கொண்ட நபர்கள் ‘gender deviants’ ஆகப் பார்க்கப்பட்டு, திருநங்கைகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களுக்கு எதிராக மட்டுமே நடக்கிறது என்று கூறும் அதே ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர்.

இந்த திறந்த கடிதத்தை எழுதும் தமிழ்நாட்டின் பால்புதுமை மற்றும் திருநர்களான நாங்கள், அனைத்து பால்புதுமையினரும் சந்தித்த வரலாற்று ஒடுக்குமுறைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் அறிந்தவர்களாவோம். LGBTQIA+ நபர்கள், களத்தில் பணிபுரியும் ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்ட LGBTQIA+ நபர்களுக்கான ஒருங்கிணைந்த கொள்கை வரைவை நாங்கள் வாசித்திருக்கிறோம். இந்தக் கொள்கையை வகுக்க, அனைத்துத் தரப்பு LGBTQIA+ நபர்கள், அவர்களது குடும்பங்கள், ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஆகியோருடன், அரசாங்கம் அமைத்த இந்த குழு விரிவான ஆலோசனைகளை நடத்தி, அவர்களின் உள்ளீடுகளைப் பெற்றது. இந்த கொள்கை, தமிழக அரசின் உத்தரவின் பேரில் தயாரிக்கப்பட்டு, ஏப்ரல் 2024இல் தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த கொள்கை வரைவு, திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஊடுபால் நபர்களுக்கு மட்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டினை வழங்குகிறது. மேலும், திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஊடுபால் நபர்களுக்கு மட்டும் நிதி உதவியினையும் வழங்க வழிவகை செய்கிறது. அதுமட்டுமில்லாமல், அனைத்து LGBTQIA+ நபர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பலதரப்பட்ட பாதுகாப்புகளையும் இந்த வரைவுக் கொள்கை வழங்குகிறது.

இந்த வரைவுக் கொள்கையை சிபிஐ(எம்) தமிழ்நாடு பிரிவு படித்திருக்குமாயின், வரலாறு முழுக்க ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு ஒருமித்த கொள்கையின் அவசியத்தை உணர்ந்திருக்கும். அதுமட்டுமில்லாமல், LGBTQIA+ சமூகத்தினுள் உள்ள அனைவருக்கும் அவசியமான பாதுகாப்பு, மற்றும் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் ஊடுபால் நபர்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் நிதி உதவிகளும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பது சிபிஐ(எம்)-க்குப் புரிந்திருக்கும்.

கொள்கை ஆவணம் என்பது அரசுக்கு வழிகாட்டி, மற்றும் மக்களுக்கு அளிக்கும் உத்திரவாதம் ஆகும். தமிழக அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான ஒருங்கிணைந்த கொள்கை உருவாக்கி உள்ளது. ஒரே கொள்கைகக்குட்படுத்தபட்ட எல்லா சமூகங்களுக்கு ஒரே பிரச்சனை என்றோ, அனைத்து சமூகங்களும் எல்லா பிரச்சனைகளை எதிர்கொள்ளும் என்றோ யாரும் நினைப்பதில்லை. 

SOGIESC சிறுபான்மையினருக்கு இரு தனி கொள்கை என்று வலியுறுத்துவது பிரிவினைவாதம் என்ற புரிதல் CPI(M) தமிழ்நாடு அங்கத்துக்கு இல்லை என்றால், அது வேண்டுமென்றே அக்கறையின்மை மற்றும் பாலபுதுமையினர் மீதான வெறுப்பு  என்று மட்டுமே பார்க்க முடியும்.

கொடுங்கோன்மையின் அடிப்படையில் இயங்கி வரும் சில குழுக்களின் குரல்களை தமிழ்நாடு மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி எதிரொலிக்கக் கூடாதென்றும், LGBTQIA+ சமூகங்களுடன் கலந்துரையாட வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.