கிரீஷ்
அவனது அப்பாவும் அம்மாவும் அந்த ஊருக்கு புதியதாக குடிவரும்போது பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டைத் தாண்டி ஒரு கால்வாய் ஓடியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறான். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு கால்வாய் வழியே வழி சொல்வதற்கு எளிதாக இருந்திருக்கிறது. நாளுக்கு மூன்று முறை வரும் பேருந்தில் இறங்கி கால்வாய் கரையில் நடந்து வீட்டுக்கு வரலாம் என்பது அவனுக்கு ஏதோ கவிதையைப் போல் தோன்றி இருக்கிறது.
அவனுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அம்மா சொன்ன இடத்தில் ஒரு பெரிய சாக்கடை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சாக்கடையின் இரண்டு பக்கமும் வீடுகளும் ஒரு ஆள் கைவீசி நடக்க ஒரு பாதையுமே உண்டு. எப்போதாவது விடிகாலையில் ஊருக்கு எங்காவது செல்லும்போது தான் அந்த சாக்கடையின் ஓரமாக அவன் வீட்டிலுள்ளவர்களோடு வரிசையாக நடந்து செல்லும் வாய்ப்பு அமையும். எதிரிலிருந்து சூரியன் உதிக்கும்போது கும்பலாக அந்த ஓடையில் வாத்துகள் நீந்திக் கொண்டிருக்கும். ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களிடம் காலையிலேயே சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம் என்று சொல்லவேண்டும், ஏதாவது சாப்பிடத் தந்தால் வேகமாக வாங்கிச் சாப்பிடக் கூடாது, எதைப் பார்த்தும் வாயைப் பிளக்கக் கூடாது, எப்படி நடந்து கொள்ள வேண்டும் அவர்களிடமென்று அம்மா அறிவுரை சொல்லும்போதெல்லாம் அவன் எங்காவது தொளியில் வாத்துமுட்டை கிடக்குமா என சாக்கடையையே கூர்ந்து பார்த்தபடி நடப்பான். வளவில் நெல்லியம்மாள் அத்தை மூலவியாதிக்கு வாத்துமுட்டை வறுத்து சாப்பிடும்போது அம்மாவுக்கு தெரியாமல் திருட்டுத் தனமாக அவனுக்கும் கொடுத்திருக்கிறாள். நாற்றம் அதிகமாக இருந்தாலும் சுவை அருமையாக இருக்கும். இரண்டொரு முறை வாத்துமுட்டைகளைக் கண்டுபிடித்திருக்கிறான். எடுத்து நெல்லியம்மாள் அத்தையிடம் கொடுக்கலாம் எனத் தோன்றும். ஆனால் எடுக்க தைரியம் வந்ததில்லை. அவன் வளர வளர சாக்கடை சுருங்கிக் கொண்டே வந்தது. இருபக்கமும் உள்ள வீடுகளும் நெருங்கிக்கொண்டே வந்தன.
அவனுக்கு பதின்மூன்று வயது இருக்கும்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டான். படித்த பள்ளியில் எட்டாம் வகுப்புக்கு மேல் இல்லாததால் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது. பேருந்து ஏறி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை நினைக்கும்போதே அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. அப்போது சர்க்குலர் பஸ்சும் பத்து நிமிடத்துக்கு ஒன்று என வந்து கொண்டிருந்தது. சாக்கடை வழியே நடந்து பேருந்து நிறுத்தத்துக்கு செல்லலாம். அதுவே பழைய பள்ளியை மறந்து புதிய பள்ளியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தது. மற்றபடிக்கு தினமும் சாக்பீஸால் தலையில் அடிக்கும், கழுத்தினை பின் டெஸ்கில் சாய்த்து பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து பின் ஓங்கி அறையும் நண்பர்கள் நிறைந்த பழைய பள்ளியில் அவன் நினைத்து நினைத்து ஏங்க எதுவும் இருக்கவில்லை. மழை இரண்டு துளி போட்ட உடனே வகுப்பு வாசலில் திரும்பிப் பார்த்தால் அவன் அம்மா குடையோடு நிற்பாள், இனி அது நடக்காது என்பதைத் தவிர.
அவன் சாக்கடை வழியே நடக்கும்போது புதிது புதிதாக நிறைய கண்டுபிடித்தான், அவனுக்கு அந்த பாதையே அவ்வளவு ஈர்ப்பாக இருந்தது. ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அவனுக்காக டீயுடன் கேக் துண்டு ஒன்றும் இருந்தது. அவன் வீட்டில் சாயங்கால டீயுடன் மிக்சரோ அரசமரத்தடியில் அவன் போய் வாங்கி வரும் பருப்புவடையோ தான் இருக்கும். கேக்கைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியமாகிப் போனது. அம்மாவிடம் கேட்டால் எதுவுமே சொல்லவில்லை. வளவில் இருக்கும் எல்லாருக்கும் காட்டி சாப்பிடலாம் என்று நினைத்து வெளியே எட்டிப்பார்த்தான். சவுமியைக் கட்டித்தான் போட்டிருந்தார்கள். ஏற்கனவே சவுமி அன்பாக கொஞ்ச வந்து இவன் பயந்து ஓடி நடையில் கால்வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதால் சவுமியோடு வைத்துக் கொள்வதில்லை. மடக்கு கசேரையை எடுத்து வைத்து பக்கத்தில் ஸ்டூலைப் போட்டு அதில் டீயையும் கேக்கையும் வைத்து அமர்ந்து சுற்றிலும் பெருமையோடு பார்த்தான். வளவில் உள்ள ஆறு வீடுகளில் உள்ளவர்களும் வெளியில் இருந்து கேக்கும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உற்றுப் பார்த்ததில் சவுமிக்கு முன்பாக மண்சட்டியிலும் கேக் இருந்தது.
அக்காவுடன் படித்த ஜெனிட்டா ஆனந்தி வாதையம்மன் கோவிலுக்கு பின்னாலிருக்கும் போலீஸ் குவார்டர்ஸில் இருந்தாள். அக்காவுக்கு உடம்பு சரியில்லாமல் பள்ளிக்கு போகாத ஒருநாளில் அவன் நோட்டு வாங்க ஜெனிட்டா ஆனந்தியின் வீட்டுக்கு சென்றான். அங்கு அவர்கள் குடும்பமாக சிட் அவுட்டில் சிலுவை ஏசப்பாவின் முன் உட்கார்ந்து கேக்கும் டீயும் சாப்பிடுவதை பார்த்தான். அவனுடன் படித்த கார்மல் நகர் மாணவர்களும் கிறுஸ்மஸ் கேக் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறார்கள். ஏசப்பா சாமியைக் கும்பிடுபவர்கள் மட்டுமே கேக் சாப்பிடுவார்கள் என்று நினைத்திருந்த அவனுக்கு ஒரு நாள் தனது வளவே கேக் சாப்பிடுகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் அவர்கள் யாருக்கும் ஜெனிட்டா ஆனந்தியைப் போல் ஸ்டைலாக கேக் சாப்பிடத் தெரியவில்லை. சோறு பிசைவதைப் போல் பிசைந்து வைத்திருந்தார்கள். ஜெனிட்டா ஆனந்தி கேக்கை ஒரு ஓரமாகப் பிடித்து மற்ற பக்கத்தை வாயால் கடித்தது பகவதி பெருமாள் மாமா வாளிப்பட்டறையில் தகரம் வெட்டி விழுவதைப் போல் இருந்தது. அவனைப் பார்க்க வைத்து முழுகேக்கையும் சாப்பிட்டு முடித்து தான் அவள் நோட்டை எடுத்துக் கொடுத்தாள். அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறிக்கொண்டிருந்தது. திரும்பி வரும்வழியில் வாதையம்மன் கோவிலில் ஜெனிட்டா ஆனந்திக்கு பேதியாக வேண்டுமென்று வேண்ட நினைத்தான். நாக்கை நீட்டி முகத்தில் மஞ்சணை அப்பிக்கொண்டு நிற்கும் வாதையம்மனைப் பார்த்தால் அவனுக்கு பேதியாகிவிடும் வாய்ப்பிருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டான்.
டொப்பி அரிசி சோற்றைப் போல் பிசைந்து சாப்பிடக் கூடாது, ஸ்டைலாக ஜெனிட்டா ஆனந்தியைப் போல் சாப்பிட வேண்டும் என நினைத்த அவன் முதல் கடியைக் கடித்தான். கேக் மொத்தமாக உதிர்ந்து அவன் சட்டையில் விழுந்தது. பக்கத்து வீட்டு நெல்லியம்மாள் அத்தை விழுந்து விழுந்து சிரித்தாள். அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
“என்னலே மொறைக்க? என்னவோ இவனுக்கு மட்டும்தான் கேக்கு திங்க தெரியும், நாங்க எல்லாம் கேக்கையே கண்ணுல பாக்காதவோன்னு நெனப்பு. நல்லா நீட்டிநிமுந்து உக்காந்து ஸ்டைலா திங்காரு. லேய், அது கேக்கு இல்ல, கேக்கு எல்லாம் செய்துட்டு அதை வட்டமா சதுரமா வெட்டுவானாம், அதுல உழுக பொடி தான் இது. உங்கம்ம தான் அதுல பால ஊத்தி பெசஞ்சு கட்டியா பிடிச்சு வச்சுருக்கா. நீதான் ஐனஸு குஞ்சுல்லா. பொடி எல்லாம் திம்பியா”
அவனுக்கு கோபமாக வந்தது. சட்டையில் ஒட்டி இருந்த கேக்கைத் தட்டிவிட்டான்.
“எதுக்கு மக்கா கீழ போடுக. சாப்பாட்டை வேஸ்டாக்க கூடாது. சவுமியை அவுத்து விடவா? அது நக்கிட்டு போவும்”
சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தாள். அவனுக்கு அம்மா மேல் கோபமாக வந்தது. வேகமாக உள்ளே போனான்.
“அவளுக்கு வேற வேலை இல்ல, இப்டிதான் ஏதாது சொல்லிட்டு இருப்பா, ஒருநாள் நான் நல்ல கொடை குடுக்க போறேன், அப்போ தெரியும் அவளுக்கு” என்று சொல்லிவிட்டு அம்மா ஒரு பிளேட்டில் கேக் பொடியை கொண்டு வைத்தாள். பொடியாக இருந்தாலும் நல்ல டேஸ்டாக இருந்தது. ஆனாலும் எப்படி இவ்வளவு கேக்?
பிறகு தான் தெரிந்தது. ஏதோ வெளியூரில் இருந்து நான்கு பேர் வந்து கேக் பண்ணும் கடை புதியதாக தொடங்கி இருக்கிறார்கள். சாக்கடைக்கு வலதுபுறம் எல்சி நர்ஸ் வீடை வாடகைக்கு எடுத்திருகிறார்கள். முதல் நாள் என்றதால் எல்லாருக்கும் மீந்த கேக்குகளைக் கொடுத்திருக்கிறார்கள். அப்படி தான் போய் வந்தாலும் எப்படி பார்க்காமல் விட்டோம் என அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
மாசானம் அண்ணா பால் சொசைட்டியில் ஒரு ஓரமாக முட்டைக் கடையும் இருந்தது. அம்மா வாராவாரம் அவள் வளர்க்கும் கோழியின் முட்டை கொண்டு அங்கு விற்கப்போவாள். அன்றும் கிளம்பிக் கொண்டிருந்தாள். அதற்கும் சாக்கடையைத் தாண்டிதான் போக வேண்டும்.
“இன்னைக்கு எனக்கு படிக்க ஒண்ணுமில்ல. நான் போய் முட்டை குடுத்துட்டு வரவா?”
“போன்னு சொன்னாலே போமாட்ட. இன்னைக்கு என்ன புதுசா?”
அவன் பேசாமல் நின்றான்.
“வேண்டாம், நீ ஆட்டிக்கிட்டு ஆட்டிக்கிட்டு போவ, சொசைட்டிக்கு போவும்போது எல்லா முட்டையும் ஒடஞ்சு ஊத்தி தோடுதான் இருக்கும், நானே போறேன்”
“இல்லல்ல, நான் உடைக்காம கொண்டு போவேன்”
பிடுங்காத குறையாக வாங்கிவிட்டு சென்றான். எல்சி நர்சுக்கு மூன்று வீடுகள் உள்ளன. ரொம்பநாளாகப் பூட்டி கிடந்த நடுவீட்டுக்கு தான் அவர்கள் வந்திருக்க வேண்டும்.
அவன் கூர்ந்து கவனித்தபடி நடந்தான். அந்த வீட்டிலிருந்து கேக் வேகவைக்கும் வாசனை வந்து கொண்டிருந்தது. எதையோ மறந்து வைத்தது போல் திரும்ப நடந்தான். உள்ளே ஆள் நடமாட்டம் தெரிந்தது. மறுபடியும் தாண்டிப்போனான். திரும்ப வரும்போதும் பார்த்தான். கதவு அடைத்திருந்தது.
அடுத்தநாள் தங்கவேல் மாமா கடைக்கு சாம்பார் மலக்கறி வாங்க போகும்போது தான் அந்த பையனைப் பார்த்தான். அவனை விட இரண்டு வயது பெரியவனாக இருப்பான். அவனை சுற்றி நின்று கடையில் இருந்த எல்லாரும் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவன் திருதிருவென முழித்தான். அவனது கண்கள் பூனையின் கண்களைப் போல பழுப்புநிறத்தில் இருந்தது. அவனுக்கு மற்றவர்கள் பேசுவது புரியவில்லை போல. கேள்வி கேட்டு எல்லாரும் ஓய்ந்த சமயத்தில் அந்தப் பையன் இவனைப் பார்த்தான். இருவரும் சிரித்துக் கொண்டார்கள். மலக்கறி வாங்கி விட்டு வந்து சிறிது தூரம் வந்து திரும்பிப் பார்த்தான். அந்த பையன் இவனையேப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக்கு வந்ததும் அவனையே நினைத்துக் கொண்டிருந்தான். நெல்லியம்மாள் அத்தையை அவள் இல்லாதபோது வளவில் இருக்கும் அனைவரும் ரேஷன் கடை என்றே சொல்லுவார்கள். இருக்கும்போது சொல்ல முடியாது, வாயைக் கிழித்து விடுவாள். அவளுக்கு ஊரிலிருக்கும் அத்தனை பேரைப் பற்றிய தகவலும் தெரியும். அதை மற்றவர்களுக்கு சொல்லி அவர்கள் முகத்தில் தெரியும் ஆச்சரியத்தைப் பார்ப்பதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். அவளுக்கு வெற்றிலை இடித்துக் கொடுத்துக்கொண்டே விசாரித்தபோது கேக் கடைக்காரர்கள் வட இந்தியர்கள் எனத் தெரிந்தது. மொழிப்பிரச்சினையால் அந்தப் பையனிடம் பேசவே முடியாது என்று தோன்றியது. அவன் பெயரையாவது கேட்கவேண்டும் என நினைத்தான், ஆனால் எப்படி கேட்பது என்று தெரியவில்லை. அதற்கு பதில் அவனே ஒரு பெயரை வைத்து விட முடிவு செய்தான். என்ன பெயர் வைக்கலாம் என சுற்றிப் பார்த்தான். சின்னாளம்பட்டியிலிருந்து துணி விற்க வரும் மாமாவிடம் இருந்து வாங்கிய பெங்காலி காட்டன் புடவையைத் துவைத்து அம்மா அசையில் காயப்போட்டிருந்தாள். ஏனோ அந்த பையனுக்கு பெங்காலி காட்டன் எனப் பெயர் வைத்தான். சொல்லிப்பார்க்கும் போது அவனுக்கே சிரிப்பாக இருந்தது.
பெங்காலி காட்டனை பின்னர் பலமுறை பார்த்திருக்கிறான். வெளியே குளித்துக் கொண்டு நிற்பான். சொசைட்டியில் பால் வாங்க வருவான். கடையில் எல்லாரது கிண்டலுக்கும் நடுவே அமைதியாக நிற்பான். அப்போதெல்லாம் இருவரும் பார்த்துக் கொள்வார்களே தவிர எதுவும் பேசுவதில்லை.
முதல்நாள் இலவசமாகக் கொடுத்த மீந்த கேக்குகளை இப்போது எடை போட்டு விற்கத் தொடங்கி இருந்தார்கள். சில சமயம் வளவில் இருந்தவர்கள் மொத்தமாக அரை கிலோ வாங்கி பங்கு வைத்துக் கொண்டார்கள். அவனுக்கு உள்ளே சென்று எப்படி கேக் செய்வார்கள் எனப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.
எப்போதாவது வளவில் கேக் வாங்க திட்டமிட்டால் அவன் போய் வாங்கி வருவதாகச் சொல்வான். “நீ சின்ன பையன், பாம்பே காரனுங்க ஏமாத்துவானுங்க” என வளவில் யாருமே அவனை அனுப்புவதில்லை.
கேட்டு கேட்டு பார்த்த அவன் ஒருநாள் அடம்பிடித்து கிளம்பினான். கேக் கடையில் கதவு அடைத்திருந்தது. அவனுக்கு தட்டவும் பயமாக இருந்தது. வாங்காமல் திரும்பிப்போனால் கிண்டல் செய்வார்கள். ஒரே படபடப்பாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான். கால்மணிநேரத்துக்கு மேலானது, திரும்பலாம் என நினைத்தபோது வெளியிலிருந்து பெங்காலி காட்டன் வந்து கொண்டிருந்தான். வரும்போதே அவன் சிரித்துக் கொண்டே வந்தான்.
இவன் ஒன்றும் பேசாமல் நின்றான். கதவைத் திறந்து உள்ளே போன பெங்காலி காட்டன் இவனையும் உள்ளே வரச் சொன்னான். இவனுக்கு போவதா என தெரியவில்லை. பயந்து கொண்டே உள்ளே போனான். பெங்காலி காட்டன் இவனிடம் எதுவும் பேசவேயில்லை. சிரித்த படியே சட்டையைக் கழற்றி அசையில் போட்டான். இவன் முன்னால் வந்து நின்று கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான். பூனையின் கண்களைப் பார்த்த அவனுக்கு எதுவும் பேச வரவில்லை. கை எல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஏதோ ஒரு சமயம் நினைவு வந்தவனாக “கேக், பைவ் ருபீஸ்” “கேக் பைவ் ருபீஸ்” என திரும்பத் திரும்ப சொல்லி ஒயர் கூடையை நீட்டினான்.
“அஞ்சு ரூபாய்க்கா?” பெங்காலி காட்டன் அதே சிரிப்போடு கேட்டான்.
“தமிலாம் பேசுவீங்களா?” அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“நல்லா பேசுவனே” சொல்லியபடியே ஒயர் கூடையில் கவரை வைத்து கேக் பொடியைப் போடத் தொடங்கினான்.
“அப்போ கடையில எல்லாரும் கிண்டல் பண்ணும்போது திட்ட வேண்டியது தான? ஏன் பேசாம இருக்க?”
பெங்காலி காட்டன் எதுவும் சொல்லவில்லை. அந்த வீடே சூடாக இருந்தது. பெங்காலி காட்டனின் முதுகின் நடு கோட்டில் வியர்வை ஒரே கோடாக வந்து கொண்டிருந்தது. அவன் பார்க்காதது போல் திரும்பிக் கொண்டான். கண்டிப்பாக பெயரைக் கேட்டுவிடவேண்டும்.
பெங்காலி காட்டன் கூடை நிறைய கேக்கைப் போட்டுக்கொண்டே இருந்தான்.
“அஞ்சு ரூபாய்க்கு தான் கேட்டேன். நீங்க நிறுக்கவே இல்ல?”
“அதெல்லாம் வேண்டாம். எல்லாம் உனக்குதான்” சிரிப்புடனே கூடையை நீட்டினான்.
கூடையை வாங்க கையை நீட்டினான். பெங்காலி காட்டன் கூடையில் இருந்து கையை எடுக்கவே இல்லை. வயிற்றில் ஏதோ செய்வது போல் இருந்தது. பெயரைக் கேட்பதற்கு வாயைத் திறந்தான். அதற்குள் அவன் அருகில் வந்த பெங்காலி காட்டன் அவன் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டான். என்ன நடந்ததென்று அவனுக்கு புரியவில்லை. அடுத்த நொடியே அவனுக்கு உள்ளுக்குள் பதறத் தொடங்கியது. கை கால்கள் மிகவும் சோர்வதை உணர்ந்தான். இதயம் வேகமாக துடித்தது. இப்போது ஓங்கி அறைவான், அதற்குள் ஓடிவிட வேண்டும் என்பது மட்டுமே மனதில் இருந்தது.
“என்னாச்சு?” பெங்காலி காட்டன் அதே சிரிப்போடு கேட்டான்.
கூடையில் இருந்த பெங்காலிக் காட்டனின் கையைத் தட்டிவிட்டு வேகமாக அவன் சாக்கடையின் ஓரமாக இருந்த பாதை வழி ஓடத் தொடங்கினான்.
~*~*~