திருநர்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்த ஒன்றிய அமைச்சரவை முன் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

திருநர்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) வகைப்படுத்த ஒன்றிய அமைச்சரவை முன் வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

ஒன்றிய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம், மற்ற அமைச்சகங்கள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் நடத்திய ஒருவருடகால விவாதத்தின் அடிப்படையில் இந்த வரைவு அறிக்கை பேரவை முன் சமர்ப்பிக்கபட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றும் கூறப்படுகிறது.

அனைத்து சாதியைச் சார்ந்த திருநர்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இணைக்கும் வரைவினை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் திருநர்கள் 27% இட ஒதுக்கீட்டினைப் பெற வழிவகை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

தேசிய சட்டசேவை ஆணையத்துக்கும் (NALSA),  ஒன்றிய அரசுக்கும் நடந்த வழக்கில் 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை ஒட்டியே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பு திருநர்களை “மூன்றாம் பாலினமாக”* அங்கீகரித்து அவர்களை “சமூக மற்றும் பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்டோர்” என்றே கருதவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. திருநர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவும் வழிமொழிந்துள்ளது.

திருநர்களை  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்ப்பது தவிர, இருபத்தைந்து வெவ்வேறு சாதியினைச் சேர்ந்தவர்கள் தங்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின்  இட ஒதுக்கீட்டில் சேர்க்கக்கோரி மனுவை சமர்ப்பித்து காத்திருக்கின்றனர்.  இந்த மனுக்களை ஏற்பதோ, மறுப்பதோ குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பொறுத்தே அமையும். நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் இதற்கு தேவைப்படுகிறது.  

அனைத்து சாதியைச் சார்ந்த திருநர்களையும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகக் கருதி ஒரே மாதிரியான இட ஒதுக்கீட்டினை வழங்குவது சமூகநீதிக்கு எதிரானது என்பதோடு இடஒதுக்கீட்டின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் திருநர்கள் ஆதிக்கப் பாலினத்தவர்களோடு (cisgender persons) போட்டி போடும் நிலை இருப்பதால் திருநர்களுக்கான இடஒதுக்கீடாக இதைக் கருத முடியுமா என்ற கேள்வி எழுகிறது. திருநர்களுக்கு அவர்களது சாதி சார்ந்து இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். 

*

பாலின அடையாளங்களை வரிசைப்படுத்துவது பாலின சமத்துவத்துக்கு எதிரானது

அலி முதல் திருநர் வரை