சென்னை குயர் இலக்கிய விழா 2019 — வாசிப்புமேடை

அழகு ஜெகன்

அவனா நீ…..?

பகுதி-4 புனிதம் எனும் கொடுஞ்சொல்..

புனிதம் என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் தீண்டாமையை தோளுரிப்பதே இந்த பதிவு .
புனிதம் என்ற வார்த்தை எங்க பிறக்கிறது என்றால் ஒரு கொள்கையை, நிறத்தை , அமைப்பை, ஜாதியை, மனிதனை அடிமைப்படுத்தி அல்லது தாழ்மைப்படுத்தி ஒரு சாரரை மட்டும் தூக்கிப்பிடிக்கத்தான் இங்கு புனிதம் என்ற வார்த்தை பயன்படுகிறது. சலங்கை புனிதம் என்றால் செருப்புக்கு என்ன இடம்? வாழ்வியலில் எது முக்கியம்? சலங்கையா? செருப்பா ? இரண்டுமே முக்கியம்தான் அதனதன் செயல்பாடுகளுக்கு. இது போன்று தான் பால்புதுமையினரின் வாழ்வும். புனிதம் என்ற சொல்லுக்குள் அடிபட்டு அடிபட்டு புறக்கணிக்கப்படுகிறார்கள். ஆண், பெண் சேர்த்து காதல் செய்தால் அது புனிதமான காதல், தெய்வீக காதல், அதுவே ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் சேர்ந்து காதலிலும், காமத்திலும் ஆட்கொண்டால் அது உங்களுக்கு முகங்சுழிப்பைத் தரும். ஏனென்றால் பெரும்பான்மையாகிய உங்களை கலாச்சாரம் மற்றும் புனிதம் என்ற போர்வைக்குள் மதங்களாலும் , கொள்கையாலும் உங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். புனிதம் என்ற வார்த்தையை கடந்து மனிதம் என்ற வார்த்தையை நீங்கள் மனதில் ஏற்காத வரை புனிதத்திற்குள் ஒழிந்து கொண்டு மனிதத்தை மிதிப்பதே பெரும்பான்மை சமூகத்தின் வேலையாகும்.

வேற்றுமை நிறைந்த இயற்கையில் உயிர்களின் உணர்வுகளுக்கும் வேற்றுமை உண்டு. ஒவ்வொரு உணர்வுகளும் மற்றவருடன் பொருந்திப்போக வேண்டிய கட்டாயமில்லை. அதுபோல்தான் பாலீர்ப்பும். உங்கள் பாலீர்ப்பை புனிதம் என்று கற்பித்தவர்களையும், இலக்கியங்களையும், கவிதைகளையும், திரைப்படங்களையும், மதங்களையும், தலைவர்களையும் சோதனைக்குட்படுத்துங்கள். அந்த சோதனை மீண்டும் மீண்டும் புனிதம் கற்பித்தால் தூக்கி எறியுங்கள். இங்கு புனிதம் என்று எதுவும் கிடையாது புனிதம் என்ற வார்த்தையும்கூட

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வியலிலும் பலதரப்பட்ட ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளும் இருக்கும். அப்படிப்பட்ட எண்ணங்கள் பிற மனிதனை பாதிக்காத வரை எதுவும் தவறில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சுதந்திரம். அப்பேற்பட்ட தனிமனித சுதந்திரம் உங்கள் காதுகளை பொத்திக்கொள்ளவும், கண்களை மூடிக்கொள்ளவும், உதடுகளை சுழிக்கவும், புருவங்களை தூக்கவும் முற்பட்டால் அதற்கு நீங்கள் புனிதம் என்ற வலையில் மாட்டிக்கொண்டு மனிதத்தை எட்டிநின்று பார்க்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். மீண்டும் மீண்டும் புனிதம் என்ற பொய்மையை உங்கள் மனதிற்குள் நிரப்பி பால்புதுமையினர் மீது உளவியல் வன்முறை நிகழ்த்தினால் அவர்கள் உங்கள் துருப்பிடித்த புனிதத்திற்கு மனிதம் கற்றுக் கொடுப்பார்கள்.

பகுதி-4: கல்யாண அகதிகள்

ஜிகு ஜிகுன்னு கோட்டு சூட்டு போட்டு..!
ஆசைக்கு ஆசைப்பட்டு ஆம்பளைன்னு வேஷம் போட்டு ..!
பொம்பள கழுத்துல மஞ்ச கையித்த போட்டு..!
சாகுற வர நாடகம் போட்டு, வாழ்வதைவிட நீதான் வாய்பிளக்க சொல்லுவியே அவனா நீயின்னு. 
ஆமா அவனே நான் அப்படியே வாழ்ந்துட்டு போறேன்.

ஆம் அப்பேற்பட்ட சலிப்புகளையும் பொறாமைகளையும் ஏக்கங்களையும் கேலிகளையும் சீண்டல்களையும் தாங்கி வாழும் நாங்கள் கல்யாண அகதிகள்.

வாழ்வியல் ஓட்டம் என்பது அவ்வளவு இழகுவானது இல்லை. உங்களின் அனைத்து ஒட்டுண்ணி கேள்விகளையும் தாங்கிக்கொண்டு உங்களுடன் ஓடுகிறோம். உங்களுக்கு இணையாக போட்டியும் போடுகிறோம். அப்போட்டிகளில் வெற்றியும் காண்கிறோம். உங்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சலித்தவர்கள் இல்லை என்பதை எங்களுக்கு
நாங்களே உறுதிப்படுத்த ஓடுகிறோம். தொண்டை நீர் வற்ற கத்துகிறோம். உங்களுடனான எங்கள் ஓட்டம் திருமணம் என்ற கட்டத்தில் நின்று விடுகிறது. விருப்பமில்லா துறவறத்தை வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறோம். தனிமையை அள்ளி எடுத்து பூசிக்கொள்கிறோம். காமம் என்ற ஒற்றை வார்த்தை கண் சிமிட்டலுகளுக்கு இணையான எண்ணிக்கையில் கிடைத்தாலும் வருண்ட உதடுகளால் முத்தமெனும் அச்சு பதித்து தொய்ந்த மார்பின் மீது தலைவைத்து படுத்து கண்ணீர் மெல்ல உருண்டோட தலைகோதி சொல்லும் காதல் எங்களுக்கு என்றுமே கானல் நீர்தான். ஒவ்வொரு முறையும் நீங்கள் தரும் திருமண அழைப்பிதழ்களில் மணமக்களின் பெயர்களை மெல்ல தடவிப் பார்த்து பேரானந்தம் கொள்வோம். அடுத்து உனக்கு எப்போ கல்யாணம் என்ற ஒற்றை கேள்வியில் நொறுங்கிய இதயத்துடன் புன்னகைத்தவாரே உங்கள்
அழைப்பிதழை பெற்றுக்கொள்ள முற்படுவோம். வீதி நண்பர்கள் , பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் , அலுவலக நண்பர்கள் என ஒவ்வொருவருடைய திருமண அழைப்பிதழ்களை எங்கள் முன் நீட்டும் போது அதை பெற்றுக்கொள்ளும் எங்கள் கைகளில் ஏற்படுத்தும் நடுக்கும், இச்சமுதாயம் உண்டாக்கிய சட்டங்கள் ஏதும் உங்களைப்போல் எங்களுக்கு இல்லை என்ற ஏக்கமா..? தனிமையை நாட தயாராகிறோம் என்ற சலிப்பா..? உம்மை போல் நாங்களில்லை என்ற பொறாமையா ..? என்ற குழப்பங்களால் குன்றிய இதயம் மெல்ல நடந்து அடுத்த நாளுக்கு செல்லும். அப்படி கடந்த நாட்கள் வயது முப்பதுகளை நெருங்கும் போது எங்கள் விருப்பமில்லா துறவறத்தை ஆண்மையின்மை என்று மதிப்பிட்டு நுணுக்கமான சாடல்களை எங்கள் மீது நுணுக்கமாக வைக்கும் போதும் மெல்ல நகர்ந்து விடுவோம் . தனிமையும் விரக்தியும் சலிப்பும் ஏக்கமும் ஏமாற்றமும் கொண்ட எங்கள் வாழ்க்கையை அன்றாடம் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்துக்கொண்டு அடுத்து வரும் எங்களை போன்ற பால்புதுமையினருக்கான விடுதலை வழியை செப்பனிட்டுக்கொண்டிருக்கும் எங்களை உங்கள் திருமணத்தில் எதிர்பார்க்காதீர்கள். பொறாமையை இதயத்தில் வைத்து புன்னகையை முகத்தில் மட்டுமே ஏற்று உங்களை வாழ்த்த மனமில்லை , ஏனென்றால் நாங்கள் கல்யாண அகதிகள்.

~*~*~