ஏப்ரல் 6, 2021-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு, மே 2-ம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றது. 132 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் நாள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
முதல்வராகப் பொறுப்பேற்றதும் ஆவின் பால் விலைக் குறைப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய், மாவட்டங்களுக்குள் சாதாரணப்பேருந்துகளில் பெண்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட முக்கிய அரசாணைகளை வெளியிட்டார். இந்த அரசாணைகள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என்கிற அறிவிப்பு எளிய மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே சமயம் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் உரிமை பெண்களுக்கு மட்டுமா அல்லது திருநங்கைகளுக்கும் இருக்கிறதா என்கிற சந்தேகமும் எழுப்பப்பட்டது. திருநங்கைகளும் பெண்கள் தான் என்கிற அடிப்படையில் அவர்களும் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம் என்றக் கருத்தும் நிலவியது. தஞ்சாவூரில் திருநங்கைகள் பெண்களோடு பயணச்சீட்டு இல்லாமல் பயணித்ததாக தொலைக்காட்சிகளில் செய்தியும் வெளியானது. என்றாலும் அரசாணையில் தெளிவாக திருநங்கைகளையும் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் பால்புதுமையினர் செயற்பாட்டாளர்களால் எழுப்பப்பட்டது. இதனிடையே ட்வீட்டரில் இதுகுறித்து கோரிக்கை வைத்த பத்திரிக்கையாளர் இந்துஜா ரகுநாதனுக்கு அளித்த பதிலில் “மகளிர் நலன் – உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஜூன் 3-ம் நாள் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டார். அதில் திருநங்கைகளும் அரசுப் பேருந்துகளில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிப்பதாக அறிவித்திருந்த 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதியில் முதல்தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டது. பெரும்பாலான திருநங்கைகள் குடும்ப அட்டைதாரர்களாக இல்லாததால் அவர்களால் நிவாரண உதவி பெற முடியாத சூழ்நிலை நிலவியது. திருநர்களுக்கான செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தபிறகு குடும்ப அட்டைகள் இல்லாத திருநங்கைகளுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டதைப் போல திருநம்பிகளுக்கும் பயணச்சீட்டு இல்லாமல் பேருந்துகளில் பயணிக்க அனுமதி வழங்க வேண்டுமென்பதும் பால்புதுமையினரின் கோரிக்கையாக இருக்கிறது.
ஏப்ரல் 15-ம் நாள் இந்தியா முழுவதும் திருநர்கள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘திருநங்கையர் – திருநம்பியர் உரிமைகளை திமுக என்றென்றும் காத்து நிற்கும்’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம் உலகம் முழுவதும் உள்ள பால்புதுமையினரின் சுயமரியாதை மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென்சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.