மொழிபெயர்ப்பு: ஶ்ரீலேகா
திராவிடர் கழகம் (திக), 23 பிப்ரவரி 2019 அன்று தஞ்சாவூரில் நடந்த மாநில மாநாட்டில் ‘திராவிடக் கொள்கை அறிக்கை‘யை வெளியிட்டது. கொள்கை அறிக்கையை விளக்க 5 மார்ச் 2019 அன்று ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. கொள்கை அறிக்கையில் ஏதேனும் ஆட்சேபிக்கத் தக்கதாகவோ, திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டியதாகவோ உள்ளதெனும் ஐயம் ஏதும் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு ‘தி.க’வின் தலைவர் பேராசிரியர் கி. வீரமணி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பகுத்தறிவு இயக்கம் 1944ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் நிறுவப்பட்டது. திராவிடர் கழகத்தின் வேர்கள் 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சுயமரியாதை இயக்கத்திலும் 1916ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக் கட்சியிலும் உள்ளது. இந்த இரண்டு இயக்கங்களும் பெரியாரின் தலைமையில் 1938ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் இரு பெரும் திராவிட அரசியல் கட்சிகளான ‘திராவிட முன்னேற்ற கழகம்’ (திமுக) மற்றும் ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (அதிமுக) திராவிடர் கழகத்தில் இருந்தே பிறந்தன.
“திராவிட அரசியலின் தாக்கங்கள் மாநில அரசியலில் நிச்சயம் உள்ளன. தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகள் திராவிட அரசியலில் இருந்தே தோன்றியுள்ளன. இப்போது இருவேறு அரசியல் கட்சிகளும் எவ்வாறு மறுமொழிகின்றன என்பதை கவனிக்க சுவாரசியமாக இருக்கும். இப்பொழுது இந்தக் கட்சிகள் பால்புது (LGBTQIA+) உரிமைகள் மீது ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் இடத்தில் உள்ளார்கள்.” என்கிறார் எழுத்தாளர் மற்றும் கவிஞரான கிரிஷ்.
33 கோட்பாடுகளைக் கொண்ட கொள்கை அறிக்கை, “ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள்” உள்ளடக்கிய சமூகத்திற்காகவும் அவர்களின் சமூக உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்துள்ளது. கொள்கை அறிக்கையில் ‘ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள்’ மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தாலும், அது குயர் சமூகத்தைக் குறித்த விழிப்புணர்வு குறைபாடு காரணத்தாலேயே என்று பால்புது (குயர்) மக்களால் நம்பப்படுகிறது. இது தமிழகத்தின் பால்புது சமூகத்திற்கு பெரிய முன்னேற்றமாக உள்ளது, மேலும் இந்தியாவின் மற்ற முற்போக்கு இயக்கங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பால்புது அடையாளங்களைக் குறிக்க கொள்கை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி, ஒட்டுமொத்த பால்புது சமூகத்தையும் உட்படுத்தியதாக இல்லை என்று பலரும் கருதுகிறார்கள். பால்புது சமூகம் இந்த முயற்சியை வரவேற்கிறது எனினும் சிலர் இதை நம்ப மறுத்தும் ‘தி.க’வின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியும் காத்திருக்கிறார்கள். எழுத்தாளர் கிரிஷ் மற்றும் LJ வயலட் கொள்கை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழியில் மொத்தக் பால்புது சமூகமும் உட்படுத்தப்பட்டதாக இருக்க சில பரிந்துரைகளை தி.க தலைமையகத்திற்கு எழுதியிருந்தார்கள்.
“கொள்கை அறிக்கையின் மொழி ஏமாற்றும் உள்நோக்கத்தோடு இல்லை என்றே நம்புகிறேன். ஆனால் இது இயக்கத்தின் முடிவெடுக்கும் தளங்களின் இடையே உள்ள வேற்றுமைகளினால் ஆன குறைபாடாகவே தெரிகிறது. சமூக நீதியை நம்பும் தேர்தல் அல்லாத சமூக இயக்கம் ஆதலால் தி.க சாதி, பாலினம், பாலியல் போன்ற பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்களின் பாலின இருமங்கள் மற்றும் எதிர்பாலீர்ப்பு மீதான கருத்தை விரிவுபடுத்த கடமைப்பட்டுள்ளது.” என்கிறார் LJ வயலட்.
இந்த வளர்ச்சியின் மீது தமிழ்நாட்டைச் சேர்ந்த சில குயர் மக்கள் பகிர்ந்துள்ள கருத்துக்கள்:
அமோகா, சமூகஆர்வலர்:
திராவிடர் கழகம் ஒரு முற்போக்கான இயக்கம். மேலும் எப்போதும் ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்துள்ளது. அதேபோல் திருநங்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளார்கள், இந்த இயக்கம் அந்த சமூகத்திற்கான முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது. திராவிடர் கழகம் தனது கொள்கை அறிக்கையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை சேர்த்துள்ளது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் திராவிடர் கழகம் ‘ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள்’ என்ற வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி உள்ளது. ‘தி.க’ LGBT சமூகத்தைச் சார்ந்த அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சொற்களை பயன்படுத்த வேண்டும் என்பது என் கோரிக்கை. என் இந்த கோரிக்கைக்கான காரணம், ஒரு பன்முக தன்மை மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகமாக எங்களின் தேவைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.
உதாரணத்திற்கு, திருநர்களுக்கு பயனுள்ள மருத்துவக் கொள்கைகள் அவசியமாக இருக்கும். அதேபோல், ஓர்பாலீர்ப்புடைய பெண்களும் ஓர்பாலீர்ப்புடைய ஆண்களும் ஓர் பாலினத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அதனால் எங்கள் தேவைகள் வேறுபட்டவை என்று நீங்கள் புரிந்துகொண்டால் சிறப்பாக இருக்கும். தி.க அவர்களின் கொள்கை அறிக்கையில் எங்களை உள்ளடக்கியதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் தி.க எங்கள் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் தேவைப்படும் பன்முக கொள்கைகளுக்காகவும் பேசும் என்று நம்புகிறேன். மேலும், திராவிடர் கழகம், இதில் எங்கள் உடன் நிற்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
அருண், IT தொழிலாளர்:
தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு இயக்கம் அதிகாரத்தோடும் ஊடக கவனிப்போடும் LGBT உரிமைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த முயற்சியாக திராவிடர் கழகம் அதன் உறுப்பினர்களுக்கு சாதாரணமாக இருக்கும் ஓர்பால் ஈர்ப்பு வெறுப்பு/திருநர் வெறுப்பை கடந்து வர உதவ வேண்டும் மற்றும் LGBTயின் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவத்திற்காக பொதுத்தளத்தில் (குறிப்பாக ஊடக உதவியோடு) போராட வேண்டும்.
கிருஷ்ணா – பெரியாரிஸ்ட், அம்பேத்கரைட்:
திராவிட சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகும் ஒரு குயர் நபராக எனக்கு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தது. இந்த இயக்கம் சமஉரிமைகளுக்காகப் போராடிக்கொண்டு இருப்பதால், இது ஒருநாள் நடக்கும் என்று நான் எண்ணியிருந்தேன். வரலாற்று ரீதியாகவும் இந்த இயக்கம் மக்களின் உரிமைகளுக்காக நின்றுள்ளது. ஆண்மை குறித்தும் பாலினப் பாத்திரங்கள் குறித்தும் பரவலாக அறியப்படாத காலத்திலும் பெரியார் அவற்றை பேசியுள்ளார். அவ்வாறிருக்க, இந்த முன்னெடுப்பிற்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்தது சிரிய வருத்தத்தையே தருகிறது. ஆனால், இது திராவிட நோக்கங்களில் ஒரு இடத்தைப் பிடித்தது மகிழ்ச்சியே. அடுத்தபடியாக ‘தி.க’வின் தளத்தில் பால்புது மக்களுக்கு அவர்களுடைய பிரச்சனைகளைப் பேச ஒரு வெளி கிடைக்கும் என்று நினைக்கிறேன். ‘தி.க’ மற்றும் தி.மு.க போன்ற கூட்டணிக் கட்சிகள்/இயக்கங்களைச் சேர்ந்த மக்கள் பால்புது மக்களின் சம உரிமைகளுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கையில் (எடுத்துக்காட்டுக்கு கனிமொழி), மதிமாறன், துரைமுருகன் போன்றோர் ஓர்பாலீர்ப்பு வெறுப்பு கொண்ட கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் தலைவர்களும் இயக்கத்தின் மக்களும் எங்களின் வாழ்க்கைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். முதலில் அதற்கான வெளியை அவர்கள் உருவாக்குவார்கள் என்று நம்புகிறேன்.
கிருத்திகா, ஊடகவியலாளர்:
முதல் பார்வையில், கொள்கை அறிக்கையில் பால்புது மக்களின் உரிமைகள் உட்படுத்தப்பட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், அவ்வாறு சொல்வதைத் தாண்டி நாம் அனைத்து பாலினங்களையும் உட்படுத்த வேண்டும்; அது கொள்கை அறிக்கையில் வேறு எங்கும் காணப்படவில்லை. இரண்டிற்கும் மேற்பட்ட பாலினங்கள் உண்டு என்பதைக் கருத்தில் கொள்ளாது, அது ஆண்-பெண் சமத்துவம் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது. அதில் பயன்படுத்தப்பட்ட மொழி சற்று உணர்வற்றது.
கொள்கை அறிக்கையின் 12வது செய்திக்கூறில் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் என்பதைப்போல அவர்களைப் பற்றி ஒரே பிரிவின் கீழ் பேசியுள்ளது. பால்புது சமூகத்திலிருந்து ஏன் இரண்டு பிரிவுகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன அல்லது ஏன் மாற்றுத்திறனாளிகளை அதே சமூகத்தின் கீழ் குறிப்பிட்டார்கள் என்று நான் கேள்வி கேட்க வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. 25வது செய்திக்கூறு, ஒரு ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ எவ்வாறு எதிர் பாலினத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதைப் பற்றி பேசியுள்ளது, ஆனால் ஓர்பாலினத் திருமணங்களை பற்றி பேசவோ அங்கீகரிக்கவோ இல்லை.
அது இனப்பெருக்க உரிமைகளைப் பற்றி பேசியுள்ளது. ஆனால் குறிப்பாக கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசவில்லை. இந்தக் கொள்கை அறிக்கை சூழலியல் பிரச்சினைகளைத் தனி பிரிவில் குறிப்பிட்டிருக்கும் நிலையில், நிச்சயம் மனநலப் பிரச்சனைகளுக்கு இன்னமும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
நன், ஓவியர்:
ஒவ்வொரு முறையும் LGBTQ க்கு ஆதரவாக வரும் மாநிலச் செய்திகளைப் படிக்கையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அது துளியாவது வெறுப்புணர்வு இல்லாமல் இருப்பதில்லை. மற்றும் அந்த ஆதரவின் உண்மைத் தன்மையை சந்தேகிக்கும் வகையிலேயே இருக்கிறது. மேலும் குறிப்பாக அது அரசியல் கட்சிகளிடமிருந்து வரும் பட்சத்தில். திராவிடர் கழகத்தின் பகிரங்கமான ஆதரவு ஆச்சரியமாக உள்ளது. அதே நேரத்தில், ஏதாவது கட்சிகள் இப்படி உரிமை கோரிக்கைகளை விடுக்கையில், அது அதிக ஆதரவாளர்களைப் பெறுவதற்கான விதையாகவும், இப்பொழுது பிரபலமாக உள்ளவைகளில் இடம் பிடிக்கவுமே என்று சந்தேகிப்பவர்களை குறை கூற இயலாது. ஆயினும்கூட ஏதேனும் அரசியல் தலைவர் பால்புது சமூகத்திற்கு இவ்வாறு வெளிப்படையாக ஆதரவளிப்பது அரிதே. அதனால் இவை ‘அனைவருக்குமான சம உரிமைக்காக’ என்கிற நல்லெண்ணத்தோடு உள்ளது என்று நம்புகிறேன்.
நித்தி, மாணவர்:
தமிழ்நாட்டின் பழமையான சமூக இயக்கம் LGBTQ உரிமைகளைப் பற்றிப் பேசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. மற்றும் மூத்தத் தலைவர்கள் வெளிப்படையாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பது பால்புது சமூகத்தின் மீதான பார்வையையும் விழிப்புணர்வையும் அதிகப்படுத்தும். கொள்கை அறிக்கையில் LGBTQ மக்கள் உட்படுத்தப்பட்டது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
சீஜிதடோகோறோ, ஓவியர்:
எனது இருப்பு ஒடுக்கப்பட்டது மற்றும் அரசியல் சார்ந்தது. முன்மொழிந்து, ஒடுக்குகின்ற அமைப்புக்கு எதிராக போராடும் தளத்தை உருவாக்கும் தலைவர்களை நான் எப்போதுமே எதிர்நோக்கியிருக்கிறேன். அவ்வாறாக, அரசியலின் மேல் எனக்கு மனக்கிளர்ச்சியை உண்டாக்கியது பெரியாரும் பாபாசாகேப்பும். ஆனால் சமீபத்திய கசப்பான சூழ்நிலைக்குக் காரணம், நான் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் அரசியல் சித்தாந்தத்தில் புழங்கும் ஆட்கள் மிக சௌகரியமாக ஓர்பாலீர்ப்பு வெறுப்பு மற்றும் திருநர் வெறுப்பு கருத்துக்களை உதிர்க்கிறார்கள். ஜிக்நேஷ் மேவானி போன்ற இளம் அரசியல்வாதிகள் கூட LGBTQ+ உரிமைகள் பற்றி பேச சௌகரியப்படுவதில்லை. மேலும் மதிமாறன் போன்ற இளம் அரசியல் சொற்பொழிவாளர்களின் எழுத்துக்களும் ஓர்பாலீர்ப்பு வெறுப்புடனே இருந்தன. அதனால் தனிநபரோ அல்லது ஒரு கட்சியோ LGBTQ+ உரிமைகளுக்காக என்றாவது ஒரு நிலைப்பாட்டை எடுக்குமா என்று எப்போதும் எதிர்பார்க்கிறேன். பெரிய ரசிகக் கூட்டத்தோடு, சில பெரியாரிஸ்ட் நபர்களால் துவங்கப்பட்ட திராவிடம் 2.0 ஒரு கண்துடைப்பே, அங்கு LGBTQ+ உரிமைகள் பேசப்பட்டது ஒரு சடங்கிற்காக என்றே எனக்குத் தோன்றியது. ஆனால் ‘தி.க’ அவர்களின் கொள்கை அறிக்கையில் இந்தச் சிறு வாக்கியங்களை கொண்டு வருகையில், பெரியாருடன் நடப்பதே எப்போதும் சரியான முடிவு என்று எனக்குத் தோன்றியது. திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டிற்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும், மேலும் அவர்கள் வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.
சுஜிதா, பிசினஸ்அனலிஸ்ட்:
முதலில் LGBT+ சமூகம் இவ்வாறு மதிக்கப்படுவதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. Section 377 குறித்த உரையாடல்களைத் தாண்டி, இதுவே அரசியல் தளங்கள் எடுத்துக்கொண்ட முதல் சீரிய பொறுப்பு. மற்ற அரசியல் கட்சிகளுக்கும் இது முன்னுரிமையாக விரைவில் மாறும் என்று நம்புகிறேன். தி.க தொடர்ந்து LGBT+ உரிமைகளிலும், குயர் சமூகத்திற்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுப்பதிலும் கவனம் செலுத்தும் என்று நம்புகிறேன்.
புதுப்பிப்பு:
இந்தக் கட்டுரை எழுதப்பட்டு நாட்களாகிவிட்டது; 9 மார்ச் 2019 அன்று திராவிடர் கழகம் அதன் கொள்கை அறிக்கையின் 12ஆம் மற்றும் 25ஆம் செய்திக்கூறுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் மற்றும் மொழியைத் திருத்தி கீழே உள்ள அறிக்கையை வெளியிட்டது.