தன சக்தி
ஓர் பாலீர்ப்பாளர்கள் குறித்து சமூகம் எனக்கு தெரிவித்த பொதுபுத்தியுடன்தான் இந்த விடுபட்டவை தொகுப்பை வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே காதல் என்பதில் இருந்தே தொங்கியது.
“காதலிக்கும் நபர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் இறுதி வரை நான் காதலிக்கவும் காதலிக்கப் படவுமே விரும்புகிறேன்” என்கிற இந்த அற்புதமான வரிகளால் மானுடத் தேவை காதல் காதல் என்பதாக உணர்த்திவிட்டார் .
ஒரு தேவதைக் கதை
எனக்குள் இருந்த தேவதை வடிவத்தை பரிசீலனைக்குள்ளாக்கியது .
குறைந்தபட்சம் நான்கு பக்கங்களில் இரண்டவது பக்கத்தில்தான் சிறுகதைக்குள்ளே நுழைய வைப்பார்கள் . எத்தனை பெரிய ஜாம்பவான் எழுத்தாளாராக இருந்தபோதும். ஆனால் க்ரீஷ் ஒன்னறைப் பக்கத்தில் ஒரு வாழ்வையே காட்சிப்படுத்தி நம்மையும் பயணிக்க வைத்துவிடுகிறார் எங்ஙனம் இந்த அற்புதம் என்று எண்ணி எண்ணி வியக்கிறேன் .
பொது சமூகம் விதித்திருக்கும் வாழ்வியலுக்கு கொஞ்சம் கூட பொருந்தாத ஒரு வாழ்வைதான் இங்கு யாவரும் வாழ்கிறோம் என்ன முகமூடிகளை பொருத்திக்கொள்கிறோம் என்பதை மீயழகாக பாவங்களுடன் ஆனாலும் முகத்தில் அறையும்படி உணர்த்துகிறார் .
“ மாலை போட்டு இருக்கும்போது இப்படி எல்லாம் பண்ணலாமா”?
தேவதைக்கு என்ன மாலையும் சாமியும்”?
இந்த வரிகளில் இருந்தே சாதீய மத மூட பிற்போக்குத்தனங்களுக்கெதிராக இந்த நூல் முழுவதும் சாட்டை சுழற்றியுள்ளார்.
ஓர் பாலீர்ப்பாளர்கள் திருநங்கைகள் திருநர் திருநம்பிகளுக்காக மட்டுமில்லாமல் சாதிய மத பிற்போக்குத்தனங்களுக்கெதிராகவும் பேசியிருக்கிறார். ஒடுக்கப்பட்டவன் எங்கிருந்து ஒடுக்கப்படுகிறான் என்று நூல் பிடித்தமேயானால் அது சாதி மதம் பால் என்று கடைசியாக கடவுளில் வந்து முடியும் .
இந்த தொகுப்பில் வரும் கவிதைகள் குறித்து அவ்வளவு பேசலாம் ஒவ்வொரு கவிதையும் அத்தனை உணர்வாய் இருக்கிறது. எனக்கென்னவோ அழகியல் பேசும் கவிதைகளை விட உணர்வை பேசும் கவிதைகள்தான் மனசுக்குள் ஒட்டிக்கொள்கிறது.
“அவன் இடையைச் சுற்றி
அழுத்திய கைகளில்
எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை
காமத்தைத் தவிர”
ஒரு கவிதையின் இடையே இப்படி சில வரிகள் வருகிறது .
யோசித்தால் ஒரு காமத்தில் கூட எத்தனை எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறோம் இவனோ இவளோ நமக்கு இதெல்லாம் செய்வாளா செய்வானா இவனோ இவளோ செட்டில்டா என்றெல்லாம் யோசித்து பின் காதலாகி கசிந்துருகி காமம் செய்கிறோம். ஆனால் ஒரு உன்னத காமம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை என்பதை நான்கே வரியில் சொல்லியிருக்கிறார் .
கட்டிமுடிக்கப்படாத வீடுனு ஒரு சிறுகதை இருக்கு வாசித்துவிட்டு என் மனசு அத்தனை நடுங்கிற்று. ஆண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமைகள் சொல்லப்பட்டிருந்தால் பெண் குழந்தைகளை விட அதிகமாகவே இருந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஆண் பிள்ளை அழ கூடாது என்ற கூற்றிலிருந்தே அவன் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளும் கவனிப்பாரற்று சொல்ல முடியாமல் கிடக்கின்றன என்பதையும் ஒன்னரைப் பக்கத்தில் சொல்லிவிட்டார்.
வேலை ன்ற சிறுகதையில் ஓர்பாலீர்ப்பாளர்களின் அலுவலக சூழல் பிரச்சினைகள் நிலை குறித்தும் பதிவு செய்துள்ளார் .
அந்த கதையில் கேலிகளுக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி பாதிக்கப்பட்டு வேலை இழந்த ஓர்பாலிர்ப்பாளனிடம் பொது சமூகத்திலிருந்து ஒருவன் வந்து sorry கேட்கும்போது அந்த ஓர்பாலீர்ப்பாளன் கேட்கும் அந்த ஒற்றை கேள்வி இருக்கு பாருங்க அது அவனுக்கானதாக மட்டுமில்லாம ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது .
“அவன் ;SORRY
நான் ;” It’s ok”
வன்முறைக்குள்ளாக்கப் பட்டிருக்கும் ஒரு ஒடுக்கப்பட்டவனால் இதற்கு மேல் என்ன சொல்ல முடியும் ?”
ஓர்பாலீர்ப்பாளர்களுக்கு திருநர் திருநம்பிகள் திருநங்கைகளுக்கு ஆதரவாக பேசுகிறோம் கலை வடிவமாக்குகிறோம் என்று பொது சமூகம் செய்யும் அபத்தங்களை தெளிவாக விளக்கி எடுத்தும் கூறியுள்ளார்.
கட்டவிழ்க்கப்பட்ட நாவுகள் என்கிற ஓர்பாலீர்ப்பு கறுப்பின ஆண்களைப் பற்றிய திரைப்படம் பற்றியும் அதன் இயக்குனரைப் பற்றியும் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார்
மகிழ்வன் என்கிற குறும்படத்தை விமர்சித்த அவர் இந்த படம் குறித்து எழுதியதை வாசித்ததும் ஏன் மகிழ்வன் படம் சரியில்லை என்பதை புரிந்துகொண்டேன் .
இந்த தொகுப்பில் வரும் “கடிதமொன்றின் கதை” ன்ற ஒன்னேகால் பக்க கதையே இந்த இரவை உறங்கவிடாமல் இந்த விடுபட்டவை புத்தகம் குறித்து எழுத வைத்துவிட்டது .
“மாற்றுப் பாலீர்ப்பு கொண்ட மாற்றுப் பாலீன மக்கள் எங்களுக்காக யாரேனும் குரல் கொடுங்கள் என்கிற நிலையைத் தாண்டிவிட்டோம் . எங்களுக்கான உரிமைகள் யாரிடமும் கெஞ்சிப் பெறுவதல்ல, எடுத்துக்கொள்வது என்கிற பாதையிலேயே பயணிக்கிறோம் .
எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் எனச் சொல்வதை விட எங்களுக்கும் உங்களைப்போல் வாழ எல்லா உரிமையும் உள்ளது எனப் புரிந்து ஒரு இயக்கமாக செயல்படுகிறோம் . மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட எல்லா மக்களுக்குமாக குரல் கொடுக்கும் அளவு அரசியல் புரிதலோடு மாற்றுப் பாலீர்ப்பாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.”னு எழுதி பொது சமூகத்தின் அரைவேக்காட்டு அக்கறைகளுக்கு மிக தெளிவாக பதில் கூறியுள்ளார்.
ஓர் பாலீர்ப்பாளர்கள் மாற்று பாலினத்தவர்கள் பற்றி எழுத துடிப்பவர்கள் அவர்களுக்காக கலை படைப்பு ஆக்கம் செய்ய நினைப்பவர்கள்
மேலும் தினம் எதாவது ஒரு வகையில் டிபன் பாக்ஸ் என்றோ ஹே விளம்பி என்றோ பகடி செய்து ஆர்கஸம் அடைபவர்கள் இந்த புத்தகத்தை ஒரு முறை வாசித்துவிடுங்கள் ப்ளீஸ் .
கிரீஸ் உங்களிடம் ஆகச்சிறந்த படைப்பாளியிருக்கிறான் எழுத்தாக்குங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள் என்றாவது இந்த பொது சமூகம் நின்று நிதானிக்கலாம்.
வாழ்த்துகள் கிரீஸ்
அணைப்பும் முத்தங்களும்
~*~*~