உரையாடல்களின் அவசியத்தை இன்னும் அதிகமாக உணர்த்தி நிற்கின்றது ‘விடுபட்டவை’

தர்மினி, கவிஞர்

சில புத்தகங்களைப் படித்து முடித்த பின் உடனே மறந்துவிடுகின்றோம். சிலவற்றைப் பற்றி யாருடனாவது உரையாடவேண்டும் என்று தோன்றும். இன்னும் சில, நம்மைக் கடந்து செல்ல விடாமல் போக — வரக் கரைச்சல் தந்தபடியிருப்பவை. இவ்வாசிப்புப் பற்றி எப்படி ? எவ்விதம் ?நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்ற பயத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ‘விடுபட்டவை’ என்ற தலைப்புடன் கறுப்புப்பின்னணியில் வட்டத்துக்குள் வண்ணங்கள். சில காகங்களும் தனித்து அமர்ந்திருக்கும் ஏழு நிறங்கள் கொண்ட ஒற்றைக் காகமுமாக அட்டையைக் கொண்ட இத்தொகுப்பு ஓர் இளைஞன் நம்முடன் உரையாடுவதாக விரிந்து கொள்கின்றது. அந்நிறங்களைத் தனது அடையாளமாக்கி, சமுதாயத்தைக் பார்த்து தன் எண்ணங்களை முன் வைக்கும் எழுத்து வெறுப்பை வெளிப்படுத்தவில்லை. தன் தரப்பிலிருந்து நியாயங்களை-ஆற்றாமைகளை-சலிப்பை-காதலைப் பேசுகின்றது. நம்மையறியாமல் எப்போதாவது எவரையாவது துயரத்துக்கு ஆளாக்கியிருப்போமா என்று இடையில் ஒரு தரமாவது ‘விடுபட்டவை’ நம்மைச் சிந்திக்கச் செய்கின்றது.

கதைகள், சினிமா, ஊடகச் செய்திகள், கவிதைகள், சுயஅனுபவங்கள் எனச் சாட்சியங்களாக ஒலிக்கும் குரல். அக்குரல் கேட்பது, வழமையானவை எனப் பழகிப் போன பாலியல் ஈர்ப்பு ஆணுக்கும் பெண்ணுக்குமானதென்ற கருதுகோளை விடுத்து, எங்களைப் புரிந்து கொள்ளுங்கள். வேலை செய்யும் அலுவலகத்தில் தனித்து விடப்பட்டும் வாடகைக்கு வீடுகள் கொடுக்கப்படாத வேறொரு உயிரியாகவும் ஒவ்வாமையோடு சகமனிதரை நோக்கும் சமூகத்தின் ஒற்றைப் பார்வையை விமர்சிக்கும் இத்தொகுப்பு, வரையறை வேலியை நோக்கி எறியப்படும் ஒரு கல்லின் அதிர்வையாவது படிக்கும் போது தரும்.

Lesbian, Gay, Bisexual, Transgender ஆகிய ஆங்கிலச் சொற்களின் முதலெழுத்துகளைக் கொண்டு LGBTஎன்று சுருக்கமாகக் கூறப்படுகின்றது. சமபாலீர்ப்பினர் ,இருபாலீர்ப்பினர் ,பால்நிலை மாறியோர் தாங்களும் இச்சமுதாயத்தின் மனிதர்களே என்பதைத் தமது வலிகளுடன் நிறுவிக்காட்டவேண்டிய துயரத்தை வழங்குவது பற்றி ஏனையவர்கள் சிந்திப்பதுமில்லை. அந்நியப்படுதலை ; வீடு, அலுவலகம், பொழுதுபோக்குச்சாதனங்கள், ஊடகங்கள், நட்புகள் என்று எதிர்கொள்ளும் விளிம்புநிலை எழுத்தை,எடுத்துக் கொண்ட எந்த வடிவமாயினும் அழகாகவும் செறிவுபடுத்தியும் இத்தொகுப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் கிரீஷ்.

‘எனது காதல் ஃபிரீடாவின் காதலைப் போன்றது. மூச்சு முட்டச் செய்யும் அன்பும் சொல்லவே முடியாத பைத்தியக்காரத்தனங்களும் நிறைந்தது’ என்று காதலைப் பற்றிய அத்தியாயம் முடிந்ததும் –ஒரு தேவதைக் கதை-என்ற கதை தொடங்குகின்றது. இரு ஆண்களிடையில் மெல்லென ஒரு காற்று வீசிப் போனது போல ஒரு சித்திரமது. ‘தேவதையின் கைகளில் மந்திரக்கோலுக்கு பதிலாக ஒரு டார்ச் லைட்டும்,மறு கையில் டெஸ்டரும் இருந்தன’ என்ற முதற்பந்தியின் வரிகளில் அச்சிறுகதை தொடங்கியது, வாசிப்பு மேற்கொண்டு செல்லத் துாண்டியது. தொகுக்கப்பட்ட கவிதைகள் வெறும் கோஷங்களாக இருக்கவில்லை. அவற்றில் அழகும் எளிமையும் உணர்வுகளும் பொதிந்த மனிதன் தெரிந்தான். பெரியவன் –சிறியவன்,புணர்பவன்-புணரப்படுபவன் என்ற வித்தியாசங்களில் உறவுகளின் கசப்புகளும் சகிப்புகளுமாக அகச்சிக்கல்களையும் பதிவு செய்யும் கலை வெளிப்பாடாக அது அங்கு மாறிவிடுகின்றது. சிறுவனொருவன் வயதுவந்த ஆணொருத்தனால் பாலியல்வன்முறைக்கு ஆளான பதிவு ஒரு குறும்படம் போல் காட்சிகளாகத் தெரிகின்றன. அச்சிறுவனின் வேதனையையும் செய்யாத குற்றத்தை மறைக்கும் பதின்பருவத்தின் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மனவியல்பையும் ‘நான் வீட்டை அடைவதற்குள் என் காயங்களுக்கான ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஒரு பாலியல் வன்முறை என்றென்றைக்குமாய் மறைக்கப்பட்டுவிடும்’ என்று எழுதப்பட்டிருப்பது, பாதிப்புற்ற சிறுவர்கள் வீட்டுக்கு மறைக்கும் ஏராளம் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவங்களை நினைவுபடுத்தின.

வேலைசெய்யும் அலுவலகத்தில் நாகரிகம் மிக்க கனவான்கள், பாலீர்ப்பின் காரணமாகத் தம்மிலிருந்து வித்தியாசமாகிவிட்டதாகச் சகமனிதனை அவமானப்படுத்துகின்றனர். வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்று கேலிக்குரியவானாக்கிப் புறக்கணிக்கின்றனர். உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகவேண்டி வருமோ என்ற பயம் துரத்துகின்றது. மனநோயாளிகளைக் கற்களைக் கொண்டு துரத்துவதைப் போல சொற்களைக் கொண்டு துரத்துகின்றது அலுவலகம்.

‘மறுபடியும் அவர்கள்…

அருகில் அமர்ந்து கொண்டு

அவனைப்பற்றித்தான் பேசுகிறார்கள்,

எப்போது வேண்டுமானாலும் அவன் தாக்கப்படலாம்.

ஓடுவதற்கு தயாராக வேண்டும்.’இது அடுத்து வந்த கவிதையின் தொடக்க வரிகள்.

சாதாரணமாக ஒருவருக்கொருவர் உரையாடும் போது பழக்கமாகிவிட்டது என்பது போல சில சொற்களை உபயோகித்து விடுகின்றனர். அவை புறக்கணிப்புக்குள்ளானவர்களை எவ்விதம் சுட்டுப்புண்ணாக்குகின்றது என்பதை அறியாதவர்களாக நாளாந்தப் பேச்சுகளில் எவ்விதம் சில சொற்களைப் பேசுகின்றனர்.

சினிமா,ஊடகங்கள்,இணையங்கள் எனத் தவறாகவும் கேலியாகவும் சொல்லும் செய்திகளும் காட்சிப்படுத்தல்களுக்குமான விமர்சனங்கள் பழக்கப்பட்டுப் போன வழமைகளின் உடைப்பாகச் சில கேள்விகளை முன்வைக்கின்றன. LGBT எனத் தம்மை முன் வைப்பவர்களும் ஆதரவைத் தெரிவித்து இணைந்து நிற்பவர்களும் செய்யும் போராட்டங்கள்,வெளியிடும் அறிக்கைகள் இந்தப் பிரபலச் சினிமா இயக்குனர்களின் சமூகப்பார்வைக்குள் எப்படித் தெரிந்துவிடாமல் போய்விடுகின்றன ?

மேலும்,

‘ஓரினச் சேர்க்கையாளர்கள் அல்ல. ஒரு பாலீர்ப்புக் கொண்டவர்கள். இனம் என்பது மனித இனம், விலங்கினம் என்பது போல. எனவே ஓரினச்சேர்க்கையாளர்கள் என மற்றவர்களை விளிக்கும் போது நீங்கள் மனித இனம் அல்லாத வேறு இனத்துடன் உறவு கொள்வதாக அர்த்தம் வருகின்றது’என்கின்றார்.

சற்று விழிப்படைந்தவர்களாக/ நாகரிகமானவர்களாக/ எழுதுபவர்களும் பேசுபவர்களுமே சில சொற்களை உபயோகிப்பதில் கவனமற்று விடுகின்றனர். அர்த்தங்களைக் கவனிக்காமல் எழுதப்படுபவை தரும் பொருள் தவறாக இருப்பது பற்றிய ஓர்மையற்றவர்களாக எத்தனை சொற்களை நாம் எழுதுகின்றோம்.

சமுதாயம் வழமைக்குப் புறம்பானது எனப் புறக்கணித்துக் குற்றவாளிகளாக நடத்தும்-பார்க்கும் மனப்பான்மை பற்றிய சிந்திப்பை ஏற்படுத்தும் இத்தொகுப்பு ஜனவரி 2018 ல் குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் மற்றும் கருப்புப்பிரதிகளின் ஒருங்கிணைந்த வெளியீடாகும். ஆக்கங்கள் ஒவ்வொன்றும் 2015, 2016, 2017 எனக் காலப்பதிவிடப்பட்டவை.சமகாலத்தில் LGBT எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கொண்டவையாக இவை முன் வைக்கப்பட்டிருக்கின்றது.

உரையாடல்களின் அவசியத்தை இன்னும் அதிகமாக உணர்த்தி நிற்கின்றது ‘விடுபட்டவை’

​​~*~*~