நம் காதல் வெயில் காலத்தில் பெருகிப்போன நதி – கவிதை தொகுப்பு

புதுவிதிகள்

இந்த சுவரில்,

வெயிலும்.. 

மர இலை நிழலும்.. 

பழுப்பேறிய ஒட்டடை சருகும்.. 

உன் இன்மையும் படர்ந்திருக்கிறது.

இதை அண்ணாந்து பார்க்கும் என்னிடம்,

இவ்வெயிலின் கசப்பும்.. 

அயரத்தூங்கிய சலிப்பும்.. 

எங்கோ விரவும் என் இருப்பின் நினைப்பும்.. 

இன்னதென்றறியாத தவிப்பும் மட்டுமே எஞ்சியிருக்கிறது!

வெயிலில் காதலிக்க.. 

நோய்க்காலத்தில் நேசிக்க.. 

அவசரச்சட்டங்களுக்கு உட்பட்டு வருத்தப்பட.. 

கிருமிகள் நிர்ணயிக்கும் விதிகளில் பிரிவுற.. 

ஒருபோதும் பழக்கப்பட்டதில்லை! 

இதோ.. 

அவ்வளவுதான்.. 

முடிந்துவிட்டது.. 

என நீ வந்துசேர,

என்னை தேற்ற, 

மாநகரங்களின் கெடுபிடிகளை விடுவிக்க.. 

எந்த அறிவியலும் முன்னேறவில்லை! 

ரயில் கடக்கும் அதிர்வில்.. 

உன்னை மீண்டும் முத்தமிடும் நாள்.. 

ஒரு மழைக்காலமாக நிச்சயமாக இருக்காது!