நம் காதல் வெயில் காலத்தில் பெருகிப்போன நதி – கவிதை தொகுப்பு

நம் காதல் வெயில்காலத்தில் பெருகிப்போன நதி

வெயில்காலத்தில் பெருக நினைக்கும் நதிகளுக்கு 

வற்றிப்போவது மட்டுமே வாய்க்கும்! 

கரையில் வேரூன்றி நிற்கும் எந்தச்செடியையும்

செழிக்கச் செய்ய முடியாது. 

அலையில் திரளும் எந்த சிறுமீனையும்

காப்பாற்ற இயலாது. 

பரப்பில் படரும் எந்த நிலவையும்

நனைக்கத் தெரியாது.

முட்புதர்கள் சூழ வறண்டிருக்கவும், 

ஆற்றுப்பாலத்தின் அதிர்வுகளை சுமந்திருக்கவும்,

மற்றொரு மழைக்கு காத்திருக்கவும் மட்டுமே கடவது!

நம் காதல் வெயில்காலத்தில் பெருகிப்போன நதி!

அது பெருகும்வரையில்.. 

அதன் இருகரைகளில்..

எதிரெதிரே முகம் பார்த்து அமர்ந்திருக்கலாம்.

நரம்புகள் அறுந்த கிட்டார் ஒன்றில்,

இதயத்திலிருந்து நீ பாட்டிசைக்கலாம். 

துவண்ட மலர்களை கொண்டு..

பரஸ்பரம் காதல் சொல்லிக்கொள்ளலாம். 

உன் கரை பக்கத்து மரங்களில்.. 

மூன்று விரல்கள் கொண்ட கைகளிரண்டு

ஒன்றையொன்று பற்றிக்கொள்வதாய் நீ வரைந்திடலாம்.

மணல்பரப்பில்.. 

நதிபெருகும் நாளை 

உத்தேசமாய் கணித்து எழுதி வைக்கலாம்

அல்லது..

இந்த நதி இறுதியில் வந்தடையும் கடலை தேடிச் செல்லலாம்.

நதி பெருகும்வரை அங்கு காத்திருக்கலாம்.

உப்பேறிகரிக்கும் கடலின் நடுவே சென்று 

நம் நதிக்கரை நிரம்பும் நாளை கனா காணலாம்.

அங்கே முதல்மழைத்துளி நதியாகும் கணத்தில்..

இங்கே நாம் முத்தமிட்டுக் கொள்ளலாம்.

கரையோரத்து செடிகள் மலரத்தொடங்கும் கணத்தில்..

கைகளைப் பற்றிக்கொள்ளலாம். 

கடந்து கடந்து வந்து கடலில் கொட்டிக் கொள்ளும் போது.. 

நம் சின்னஞ்சிறு நதியை 

பெருங்கடலில் அடையாளம் காண பிரயத்தனப்படலாம்

அதுவரை நதி பெருகும் என நினைத்திருப்போம் 

அதுவரை வெயிற்காலத்தில் பெருக நினைத்த நம் பிரியநதியின் பிழையை பொறுத்திருப்போம்