இந்த பிரிவின் பெரும்பயம்
இந்த பிரிவின் பெரும்பயம்
உன்னை நான் மீண்டும் சேரும்பொழுது
நீ என்னை
என்ன சொல்லி தேற்றுவாய்?
அதற்குனக்கு
எந்த மொழியில் சொற்கள் கிட்டும்?
என் இருப்பில்
உன் இப்போதைய இன்மையை
உனது எந்த காரணம்
நியாயப்படுத்தி விடும்?
நீ பற்றிக்கொள்ளாத நாட்களில்
நான் ரத்தக்காயங்களுடன் வீடு திரும்பியதன்
கதைகளை
எப்படி நீ அழாமல் உன்னை அறியச்செய்வது?
உன் தீண்டலற்று
ஒரு யுகம் போனபின்
கரங்கள் நடுங்காமல்
உன்னை எங்ஙனம் தீண்ட?
அத்தனைக்கும் மேலே
“ஜீவித்திருந்தாயே! பிறகென்ன?”
என்று நீ கேட்டால்
என்ன பதில் சொல்ல?
நீ விலகியிருக்கும் நாட்களின் மீது
நீ சமீபிக்கப்போகும் நாட்களின் நிழல்
கர்ப்பக்கிரக இருட்டாய்
பரவுகிறது!