நம் காதல் வெயில் காலத்தில் பெருகிப்போன நதி – கவிதை தொகுப்பு

ஒத்திசைவோடு கூடிய சித்தப்பிரமை

வெளிறி வெளிறி..

நம் பிரிய நிலத்தின் வானம் 

தூர்ந்து..

தன் நீலம் மறந்த நாட்களில், 

நாம் ஆழ தோண்டியிருக்கும் சவக்குழிகளில் 

ஒற்றைரோஜா செடிகளை நட்டு வைக்கலாம். 

நாம் ரசித்த அந்த சினிமாவின் 

இறுதி காட்சியில் இழையும் 

பேரிசை கோர்ப்பொன்றை 

கடலதிர ஒலிக்கச்செய்து 

நம் பிரிவின் தீர்மானத்தை 

பிரபஞ்சத்திற்கு அறிய செய்யலாம். 

பரிசுகள் உடைத்து, 

பகிர்ந்த புத்தகங்கள் கிழித்து, 

குறுஞ்செய்திகள் அழித்து, 

புகைப்படங்கள் எரித்து, 

அந்நிய ஆசாமிகளாக

திகட்டும் இனிப்பொன்றை 

பரஸ்பரம் ஊட்டிக்கொள்ளலாம். 

அந்திகளை மறந்து.. 

அன்புக்கதைகள் மறந்து.. 

அற்றவை அல்லாதவை யாவும் மறந்து.. 

காலி செய்த வாடகை வீட்டின் 

சாவியை கொடுத்துவிட்டு வருவது போல் 

பிரிய தினவுகளை ஒப்படைத்துவிட்டு..

அன்றாடம் விரவும் சாலைகளில் 

திணறத்திணற அழுதும் அயர்ந்தும் 

வீடு திரும்பலாம். 

உன் நலம் நானும்.. 

என் நலம் நீயும்.. 

இனி ஒருபோதும் அறியோம் என..

நம் நேசத்திற்குரிய நண்பர்களிடம் 

பொதுவெளியில் பிரகடனப்படுத்தலாம்.

உனக்கும் எனக்குமிடையே நிகழ்ந்தது

ஒரு ஒத்திசைவோடு கூடிய சித்தப்பிரமை என 

சமன்செய்து

சமாதானம் சொல்லிக்கொள்ளலாம்.

உங்கள் சாபங்கள் பலித்ததென

நம் காதலர்களுக்கு சொல்லி அனுப்பலாம். 

இனி கதியாய் நீளப்போகும் 

மீதி நாட்களுக்கான வெறுப்பை 

ஒரு நீண்ட கடிதமொன்றில் 

சலிக்க சலிக்க எழுதிவிடலாம். 

அதுவரை..

சங்கிலிகள் அறுபடாமல்.. 

சாவிகள் தொலையாமல்.. 

கரைகள் எழும்பாமல்.. 

கிரகம் கடந்து போகாமல்.. 

காயங்களின் சிவப்பு தீரும் முன்.. 

இதை 

இப்படி 

இவ்வாறு 

முறித்துக்கொள்வதன் மூலம் 

நீ என்ன சொல்ல வருகிறாய் 

என்பதை உணரும் நாளில்.. 

நான் உன்னினும் 

வல்லதொரு நெஞ்சம் வளர்த்திருக்கவும்.. 

நீ என்னினும் 

மென்மையாய் ஒரு மனம் சமைத்திருக்கவும்.. 

பிடித்த கடவுள்களிடம் 

பிரார்த்தனை செய்திடலாம்!

~*~*~