பெரியாரின் பிள்ளைகள்

Image Source – Digital Periyar

தனிநபர்களால் விடுதலை அடைய முடியாது. ஒரு தனிநபர் தனக்குத் தானேவோ, பிறருக்கோ விடுதலை அளிக்க முடியாது. நாம் ஒரு சமூகமாக மட்டுமே விடுதலை அடைய முடியும். அதற்கான பங்களிப்பை தனிநபராகவோ, கூட்டாகவோ அளிக்கலாம். எனவே எந்த ஒரு விடுதலைக்கான தத்துவமும், அது எல்லோரது விடுதலைக்குமானதாக இல்லை என்றால், அதனை விடுதலைக்கான தத்துவம் என்று நாம் கருத இயலாது. 

வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எந்த ஒரு அமைப்பும் தனிநபர்களின் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறது, தனிநபர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக, வாழ்வதற்காக நாம் ஒரு அமைப்பை ஏற்கிறோம் என்றால், அதன் அர்த்தங்களை விரிவாக்கி அனைவருக்கும் ஏற்புடையதாக ஆக்குவதும் அவசியம். 

பெரியார் மண் என்று பெருமைப்படும் நாம், இந்த பெரியார் மண் அனைவரையும் சமமாக நடத்தவில்லை என்று ஒப்புக்கொண்டோமானால் அடுத்தடுத்த விசயங்களைப் பேசலாம்.

*

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பால்புதுமையினர்(Queer people/LGBTQIA+) சுயமரியாதைப் பேரணி நிகழ்வொன்றில் நண்பர்கள், வானவில் கொடியொன்றில் பெரியார் அம்பேத்கர் படங்கள் பொறித்த பதாகை ஒன்றைப் பிடித்திருந்தனர். அங்கிருந்த போலிஸ் ஒருவர் இவர்களும் உங்கள் தலைவர்கள் ஆகிவிட்டார்களா என்ற தொனியில் கேட்டார். அப்போதிருந்த சூழலில் தோன்றியது: பால்புதுமையினரில் பலரும் வேறுபல அடையாளங்களையும் கொண்டிருக்கிறோம், அவற்றின் அடிப்படையில், பொதுச்சமூகத்தின் பகுதி என்பதாகவும் பொதுச்சமூகத்தை முன்னகர்த்திய தலைவர்களை நினைவுகூறுகிறோம் என்பது. ஆனால் இந்த விளக்கத்தின் போதாமைகள் உறுத்திக் கொண்டே இருந்தன. குறிப்பாக பெரியார், இதே தமிழ்ச் சமூகத்தைக் குறித்து அவ்வளவு பேசி இருக்கிறார். அவரது காலத்தில் பால்புதுமையினர் அரசியலும் அடையாளங்களும் அவர் கவனத்துக்கு வராமல் போயிருக்கலாம், ஆனால் பெரியாரியம் பால்புதுமையினர் அரசியலை வெளியிலிருந்து, ஒரு புதிய விசயமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது பால்புதுமையினர் பெரியாரியத்தை தனது பிற அடையாளங்களுக்கான அரசியலாகத்தான் புரிந்துகொள்ள வேண்டுமா? இந்த சமரசத்தின் பிரச்சினைகள் என்ன? தனக்குள்ளே சுயபரிசோதனை செய்து புரிந்துகொள்ள முடியாதா? பெரியார் பேசியவற்றில் நம் உடனடி வாழ்க்கைக்கும் வசதிக்கும் பங்கம் விளைவிக்காதவற்றை ஏற்றுக்கொண்டு, மீதத்தை கிழவர் அப்படித்தான் அதிர்ச்சி ஏற்படுத்த வேண்டி பேசுவார் என்று உதறாமல் யோசிக்க முடியும் என்றால் இதுவும் முடியவே செய்கிறது.

*

இன்பத்திற்காகக் கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத் திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும், உலக விருத்திக்கு என்று புலபுலவென பிள்ளைகளைப் பெறுவதற்கும், ஆண் மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும், திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதனால், அம்மாதிரிக் கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர் களாய் இருக்கிறோம். 

பெரியார், குடி அரசு, 10.03.1929

பெரியார் இந்த வரிகளை எழுதி 90 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. திருமணங்களில் புரோகிதத்தின் ஆதிக்கத்தை சட்ட அளவிலாவது தேவையற்றதாக ஆக்கியிருக்கிறோம். சொத்துரிமை என்பது ஆண்களுக்கு மட்டுமானது என்பதிலிருந்து மாறியுள்ளது. இவை போதாதென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் அடுத்தடுத்த கட்டங்கள் என்ன? மனம்விரும்பிய நபர்கள் ஒன்றிணைந்து வாழ ஆண்-பெண் திருமணம் என்ற அமைப்பு தேவைதானா! அதன் ஆதிக்கம் எவ்வகையில் நியாயப்படுத்தக் கூடியது? சேர்ந்து வாழ்வது என்ற தனிநபர் விசயத்தில், எந்தவொரு நபரும் சுரண்டப்படாதபோது சமூகம் தலையிடுவதற்கு எந்தக் காரணங்களும் இல்லை என்று நாம் பெரியாரின் கருத்தை நீட்டித்துப் புரிந்துகொள்ளலாம்.

குடும்பம், ஆணும் பெண்ணும் நேசித்தல் இவை எதையுமே அவைதான் ‘நார்மல்’ மீதமெல்லாம் குணப்படுத்த வேண்டியது என்ற பார்வை தவறானது என்றும் புரிந்துகொள்ளலாம். ஆண்-பெண் குடும்பத்தை செங்கல்லாகக் கொண்டு நாம் சமூகம் என்ற பெரும் கட்டத்தை எழுப்பும் தேவை இல்லை என்பதையும், ஆண் பெண் என்ற கறாரான இருமையின் அர்த்தமற்ற தன்மையையும் கூட அடுத்தடுத்து புரிந்துகொள்ளலாம்.

எனவே சேர்ந்து வாழும் நபர்கள் ஆண்-பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களது பாலினம் என்னவாகவும் இருக்கலாம். ஏன் ஒருவர் வாழ்க்கையை தனியாகவும் கழிக்கலாம். ஆனால் நமது சமூகம் அதற்கு இடமளிப்பதில்லை. ஆண்-பெண் திருமண உறவைத் தாண்டிய எல்லா பாலியல் உறவுகளையும் அது குற்றமாக்குகிறது. எனவே ஒரு ஆணை விரும்பும் ஆணோ, பெண்ணை நேசிக்கும் பெண்ணோ, தங்களுக்கு பிறப்பில் அளிக்கப்பட்ட பாலினத்தோடு ஒத்துப்போவாதவர்களையோ தங்களையே குற்றவாளிகளாகக் கருதவும், அல்லது அவர்களது காப்பாளர்களாக கருதப்படும் பெற்றோரை அவர்களைத் திருத்த வேண்டும் என்றும், நம் சமூகம் அழுத்தமளிக்கிறது.

இந்தச் சூழலை பாபா ராம்தேவ் போன்ற சாமியார்கள் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய இயல்பான பாலியல் விழைவுகள், காதலைக் கொண்டவர்களை நாங்கள் குணப்படுத்தித் தருகிறோம் என்று சொல்லி பணம் பறிக்கிறார்கள். குணப்படுத்துவது என்ற பெயரில் இவர்கள் தரும் அழுத்தத்தின் காரணமாகவும், அல்லது தங்கள் இயல்பே குணப்படுத்தப் பட வேண்டிய ஒன்றாக கருதப்படுவதன் அழுத்தத்தாலும் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதே நிலைதான், கட்டாயத் திருமணங்களிலும் நடக்கின்றது. தான் வரையறுக்கும் ஒரு குடும்ப வாழ்வில் ஈடுபடமுடியாத பிள்ளை திருத்தப்பட வேண்டியவர், திருத்தமுடியாவிட்டால் கொல்லப்பட வேண்டியவர் என்று கருதும் இடத்தில் சாதிவெறியும் இதுவும் இணைகிறது.

சாமியார்கள் இப்படி நடந்துகொள்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் அறிவியலின் படி நடந்துகொள்ள வேண்டிய மருத்துவர்கள், குறைந்தபட்ச மனிதமும் இன்றி நடந்துகொள்வதே வருந்தத்தக்கது. பெரியாரின் கருத்துகளைப் பின்பற்றுவதாகக் கூறும் மனநல மருத்துவர் ஷாலினி, தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு திருநர்களை, குறிப்பாக திருநம்பிகளைக் குறித்து அவர் பேசியவை வெறுப்பு மிகுந்ததாகவும் அறிவியலுக்குப் புறம்பாகவும் இருப்பதை எழுதியிருந்தோம்.

தற்போது அவர் பேசும்போது நடுவே ஒருபாலீர்ப்பு தவறில்லைதான் என்று அவர் ஒருவரி சொன்னாலும், அவர் பேசும் மீத எதுவும் அதற்கு ஒப்பானதாக இல்லை. வழமையான குடும்ப அமைப்பை இயல்பானதாகவும், அதை மீறுபவர்களை தன்னால் குணப்படுத்த முடியும் என்று அவர் சொல்வதற்கும் பாபா ராம்தேவ் போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் இவற்றை அவர் அறிவியலின் பெயரால் சொல்கிறார் என்பது மட்டும்தான். அதுவும் பல மனநல மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், மனநல மருத்துவ சங்கங்கள் கண்டித்த சிகிச்சைகளை இவர் தன்நலனுக்காக ஆதரித்துப் பேசுகிறார். எனவே இது ஷாலினியுடனான உரையாடல் அல்ல. ஷாலினி என்ற ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம், படாமலும் போகலாம்.

உரையாடல் பால்புதுமையினருக்கும், அவர்களை ஒரு பகுதியாகக் கொண்ட பொதுச் சமூகத்துக்கும். பொதுச் சமூகம் என்ற ஒன்றை வரையறுக்கவோ, உரையாடலுக்கு அழைக்கவோ முடியாது என்பதால், அதில் இன்னொரு பகுதியான ‘பெரியாரியக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டோர்’ உடனான உரையாடல் இது. பால்புதுமையினர் – பெரியாரியர் என்பதை சம்பந்தமற்ற இரு குழுக்களாகப் பார்க்க இயலாது என்ற புரிதலுடனே மேற்கொண்டு செல்லலாம்! ஒருநபர் பால்புதுமையினர் என்பதாலேயே சாதி எதிர்ப்பாளராகவோ, முற்போக்காளராகவோ ஆகிவிடுவதில்லை. அடையாளங்கள் நமக்கு அனுபவங்களை மட்டுமே தருகின்றன. அவற்றின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொள்ளும் உரையாடல்களும், கோட்பாடுகளுமே நம்மை முன்னகர்த்திச் செல்லும்.

*

இங்கே யாரும் இதனைத் தனிப்பட்ட பிரச்சினையாக, ‘அவர்களின்’ பிரச்சினையாகப் பார்க்கத் தேவையில்லை. அனைவரும் சமம் என்ற அடிப்படையில், இவற்றை ஆராய்ந்து புரிந்துகொள்ள மனிதத்தன்மையோடு முற்பட்டாலே போதும். பெரியாரியம் என்பது அப்படித்தான் இயங்க முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல மனநல மருத்துவர் தன்னிடம் வருபவர்கள் தன்னைப் புரிந்து, தன்னை ஏற்று நடந்துகொள்ள உதவுபவராகத்தான் இருக்கமுடியும். இவர் சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்குள்ளானோருக்குத் தேவையாயிருக்கும் மனநல ரீதியான ஆதரவையும் தருவார் என்பதற்கு எந்த நம்பிக்கையுமில்லை. 

மிக அரிய சூழலில் சமூக அழுத்தத்தால் ஒரு ஒருபாலீர்ப்பாளர், அல்லது திருநர் ’குணமாக’ விரும்புகிறார் என்றாலுமே கூட, அவருக்கு முதலில் தனது இயல்பை இயல்பாகக் கருத உதவுபராகவே ஒரு மனநல மருத்துவர் இருக்கமுடியும். எவருடைய பாலீர்ப்பையும் இன்னொருவர் மாற்ற முடியாது. 

இனப்பெருக்கம் தாண்டிய எல்லா பாலியல் ஈர்ப்பும் குற்றம் என்று சொல்வது மதம். அதன் அடிப்படையில் உங்கள் பாலியல் ஈர்ப்பு (ஆண்-பெண் இடையில் ஏற்படுவதை) குறைக்கிறேன் அதிகரிக்கிறேன் என்று சொல்பவர்களை நாம் போலி மருத்துவர்கள் என்று எளிதாக அடையாளம் காண்கிறோம். ஒருநபர் கட்டாயமாக உங்களது பாலியல் ஈர்ப்பை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்கிறேன் என்று எதையும் செய்தால் அது சிகிச்சை என்று ஏற்றுக் கொள்வீர்களா, கொடுமை என்று உணர்வீர்களா? நீங்கள் இயல்பிலேயே உங்கள் எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு கொண்டுள்ளீர்களா, அல்லது அதற்கு வேறு காரணிகள் ஏதும் இருக்கிறதா? என்பன போன்ற விசயங்களை சிந்தித்துப் பாருங்கள். பின்னர் உங்கள் பதில்கள் எல்லா நபர்களுக்கும் பொருந்தும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாதம் கூட கேரளாவில் ஒரு மாணவர் இத்தகைய பாலீர்ப்பு மாற்ற சிகிச்சைக்கு பெற்றோரால் உட்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இத்தகைய கொடுமைகளை முற்றாக அழிப்பதற்கு முதல்படி, இவற்றை முற்போக்கின் பெயரால் செய்யவிடாமல் தடுப்பதே!

*

தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகி விடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

பெண்களின் அடிமைத் தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதை சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் இவ்விஷயத்தில் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே கவலை கொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்களின் விடுதலைக்குப் பெண்களே வேறு எந்த முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளை குட்டிக் காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விரிப்போம்.

பெரியார், பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ‘ஆண்மை’ அழிய வேண்டும், 12.08.1928

பெரியார் இங்கே நேரடியாக சொல்லவரும் கருத்தை 80 ஆண்டுகள் கழித்து நீட்டித்தால் இரண்டு வகையான அரசியலை உருவாக்கலாம்.

முதலாமது, ஒரு தனிப்பட்ட மனிதன் தனக்கென்று குழந்தைகள் இருக்கும்போது பிறர் நலனைவிட அவர்களின் நலனை சிந்திப்பவன் ஆகிறான். சில சமயம் சிந்திப்பவள் ஆகிறாளும் கூட. எனவே நேரடி பிள்ளை வாரிசில்லாத ஒரு நபரே நல்ல தலைவராக இருக்கமுடியும். அத்தகைய தலைவரைக் கொண்டுள்ள அமைப்பு சனநாயகத் துவமானது. மேலோட்டமாக முற்போக்காகத் தெரிந்தாலும் இதன் குறைபாடுகள் நமக்குத் தெரிந்ததே. இத்தகைய அரசியலின் படி வாஜ்பாய் முதல் நரேந்திர மோடி வரை நல்ல, ஊழலற்ற தலைவர்களாக இருந்திருக்க வேண்டும். வாரிசு அரசியல் சனநாயகத் தன்மையற்றது, வெளிப்படையாக தெரிவதைப் பல கேடுகளின் குறியீடுகளாகவும் விளங்குவது. அதே சமயம், அதன் எதிர்ப்பதம் மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அது கேடற்ற பொன்னுலகு குறித்த எந்த உறுதிகளையும் தருவதுமில்லை.

இரண்டாமது புரிதல், நமது எல்லா முற்போக்கு அரசியல்களையும் பிள்ளைகளை, பிள்ளை பெறுதலை அடிப்படையாகக் கொள்ளாமலிருப்பது. ஒரு தனிநபரின் மதிப்பை அவரது இனப்பெருக்கத் திறனை, பங்களிப்பைக் கொண்டு மதிப்பிடாமல், அனைவரையும் சமமாகக் கருதுவது. இப்போது, பெரும்பான்மை பால்புதுமையினர் மீது குடும்பங்கள் சொல்லக்கூடிய குறைபாடென்பது வாரிசில்லாமல் போய்விடும். குடும்ப கௌரவங்கள் போன்ற பிற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, உன்னால் இந்த பரம்பரைக்கு இரத்த வாரிசு இல்லாமல் போய்விடும் என்பதே முக்கியக் குற்றச்சாட்டு. சொத்து நம் குடும்பத்தை விட்டு வெளியே போய்விடும் என்பது இதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் முதன்மையானது. சில பால்புதுமையினர் அதை விரும்பலாம், சிலர் விரும்பாமல் இருக்கலாம். இங்கே தனிநபர் தேர்வுகள் நமது விவாதப் பொருளல்ல. ஒரு சமூகமாக, முற்போக்குக் கருத்தியல் ஒன்றைப் பின்பற்றுவர்கள் என்பதாக, பெரியார் எழுதியதிலிருந்து 80 ஆண்டுகள் கழித்து நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதே. ஆணும் பெண்ணும் சேர்ந்து பிறரது ஒப்புதலுடன் இனப்பெருக்கம் செய்வதான குடும்ப அமைப்புதான் நமது விடுதலைக் கருத்தியலின் மையப்பொருளாக இருக்கிறதா, இல்லை அதைக் கடந்து வந்திருக்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும்.

பிள்ளைகளை அடிப்படையாக கொண்ட அரசியல் நிலைகள் யாவுமே கற்பனையான ஒரு எதிர்காலத்தை நோக்கியவை. அவை நாம் தற்போது எதிர்கொள்ளும் சூழலுக்கு எதிர்வினையாற்ற அல்ல, எதிர்காலத்தில் நாம் சில நபர்களுக்கு(நம் பிள்ளைகளுக்கு) கடமைப் பட்டிருக்கிறோம், அதன் பெயரால் சில சிறிய விசயங்களை செய்யலாம் என்று அழைப்பவை. அவை சிறிய சிறிய நலன்களை தரலாம், ஆனால் ஒரு சமூகத்தில் உள்ள எல்லா முற்போக்கு அமைப்புகளும் எதிர்காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும்போது அந்த எதிர்காலம் வரவும் போவதில்லை, நிகழ்காலத்தில் மாற்றங்கள் நிகழவும் போவதில்லை. நிகழ்காலத்தில் யோசிக்கும்போது நமக்கு கேள்விகள் பலவற்றுக்கும் பதில்கள் கிடைக்காமல் போகலாம், மாற்று அமைப்புகளை யோசிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதையும் கடந்து ஒடுக்குமுறையின் பேராலான அமைப்புகளை அகற்ற செயலாற்றுவதே உண்மையான மாற்றமாகும். அதற்கு நாம் இத்தகைய உரையாடல்களை மேலும் மேலும் நிகழ்த்தவேண்டும்.

பெரியாரின் பிள்ளைகள் அல்ல பெரியாரின் தோழர்களே அத்தகைய மாற்றத்தையும் உரையாடலையும் நிகழ்த்த முடியும்.

~*~*~

இந்த கட்டுரை முதலில் வயலட்டின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டது