186 வருட ஒடுக்குமுறையின் முடிவுக்குப் பின்

இந்தியத் தண்டனைச்சட்டம் 377 இயற்கைக்குப் புறம்பான உறவுகளை தண்டனைக்குரிய குற்றமாக வரையறுத்து இருந்தது. இயற்கைக்குப் புறம்பான உறவுகள் என குழந்தை பிறப்பதற்காக செய்யும் உறவுகளைத் தவிர மனிதர்கள் மேற்கொள்ளும் அனைத்து உறவுகள் (வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவாய்வழிப் புணர்ச்சி),  விலங்குகளுடன் உறவு கொள்வது, குழந்தைகளை வன்புணர்வது) என இந்தியத் தண்டனைச் சட்டம் வரையறுத்திருந்தது. இதன்மூலம் ஆணும் பெண்ணும் “கலாச்சாரப்படி திருமணம்” செய்து கொண்டாலும் கூட அவர்கள் ஆசனவாய் வழிப் புணர்ச்சியோ, வாய்வழிப் புணர்ச்சியோ செய்வதும் பத்து ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கக் கூடிய குற்றமாகவே இருந்தது. இந்நிலையில் பால்புதுமையினரே வாய்வழிப் புணர்ச்சி, ஆசனவாய்வழிப் புணர்ச்சி செய்வார்கள் மற்றும் அவர்களுக்கே அதற்கான தேவைகளும் இருக்கின்றன என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் சட்டம் முற்றிலுமாக பால்புதுமையினர் பக்கம் அவர்களுக்கு மட்டுமே எதிரான ஒருச் சட்டமாக மாற்றிவிடப் பட்டது. ஒருகாலகட்டத்தில் பால்புதுமையினருக்காக எச்ஐவி / எயிட்ஸ் தொடர்பான பணிகள் செய்யும் என்ஜிஓக்களை இந்தச் சட்டம் அவர்களது பணியினைச் செய்யவிடாமல் தடுத்தது. அவர்களும் இப்பிரிவை நீக்க வேண்டும், இது பால்புதுமையினருக்கு எதிரானது எனக் குரலெழுப்பத் தொடங்கினர். 

எயிட்ஸ் பெத்பவ் விரோதி அந்தோளன் (ABVA) எனும் என்ஜிஓ ஆண்களின் பாலியல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் எச்ஐவி தடுப்புப் பணியில் வேலை செய்து வந்தது. 1991-ல் பால் புதுமையினர் என்ன மாதிரியான அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள், அதற்கு பிரிவு 377 எவ்வாறெல்லாம் துணைபோகிறது என்ற ஒரு 70 பக்க அறிக்கையை அவர்கள் பிரஸ் கிளப்பில் வெளியிட்டனர். பெரும்பாலான பத்திரிக்கைகள் அந்தச் செய்தியை வெளியிட மறுத்துவிட்டன.

பின்னர் 1994-ல் டெல்லி திஹார் ஜெயிலில் ஓர்பால் உறவுகள் அதிக அளவில் நடப்பதாக சுகாதார தினத்தன்று சிகிச்சை செய்ய, டெல்லி எயிட்ஸ் கண்ட்ரோல் போர்டுடன் தொடர்பிலிருந்த டாக்டர் அகர்வால் தெரிவித்தார். மூன்றில் இரண்டு பங்கு சிறைக்கைதிகள் ஓர்பால் உறவில் ஈடுபடுவதாக சொன்னதாகவும் எச்ஐவி எயிட்ஸ் பரவாமல் இருக்க திஹார் ஜெயிலில் காண்டம் வழங்க வேண்டும் எனவும்  அவர் தெரிவித்தார். இதைக் கடுமையாக எதிர்த்த அப்போதைய சிறைத்துறை ஐஜியான கிரண்பேடி சிறைக்குள் புகார் பெட்டியை வைத்து ஒரு சர்வே நடத்தினார். அதன் முடிவில் சிறைக்குள் ஓர்பால் உறவுகள் கிட்டத்தட்ட நடைபெறவேயில்லை எனத் தெரிவித்தார். டாக்டர் அகர்வாலின் கருத்தை நிராகரித்ததோடு அந்த குற்றச்சாட்டுககளால் தனது கைதிகள் மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்தார்.

சிறையில் இருப்பவர்கள் எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களது பாலியல் தேவை காரணமாக அவர்கள் ஓர்பால் உறவில் ஈடுபடும் போது அவர்கள் அனைவரையும் ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் என்றோ பால்புதுமையினர் என்றோ வகைப்படுத்த முடியாது. ஆனால் அவர்களுடைய பாலியல் நடவடிக்கைகள் இந்த வழக்கைத் தொடரவும் அதில் விவாதம் ஏற்படவும் காரணமாக இருந்தது. பெண் மீது எந்த ஈடுபாடும் இல்லாமல் குடும்பம், கமூகம் போன்றவற்றின் காரணமாக ஓர்பாலீர்ப்பு கொண்டவர்கள் பெண்ணுடன் உறவு கொள்வதும் இதுபோன்ற ஒரு நடவடிக்கை தான். பாலீர்ப்பும், பாலியல் நடவடிக்கைகளும் எல்லா சூழ்நிலையிலும் ஒன்றாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் ABVA திஹார் ஜெயிலில் காண்டம் வழங்க வேண்டும் எனவும் ஓர்பால் உறவுக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ நீக்கவேண்டும் எனவும் டெல்லி ஹைகோர்டில் ஒரு ரிட் பெட்டிஷனைத் தாக்கல் செய்தது. அந்த மனு 2001-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

பின்னர் 2001-ல் ஓர்பால்ஈர்ப்பு கொண்டவர்களுக்கு ஆதரவாக ஒரு பொதுநல வழக்கு நாஸ் பவுண்டேஷனால் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2004-ல் அம்மனு நிராகரிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடும் அதே ஆண்டு நிராகரிக்கப்பட்டது.

பின்னர் 2006-ம் ஆண்டு நாஸ் பவுண்டேஷன் அளித்த மனுப்படி இந்த வழக்கை திரும்ப நடத்துமாறு உச்சநீதிமன்றம் டெல்லி உயர்நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. பின்னர் பிரிவு 377-கு எதிரானவர்கள், என்ஜிஓக்கள், மத்திய உள்துறை அமைச்சகம் என அனைவரும் தங்களை இவ்வழக்கில் இணைத்துக் கொண்டனர்.

2009-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க  தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் விருப்பமுள்ள 18வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒப்புதலுடன் உறவுகொள்வது தவறல்ல என இருந்தது. இந்தத் தீர்ப்பு பால்புதுமையினருக்கு ஆதரவானது என்று நம்பப் பட்டது. மேலும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு என்பதால் டெல்லியில் மட்டுமே செல்லும் என்றும் நாடு முழுவதும் செல்லும் எனவும் இருவேறு கருத்துக்கள் நிலவியது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அத்தீர்ப்பு செல்லாது என 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது. பிறகு உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப் பட்டவர்களால் மேல்முறையீடு செய்யப்பட்டபோது இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது.


பல போராட்டங்களுக்கு பிறகு இறுதியாக 2018 செப்டம்பர் ஆறாம் தேதி இபிகோ பிரிவு 377ல் மாற்றம் கொண்டு வந்து ஒப்புதலுடன் கூடிய இருவர் உறவு கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் அறிவித்தது.2009-ன் டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான விவாதங்களில் 377- ஐ நீக்கும் போது குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் இல்லாமல் போய்விடும் என்பது குழந்தைகள் நல ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. பின்னர் 2012-ல் பாலியல் கொடுமைகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் போஸ்கோ சட்டம் கொண்டுவரப்பட்டது. குழந்தைகளுக்கென்று தனியாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு 377-ன் தேவை குறித்த விவாதம் குறைந்து போயிற்று.

இத்தீர்ப்பு வெளியான பிறகு இத்தீர்ப்பு பற்றியும் அதன் சாதக பாதகங்கள் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.  பால்புதுமையினரின் மொத்த வாழ்க்கையும் இபிகோ பிரிவு 377-ஐச் சுற்றியே பல காலமாக கட்டமைக்கப் பட்டிருந்தது. பிரிவு 377 நீக்கப்பட்டால் அனைத்து விதமான உரிமைகளும் கிடைத்துவிடும் என்பது போலான ஒரு பிம்பம் உருவாக்கப் பட்டிருந்தது. இப்போது பிரிவு 377 நீக்கப் பட்டிருக்கிறது. அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றைப் பற்றிய உரையாடல்கள் இனிமேல் தான் தொடங்கப் படும். பிரிவு 377க்கு எதிரான போராட்டங்கள் 90களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் வெளிப்படையாக தீவிரமடைந்தது. இப்போராட்டத்தில் லட்சக் கணக்கான பால்புதுமையினர் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தனர். வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் பிரிவு 377 நீக்கப்பட வேண்டும் என்கிற முழக்கம் எழுப்பப் பட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆதரவான இத்தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் பால்புதுமையினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததைச் சுற்றி பல அரசியல் காரணங்கள் இருக்கின்றன. இத்தீர்ப்புக்கு பிறகு இபிகோ பிரிவு 377 ஐ நீக்கக் காரணமான ஐந்துபேர் என பல பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. 377க்கு எதிரான வழக்கில் பல சூழ்நிலைகளில் பலர் தங்களை மனுதாரராக இணைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வரிசையில் சமீபத்தில் தங்களை இணைத்துக் கொண்ட இந்த ஐந்து பேர் மட்டும் இத்தீர்ப்பைப் பெறக் காரணமானவர்கள் என ஒரு பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது. அந்த அனைவரும் வர்க்கரீதியாக மிகவும் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் தாங்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் நன்றாகப் படித்து இருந்தாலும் இபிகோ பிரிவு 377 இருப்பதால் தங்களால் தலை நிமிர்ந்து வாழ முடியவில்லை எனவும் அவமானமான ஒரு வாழ்க்கையை வாழ்வதாகவும் தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இவர்களது கருத்தின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை வழங்கவில்லை என்றாலும் இத்தீர்ப்பைப் பெற்றுத் தந்தவர்கள் என்கிற அங்கீகாரத்தை அவர்களுக்கு ஊடகங்கள் அளிப்பதைக் கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது. 

அதே நேரம் அம்மனுவின் தன்னை இணைத்துகொண்ட அரிப் ஜாபர் முக்கியமானவர். தான் வேலை பார்த்த பரோசா டிரஸ்டிலிருந்து 2001-ல் ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களுக்கு காண்டம் வழங்கும்போது 377-ன் கீழ் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் 47 நாட்கள் வைக்கப்பட்டு கடும் சித்தரவதைக்கு ஆளானார். பிறகு 17 வருடங்களாக நடந்து கொண்டிருந்த இந்த வழக்கு ஜாபரின் ரிட் மனுவாலும், 377-ல் இருந்து ஒருபால் உறவு நீக்கப்பட்டதாலும் முடிவுக்கு வந்தது.

377க்கு எதிரானப் போராட்டங்கள் பொது வெளியில் நடைபெற தொடங்கிய பிறகு தான் பெருமளவில் கவனம் பெறத் தொடங்கியது. அப்போராட்டங்களின் ஒரு வடிவமாக வானவில் பேரணிகள் நடைபெற்றபோது ஆரம்ப காலங்களில் அதை முன்னெடுத்தவர்கள் திருநங்கைகளும், ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள் என என்ஜிஓக்களால் வகைப்படுத்தப்பட்ட ஓர்பால் உறவில் ஈடுபடும் ஆண்களுமே. அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு அது உயர்தட்டு ஆண்களுக்கான அங்கீகாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் இருக்கிறது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோதி தலைமையிலான வலதுசாரி அரசு இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் எதிரானதாக இருக்கும் சமயத்தில் உலக நாடுகளின் மத்தியில் தன்னை முற்போக்கானதாகவும் அனைத்து மக்களுக்குமான அரசாகவும் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால் இபிகோ பிரிவு 377 ஐ நீக்குவதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனும் கருத்தும் நிலவுகிறது. அதை வைத்து மோதி பால்புதுமையினருக்கான ஒரு தலைவர் என்கிற பிம்பத்தைக் கட்டமைக்கும் முயற்சியும் நடைபெறும். காரணம் என்னவாக இருந்தாலும் மோதி தலைமையிலான வலதுசாரி அரசு பால்புதுமையினருக்கு ஆதரவான அரசாக மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசாக எப்போதும் ஆகமுடியாது.

“ஒரு தனிநபரை அவரது அடையாளத்தின் காரணமாக வெறுப்பதை விட்டுவிட்டு அவரை அவராகவே ஏற்றுக் கொள்ளும் மனநிலையை நாம் வளர்க்கவேண்டும். தன்னுடைய துணையை ஒருவர் தேடிக்கொள்வது, அவரது ஆசைகள், அவரது காதல் என அவரது தனிப்பட்ட எந்த விருப்பங்களிலும் தலையிட அரசுக்கோ சட்டத்திற்கோ உரிமையில்லை. மேலும் ஓர்பால் உறவு சட்டத்திற்கு புறம்பானது என்று இருப்பதை நீக்குவது முதல்படி தான் என்றாலும் அடுத்தடுத்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

இத்தீர்ப்பிற்குப் பிறகு செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. அதுதொடர்பாகவும் பால்புதுமையினர் சமூகத்தில் விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. பால்புதுமையினருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்கள், அவர்கள் இணைந்து வாழ முடிவெடுக்கிற பட்சத்தில் அவர்களுக்கான திருமணச்சட்டங்கள், சொத்து தொடர்பான சட்டத் திருத்தங்கள், குழந்தைகள் தத்தெடுப்பு பற்றிய சட்டங்கள் என நிறைய சட்டங்களைப் பற்றி உரையாட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கின்றன. இம்மாதிரியான உரையாடல்கள் அனைத்தும் பெருநகரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. எனவே தேவைகள் அனைத்தும் பெருநகர பால் புதுமையினரின் தேவைகளாகவே இருக்கிறது. இம்மாதிரியான உரையாடல்களை சிறுநகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நகர்த்த வேண்டும். அம்மக்களின் தேவைகளை அறிந்து அதுவும் நிறைவேற்றப் படவேண்டும். இவை அனைத்தும் பால்புதுமையினர் செய்ய வேண்டியவையே.

படிக்கும்போதே பாலினம்/பாலீர்ப்பு காரணமாக பாதியிலேயே ஆசிரியர்களாலும், சக மாணவர்களாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. பின்னை வேலை செய்யும் இடங்களிலும் பால்புதுமையினருக்கு பணி பாதுகாப்பை வழங்குவதற்கு என சிறப்புச் சட்டங்கள் எதுவுமில்லை. வீட்டிலிருந்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் துரத்தப்படாமலிருக்கவும் எந்த சட்டப் பாதுகாப்புமில்லை. பொது இடங்களில் பால்புதுமையினர் தங்கள் அடையாளத்தோடு சுதந்திரமாக நடமாடக் கூட முடியாது.  அவை அனைத்தையும் பெற வன்கொடுமைகளுக்கு எதிரான சிறப்புச் சட்டங்கள் உதவி செய்யும்.

அடுத்ததாக எச்ஐவி/எயிட்ஸ் நோய்த் தடுப்பு பணிகளுக்கு பிரிவு 377 தடையாக இருப்பதாக தெரிவித்த என்ஜிஓக்களுக்கு அந்த பிரச்சினை நீங்கி விட்டது. அடுத்தடுத்து எப்படி நகர்வது என்பதைப் பற்றி அவர்கள் யோசிக்கத் தொடங்க வேண்டும். மேலும் அவர்கள் திஹார் சிறையில் சட்டத்துக்கு புறம்பானவர்கள் என்று அடையாளப் படுத்தப் படுவதால் மறைந்து வாழும் மக்களைக் கண்டுபிடிப்பதே அவர்களின் முக்கியப் பணியாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து எச்ஐவி எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பணிகளில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதையும் நாம் பார்க்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை எச்ஐவி/எயிட்ஸ் பிராஜக்டுகள் இனிமேல் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே அவர்கள் பால்புதுமையினரின்  தேவைகள் குறித்து ஒரு நாடு தழுவிய உரையாடலை நிகழ்த்தவேண்டும். என்ஜிஓக்களுக்கு முழுக்க ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றாலும் அவர்களால் மட்டுமே கிராமங்களுக்குள்ளும், சிறு நகரங்களுக்குள்ளும் இதுவரை நுழைய முடிந்திருக்கிறது என்பதால் அவர்களது தேவையும் இருக்கிறது.

இனி இத்தீர்ப்பு வெளிவந்தபிறகு பொதுச்சமூகம் தங்களை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முதலாவதாக மதவாதிகள் மற்றும் பிற்போக்குவாதிகள். அனைத்து மதமுமே சுதந்திரமான சிந்தனையை எதிர்ப்பதாலும், மந்தை மனநிலையுடன் வாழ ஊக்குவிப்பதாலும் தங்களது மதம் சார்ந்து பால்புதுமையினருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரங்களை முழுவதுமாக எதிர்க்கிறார்கள். பாஜகவைச் சார்ந்த எச் ராஜா விலங்குகளும் தாவரங்களும் ஓர்பாலீர்ப்பு கொள்வதில்லை எனச் சொல்கிறார். விலங்குகளிலும் பறவைகளிலும் ஓர்பாலீர்ப்பு, ஈர்பாலீர்ப்பு என்பதெல்லாம் வெகுசாதாரணமாக இருக்கிறது. தாவரங்கள் எனக்குத் தெரிந்து உடலுறவு கொள்வதில்லை. இதேபோலத்தான் கிறுத்தவத்தையும், இஸ்லாமையும் பின்பற்றும் மதவாதிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்களுடனான உரையாடல் என்பது நடத்தவே முடியாத ஒன்று. 

அடுத்து பெரிய அளவிலான மதவாதிகளாக இல்லாமல் எல்லா விஷயங்களிலும் தங்களது கருத்துக்களை வெளியிடும் பலரும் பி377 நீக்கப்பட்டதை கிண்டலான மனநிலையுடனே அணுகுகின்றனர். இனிமேல் பொது இடங்களில் ஓர்பாலீர்ப்பாளர்களின் தொந்தரவு அதிகமாகி விடும் என்பதுபோன்று இத்தீர்ப்பைக் கிண்டல் செய்கின்றனர். ஒருவருடைய ஒப்புதல் இல்லாமல் அவர் மேல் செலுத்தப்படும் எதுவுமே தவறுதான் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இருவர் விரும்பி நடக்கும் உறவுகளைப் பற்றி பேசும்போது உரிமை கிடைத்தாலே பால்புதுமையினர் தவறுதான் செய்வார்கள் என்கிற முன்முடிவுடன் இருப்பது அவர்களை வழக்கமாக கேவலமாக சித்தரிக்கும் மனநிலையின் வெளிப்பாடு தான் மேலும் விருப்பமில்லாதவர்களிடம் உறவு வைக்க முற்பட்டால் அது யாராக இருந்தாலும் தவறுதான். ஆண் பெண் எனும் எதிர்பாலீர்ப்பிலும் அது மாதிரியான தவறுகள் நடைபெறுவதால் ஒப்புதலில்லாமல் நடைபெறும் உறவு குற்றம்  என்பதை பொதுவான எல்லாருக்குமான உரையாடலாக நடத்தவேண்டும். வழக்கம் போல் அதையும் பால்புதுமையினருக்கான ஒன்றாக ஒதுக்கி வைக்க முடியாது.

அதேபோல் ஒர்பாலீர்ப்புக்கான அங்கீகாரம் என்பது மக்கள்தொகையைப் பெருமளவில் குறைக்கும் என்பது போன்ற சந்தேகங்களையும் இவர்கள் எழுப்புகின்றனர். தனக்கு விருப்பமானவர்களுடன் ஒப்புதலுடன் கூடிய உறவுக்கு தான் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே தவிர அனைவரும் ஓர்பால் உறவில் ஈடுபடவேண்டும் என எந்த சட்டமும் இயற்றப்படவில்லை.

மனிதனின் அரியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக “குடும்ப அமைப்பைக்” கூறுபவர்கள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கான அங்கீகாரம் என்பது குடும்ப அமைப்புகளை சிதைத்துவிடும் மேலும் ஒருவேளை அவர்களுக்கு குழந்தைகள் வளர்க்கும் உரிமையைக் கொடுத்தால் இரண்டு தாய் அல்லது இரண்டு தந்தைகளுடன் வளரும் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்காது என்பது மாதிரியானக் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இரண்டு குழந்தை அல்லது இரண்டு தாயுடன் வளரும் குழந்தைகளுக்கு அந்தக் குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் ஒரு எதிர்பால் ஈர்ப்புகொண்ட பெண் தனியாக ஒரு குழந்தையுடன் வசிக்கும் போது அவரையே கேவலமாக நடத்தும் பொதுச் சமூகம் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு குழந்தையோடு வசிக்கும் போது எப்படி நடத்தும் என்றும் பார்க்க வேண்டும். அது பொதுச் சமூக புத்தியில் ஏற்பட வேண்டிய மாற்றம் தானே தவிர அதற்கானப் பொறுப்பையும் கொண்டு பால்புதுமையினரின் தலையில் திணிக்க முடியாது. மேலும் குடும்ப அமைப்பும் கூட்டுக் குடும்பம் என்பதிலிருந்து தனித் தனிக் குடும்பங்கள் எனக் காலத்திற்கு ஏற்றாற்போல மாரீக் கொண்டு தான் இருக்கின்றன. எனவே குடும்பங்கள் எவ்வாறு இருந்தாலும், யாருடனும் இல்லாமல் ஒருவர் தனியாக இருந்தாலும் அவர்களை எந்த வரையறைக்குள்ளும் அடக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வது பொதுச்சமூகத்தின் கையில் உள்ளது.

சிலர் இந்த தீர்ப்பை வரவேற்கிறார்கள். அவர்கள் பால்புதுமையினருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் அதோடு நின்றுவிடாமல் பால்புதுமையினரின் தேவைகளையும் பேசத் தொடங்குகிறார்கள். அவர்கள் பால்புதுமையினரோடு எப்போதும் உரையாடல்கள் நடத்தியதில்லை. அவர்கள் தேவைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்துப் பேசியதில்லை. அவர்களாகவே தேவைகள் இதுவாகத் தான் இருக்கும் என்று பேசுகின்றனர். பால்புதுமையினருக்கு ஆதரவு தெரிப்பவர்கள் செய்ய வேண்டியது பால்புதுமையினரின் தேவைகளை அவர்கள் பேசாமல் இருப்பது, பால் புதுமையினர் பேசும்போது அதற்கு ஆதரவு தருவது போன்றவையே. சமயங்களில் பொது இடங்களில் பால்புதுமையினருக்கு எதிராக கருத்து வரும் இடங்களில் எல்லா சமயமும் பால்புதுமையினரால் பேசமுடியாது. அம்மாதிரியான சமயங்களில் எதிர்பாலீர்ப்பு கொண்டவர்கள் ஆதரவாகப் பேசுவது மட்டுமே மிகச் சிறந்த உதவியாக இருக்கும்.

377ஐ நீக்குவதாக வெளியான தீர்ப்புக்கு பிறகே பால்புதுமையினரின் உண்மையான போராட்டங்கள் தொடங்குகின்றன. இதுவரை விருப்பத்துடனோ விருப்பம் இல்லாமலோ 377 என்கிற ஒற்றை நோக்கத்துடன் பயணித்தவர்களுக்கு இனி பேசுவதற்கான விஷயங்கள் மாறி இருக்கின்றன. இதுவரை பால்புதுமையினருக்குள் இருந்த சாதி ரீதியான வேறுபாடுகள், வர்க்க ரீதியான வேறுபாடுகள், பெண்களுக்கு தேவையான இடத்தை அளிப்பதில் இருக்கும் முரண்பாடுகள் என்பது குறித்த உரையாடல்கள் மிக மிகக் குறைந்த அளவே பால்புதுமையினர் சமூகத்தில் நடந்து வந்தது. அந்த உரையாடல்கள் இனி அனைத்து தளங்களிலும் கொண்டு செல்லப்பட வேண்டும்.

Social Justice Pride Flag at Chennai Pride

படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள தங்களால் நல்ல வாழ்க்கை வாழ முடியவில்லை என்று சொன்னவர்களோடு சேர்ந்து, படிக்கார நல்ல வேலையில் இல்லாத மற்றவர்களுக்கும் சமுதாயத்தில் நல்ல நிலையில் வாழ உரிமை உண்டு என்பதை நோக்கி பயணிக்கத் தொடங்க வேண்டும்.

ஐந்து பேர் கொண்ட நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்ஹோத்ரா “பால்புதுமையினரையும் அவர்களது குடும்பங்களையும் இத்தனை காலம் ஒதுக்கியும் அவமானப் படுத்தியும் வைத்ததற்கும், அவர்களுக்கான நீதியை இத்தனை காலம் தாழ்த்தி வழங்கியதற்கும் இத்தனை காலம் பயத்தோடு வாழ்ந்த அம்மக்களுக்கு வரலாறு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

வரலாற்றின் மன்னிப்பை விட இத்தனை காலம் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்த மக்கள் உரிமைக்கான தங்களது முதல் வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அவர்கள் சுயமரியாதையுடன் வாழ அடுத்தடுத்து போராட்டங்களை முன்னெடுக்கும் போது அவர்களுக்கு பொதுச்சமூகம் ஆதரவாக இருப்பதே அவர்களுக்கான பெரிய உதவியாக இருக்கும்.