சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான் – விமர்சனம்

Shubh Mangal Zyada Saavdhan (சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்)

படத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால்,

ஆதிக்க சாதிக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தனது பாலீர்ப்பை சகோதரர்களிடம் வெளிப்படுத்துகிறான். அவன் சகோதரர்கள் அவனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். அவனிடம் பேசும்போது மகிழ்ச்சியாக இதைச் சொன்னான். அதன்பிறகு அவனது சகோதரர்கள் அவனைப் பற்றி பெற்றோரிடம் பேசப்போவதாகச் சொன்னான். பயங்கர எதிர்பார்ப்போடு இருந்தான். நானும் அவன் பேசிமுடித்து அழைப்பான் என ஆர்வமாக இருந்தேன். ஒருநாள் முழுக்க எந்த தகவலும் இல்லை. அடுத்தநாள் அழைத்துப்பார்த்தேன். அப்போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒருவாரம் தொடர்ந்து முயற்சி செய்தேன். பின்னர் யாரோ எடுத்து நான் கேட்ட பெயரில் யாரும் இல்லை எனச் சொல்லி வைத்து விட்டார்கள். அவன் வசித்த வீடும் தெரியாது. அவனது தெரு மட்டுமே தெரியும். அங்கு சென்று இரண்டு மூன்று நாட்கள் நின்றிருக்கிறேன். பிறகு ஒரு வருடத்திற்கு தொடர்ந்து போன் செய்திருக்கிறேன். அவனைப் பற்றி எதுவும் தெரியவில்லை. இந்த சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் அவனை எங்காவது பார்த்துவிட மாட்டோமா, திடீரென எதிரில் வந்து நின்றுவிடமாட்டானா என அடிக்கடி தோன்றும். குறைந்த பட்சம் அவன் உயிரோடு இருக்கிறான் என்கிற தகவலாவது யார் மூலமாவது வராதா என இருக்கும். இன்று வரை எதுவும் நடக்கவில்லை.

இது ஒரு கதை தான். இம்மாதிரியாக ஆயிரக்கணக்கில் கதைகள் எங்களுக்கு இருக்கிறது. ஒடுக்கப்படுதலின் வலியும், பொதுச் சமூகத்தின் வன்முறையின் காயங்களுமென ஆயிரம் ஆயிரம் கதைகள். அந்தக் கதைகள் எங்குமே பதிவு செய்யப்படாத கதைகள். எங்களுக்குள்ளான சந்திப்புகளில் மட்டும் உரையாடப்பட்டு முடிந்துபோகும் கதைகள். அந்தக் கதைகளில் ஏதாவது ஒன்று இப்படத்தில் வருகிறதா எனில் ஒன்று கூட இல்லை. இது எங்களில் ஒருவரால் எடுக்கப்பட்ட கதை இல்லை. எங்களின் பிரதானப் பிரச்சினையாக பொதுச்சமூகம் புரிந்துகொண்ட கதை. சாப்பிட்டு வயிறு நிறைந்ததும் கடைசிவாய் சோற்றை “சீ பாவம்ல” என நாய்க்குப் போடுவது மாதிரியாக போடப்பட்ட ஒரு கதை.இப்படத்தில் எதுவும் இயல்பாக இல்லை. யாருமே இயல்பாக இல்லை. ஏதோ சரியாக ஒத்திகை செய்யப்படாத பள்ளி நாடகம் போல் கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக ஒருபாலீர்ப்பு மற்றும் coming out குறித்த உரையாடல்கள். ஒருநாள் பெற்றோர் முன்னிலையில் தனது பாலீர்ப்பை வெளிப்படுத்துவது மட்டுமே coming out ஆவது என்பது என்ன மாதிரியான அபத்தமானப் புரிதல் என்று தெரியவில்லை. ஒருபாலீர்பப்பு கொண்டவர்கள் அவர்களது வாழ்க்கையில் தினமும் ஒருவரிடம் coming out ஆக வேண்டும். வேறு வேறு மனிதர்கள் வேறு வேறு சூழ்நிலைகள் என வெறுப்பையோ ஏற்றுக்கொள்லுதலையோ சந்தித்துக் மொண்டு இருக்க வேண்டும். அது தரும் வலிகளும் மன அழுத்தங்களும் சொல்லி மாளாது. ஆனால் இப்படத்தில் coming out என்பதோ ஒருபாலீர்ப்பு குறித்த புரிதலை ஏற்படுத்துவது என்பதோ என்னவென்றே புரியாத விதத்தில் நிகழ்கிறது.

அடுத்ததாக உரையாடல்கள். பால்புதுமையினர் சமூகத்தினுள் பலவிதமான மக்கள் வாழ்கிறோம். ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரையாடல்கள், தனிப்பட்ட வார்த்தைகள் என எங்களது மொழியே வேறானது. ஆனால் இப்படத்தில் hetrosexual மக்கள் காலம் காலமாகப் பேசி அலுத்துப்போன மொழியை இரண்டு ஆண்கள் பேசுகிரார்கள். அது எங்களது மொழி அல்ல. நான் அன்னியப்பட்டு தான் அந்த மொழியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் அது போல் பேசுவதில்லை.

குடும்பத்தினருக்கு தங்களது பாலீர்ப்பை வெளிப்படுத்த எதற்கு ஒரு காதல் இருக்க வேண்டும் எனப் புரியவே இல்லை. காதல் இல்லாமலும் பாலீர்ப்பைப் பற்றிப் பேசமுடியும். மறுபடியும் காதலுக்காக நாங்கள், எங்கள் மனதுக்கு பிடித்த ஒருவனுடன் வாழவே எங்களது பாலீர்ப்புக்கான அங்கீகாரம் வேண்டும் எனப் பேசுவதெல்லாம் காதல் இல்லாத காதல் வேண்டாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எங்கள் உரிமை எங்களின் காதல் சார்ந்ததோ திருமணம் சார்ந்ததோ அல்ல. எங்கள் உடல் சார்ந்தது. மனம் சார்ந்தது.

அதிகப்படியான trauma-வை நான் சந்திக்கும் போது எனக்கு படபடப்பாகும். உடல் எல்லாம் வேர்த்து கை கால்கள் நடுங்கும். அப்படியான உணர்வு ஆயுஷ்மான் குரானா அடி வாங்கும்போது வந்தது. எங்கள் மேலான வன்முறைகள் ஸ்லோமோஷனில் குச்சி வைத்து அடித்து நகைச்சுவைக்கான பின்னணி இசையுடன் ஆடியன்ஸ் சிரித்து சிரித்துப் பார்க்க நடப்பதல்ல. அந்த அடிகளும் வன்முறைகளும் நிஜமானது. கடைசிப் பாதுகாப்பாக இருக்கும் குடும்பம் தொடங்கி முன்பின் தெரியாத யார் மூலமாக எல்லாமோ நடக்கக் கூடியது. என்னுடைய பாலீர்ப்பு குறித்து தெரிய வந்த போது உடன் படித்த ஒருவன் யாரென்றே தெரியாத இரண்டு பேருடன் வந்து என்னை அடித்தான். “உன்னை நான் எப்டி எல்லாம் நினைச்சேன். நீ ஏன் இப்டி இருக்க?” என கன்னங்களில் மாறி மாறி அறைந்ததையோ, வயிற்றில் மிதித்ததையோ நிஜத்தில் அனுபவித்தவன் நான். என்னுடைய வலி தான் அங்கு நகைச்சுவை ஆனது எனும்போது அது எனது படமே அல்ல.

377 குறித்த உரையாடலை அம்மா கதாபாத்திரம் நடத்துகிறது. சித்தப்பா பாத்திரம் நடத்துகிறது. அது ஒருபாலீர்ப்பு கொண்டவர்களுக்கு எதிரானதாக காட்டுகிறது. இறுதியில் உச்சநீதிமன்றம் 377 ஐ நீக்க, பூமழைத்தூவ வசந்தங்கள் வாழ்த்த திரைப்படம் முடிகிறது.

முதலில் 377 எங்களுக்கு எதிரானது அல்ல. பாலியல் உறவு கொள்ளும் அனைவருக்கும் எதிரானது. கவனமாக அந்த சட்டத்தை எங்கள் தலையில் சுமத்தி நாங்களும் நம்பி அதற்கெதிராகப் போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் அச்சட்டம் சொல்லும் எல்லா ïlleegal sexual activities” எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களாலும் சேர்த்து தான் நிகழ்த்தப்பட்டது. இறுதியில் ஒரு நாள் அச்சட்டம் போனதும் ஏதோ எங்களது வாழ்க்கை பூத்துக் குலுங்கும் என்றுதான் நாங்களும் நினைத்தோம். ஒரு மயிறும் நடக்கவில்லை.

ரெயின்போ கேப் (cape) போட்டுக்கொண்டு 6 pack காட்டி ஹோமோபோபியாவுக்கு எதிராகப் பேசுவதும், பெற்றோர்களிடம் காதலனைக் கல்யாணம் செய்து வைக்கக் கெஞ்சுவதும் மட்டுமே எங்களது வேலை அல்ல. எயிட்ஸ் மற்றும் எச்ஐவி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அதையும் எங்கள் தலையில் கட்டி வைத்து அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததில் தொடங்கி இப்போது வேலை, சமஉரிமை எனப் போராடுவது வரையிலான கடந்த முப்பதாண்டு வரலாறே எங்களுக்கு அவ்வளவு இருக்கிறது.

ஹரீஷ் ஐயரின் அம்மா வரன் வேண்டிக் கொடுத்த அறிவிப்பை தொடர்ந்து சாதியத்துக்கு எதிரான குரல், வர்க்க பேதத்துக்கு எதிரான குரல் என எங்களது குரலை அடுத்தடுத்த இடத்துக்கு நகர்த்தி வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கெஞ்சுவது தான் எங்களது குரல் என நினைப்பீர்கள் எனில் அது எங்களது குரலே அல்ல.

“எனது அப்பா படிப்பறிவு இல்லாதவர். புரிந்து கொள்ள மாட்டார், உனது குடும்பம் அப்படியல்ல புரிந்து கொள்ளும்” என ஆயுஷ்மான் குரானா கூறும் காட்சிகள் வருகிறது. உண்மை அது அல்ல. படிப்பறிவில்லாத உழைக்கும் வர்க்க மக்களில் பலர் தங்களது குழந்தைகளை அவர்களாகவே ஏற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

தொடர்ந்து சொல்லுவது தான், ஆனாலும் இனியும் பலமுறை சொன்னாலும் புரியுமா என்று தெரியவில்லை. எங்களின் கதைகளுக்கு சாட்சியாக நாங்கள் மட்டுமே இருக்கிறோம். எங்களால் மட்டுமே எங்களது கதைகளைச் சரியாகச் சொல்ல முடியும். Orange is the new black, transparent, Sense 8 போன்ற தொடர்களில் கதை உருவாக்கத்தில் தொடங்கி பால்புதுமையினரின் பங்களிப்பு இருக்கிறது. பால்புதுமையினரின் கதைகளை அவர்களே சொல்கிறார்கள். அந்த கதைகளில் உண்மை இருக்கிறது. கலாச்சார ரீதியாக வேறுபட்டிருந்தாலும் கூட அக்கதைகளோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து படம் இம்மாதிரியான படம் எடுப்பவர்கள் செய்ய வேண்டியது எங்களது கதைகளைச் சொல்வதற்கான வெளியை உண்டாக்குவது மட்டுமே. அப்படி இல்லாமல் எங்களது கதைகளைச் சொல்லி வருமானம் பார்ப்பது என்று முடிவானபின் அக்கதை உருவாக்கத்திலிருந்து எங்களையும் உள்ளடக்குவது, எங்களின் நியாயமான பிரச்சினைகளையும், கருத்துக்களையும் சேர்ப்பது, அந்த வேலையைச் சேவையாகப் பார்க்காமல் நியாயமான ஊதியத்தைத் தருவது தான் சரியாக இருக்குமே தவிர நீங்கள் புரிந்து கொண்ட எங்களது கதைகளை விற்று அதை நாங்கள் கொண்டாட வேண்டும் என்று நினைப்பது அல்ல.

˜*˜*˜