உள்ளடக்க எச்சரிக்கை (Trigger Warning; TW): இரத்தம், வன்முறை, பாலியல் வன்முறை
எழுத்தாளர் குறிப்பு: இது இருப்பை மறுதலிக்கிற உண்மையை மறைத்து, அணைக்கப் பார்க்கிற சமூகம். மூர்க்கமாய் அது நம்மை அடிக்கும்போது எங்கேனும் ஓரத்தில் சிறிதாகவாவது ஒரு உதவியும் நம்பிக்கையும் கிடைக்கும். அது தோன்றும்வரை காத்திருங்கள்.
– ஷிசுக்கு
உதயத்தின் பொழுது அது. அந்த நீண்ட, உலகின் நீளத்திற்கு நீண்டு போகும் கறுப்புத் திரையின் முன் மனிதக்கூட்டம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சிலர் ஏற்கனவே வண்ணங்களுடன் திரையில் வேலை முடிப்பதில் மும்முரமாகியிருந்தனர். அடர்பச்சை, சிறுநீலம், அடர்மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு… வண்ணங்கள் திரையில் தெறித்து விழ ஆரம்பித்தன. தொடையின் வழி உதிரம் பொறுமையாய் நின்று நின்று வழிய, ஒரு பெண் சித்திரம் தீட்டிக்கொண்டிருந்தாள். குழந்தையை முதுகில் இறுக்கிக்கொண்டு மார்பைப் பிதுக்கி பால் எடுத்து, முடித்த சித்திரத்தின் மீது பூசிக்கொண்டிருந்தாள், ஒரு தாய். சுய இன்பம் செய்து, தான் தீட்டிய மலையின் மேல் தனது விந்து பாலைத் தடவி காட்சி ஒன்றை உருவாக்க முனைந்துகொண்டிருந்தான் ஒருவன். அந்த கூட்டம் அமைதியாய், ஆனால் வீரியமாய் ஒரே குழுவாக அந்த கறுப்புத்திரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தது. பலரின் கூந்தல் நீண்டு கிடந்தது, சிலது புழுதியிலும், சிலது கொண்டையிலும் முடங்கிக் கிடந்தது. அனைவரின் உடலும் கலவையான வண்ணங்களில் மூழ்கி எழுந்தது போலிருந்தது. பின்னுடல் மட்டும் பளிங்காய்த் தெளிந்து இருந்தது. அவர்களின் கைகள் தீவிரமாய் இயங்கிக்கொண்டிருந்தன. இடுப்பிலே கொடியுடன் வண்ணம் பூசுவதற்கான இறகுகளையும் கத்திகளையும் முடிந்திருந்தனர்.
நாளின் ஆரம்பத்தில் முனைப்பாய் எழும் கதிரவனுடன் கூட்டு சேர்ந்துகொண்டு அங்கு ஒரு உருவம் அசைந்துகொண்டிருந்தது. அவன் முன் இருக்கும் திரையில் ஆர்வமாய், வேகமாய் புது வண்ணங்கள் நிரம்பிக்கொண்டிருந்தன. ரத்தசிவப்பினால் இலைகளைப் படரவிட்டுக்கொண்டிருந்தான். அவனது அசைவுகள் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. ரத்தசிவப்பு வண்ணத்தை சேகரிப்பது, இலைகள் தீட்டுவது…ஆனால், முழுமூச்சுடன் தனது சக்தியை செலவழித்து ஆர்வமாய் செயல்பட்டுக்கொண்டிருந்தான். அவனது கவனமும் மனதும் அமைதியில் ஒருங்கிணைந்திருந்தது, அவனது நேர்த்தியான இலைகளில் தெரிந்துகொண்டிருந்தது. கொஞ்சமும் சோர்வு எட்டாமல், அவன் வண்ணத்தை அதே ரத்தசிவப்பில் மாறாது கலந்துகொண்டிருந்தான். அவனது உடலில் திட்டுத் திட்டாக அங்கங்கே ரத்த சிவப்பு நிறம் ஊறியிருந்தது. அவனது நெஞ்செலும்புகள் விடைத்துக்கொண்டிருந்தன. அவனது அடிவயிற்றின் இருபுறமும் எலும்புகள் கூர்மையாக நின்றுகொண்டிருந்தன. அவனது உதடுகள் உலர்ந்து, மெலிந்த கைகள் இறைஞ்சிக்கொண்டிருப்பது அவனுக்கு ஏன் கேட்கவில்லை என்பதற்கான பதில் அவன் கண்களில் தெரிந்தது. மகிழ்வில் மின்னிக்கொண்டிருக்கும் அவன் கண்கள் வலிமையற்ற நெஞ்சுக்கூட்டிற்குள் ஊக்கமாய்த் துடிக்கும் அவன் இதயத்தை ஒத்திருந்தன. அவனது ரத்த இலைகள் திரையில் ஒளிர்வுடன் வளர்ந்துகொண்டிருந்தன.
சூரியன் உச்சி தொடும்போது, ஒருமையில் பணியாற்றிக்கொண்டிருந்த கூட்டத்தில் சலசலப்புகள் உருவாக ஆரம்பித்தன. சிலர் திரையைவிட்டு விலகி நடக்க ஆரம்பித்தனர். வெயில் நட்டநடு தலையில் இறங்கும்போது, திரைக்கு முன்பு கிட்டத்தட்ட யாருமே இல்லை. இருந்த சிலரும் வண்ணங்களுக்கான குடுவையைப் பத்திரப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும் வேலையில் ஈடுப்பட்டிருந்தனர். ஆனால், அவன் மட்டும் இலைகளைத் தொடர்ந்து தீட்டிக்கொண்டிருந்தான். வியர்வை அவனது உடலில் வழிந்து, காய்ந்திருந்த ரத்த நிறத்தை ஈரப்படுத்தியிருந்தது. அடர்த்தியான ரத்த நிறம் வழியமுடியாமல், துளியாய் உருண்டு அவனது உடலின் சில இடங்களில் தொங்கிக்கொண்டிருந்தது.
வண்ணக்குடுவைகளை ஒழுங்கு செய்துவிட்டு நகர முயன்ற சிலர் இவனை ஏறிட்டனர். அவர்களது விழிகளில் கேள்விக்குறியுடன் அசூயை கலந்திருந்தது. அவர்களுள் வயது மூத்த ஒருவர் அவனிடம் நெருங்கி வந்தார், அவரது உடலில் சுருக்கங்கள் விழ ஆரம்பித்திருந்தன. அவனது முதுகில் தட்டிக் கூப்பிட்டார். அவன் சிறிது மிரண்டு திரும்பிப் பார்த்தான். அழுத்தமாய் “வா” என்று சைகை செய்து, அவனது கையில் இருந்த இறகைப் பறிக்க கரம் நீட்டினார். அவன் சட்டென்று, கையைப் பின்னிக்கிழுத்து “வரவில்லை” என்று தலையை ஆட்டினான். அவனது கண்களில் இந்த முறை அதிகப்படியான மிரட்சி தெரிந்தது. அவர் சற்று பொறுமையுடன், தலை மீதிருந்த சூரியனை சுட்டிக்காட்டினார், அவனது விலா எலும்புகளைத் தொட்டுக் காட்டி, “வா” என்று அழைத்தார். அவன் “இன்னும் கொஞ்சம் தான்” என்று சைகை செய்து காட்டினான், அவனது கைகள் அச்சத்துடன் இறைஞ்சின. அவர் அசைவின்றி அவனைக் கூர்மையாய்ப் பார்த்தார். அவன் தயக்கத்துடன் திரும்பி கறுப்புத் திரையை நோக்கினான், சிறு வெற்றிடம் போக, அவனுடைய இடத்தில் மற்றெங்கிலும் ரத்த இலைகள் மின்னிக்கொண்டிருந்தன. அவன் இறகை எடுத்து கலந்து வைத்திருந்த நிறத்தில் நனைக்கப் போனான். அங்கு அவன் கலந்து வைத்திருந்த நிறத்தைக் காணவில்லை. அவன் அச்சத்துடன் புதிதாக நிறத்தைக் கலக்க அவன் கூடைக்குள் கைவிட்டபோது, சிவப்பு நிறக் குடுவைகள் அங்கு இல்லை. மாறாக, அடர்பச்சை நிறக் குடுவைகள் இருந்தன. அவனது கண்கள் கலங்கி கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது, ஒரு சிறுகூட்டம் தன்னைக் கவனித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அவர்களது முகத்தில் சிரிப்பு இழையோடியது. அவனை அழைத்த வயதில் மூத்தவர், இப்போது சிரித்துக்கொண்டே மறுபடி “வா” என்று சைகை செய்தார். அவன் திரும்பி தனக்கு வேண்டிய நிறத்தை சேகரிக்க தனக்கு அருகில் வேலை பார்ப்பவரின் கூடைக்குள் தேடப் போனான். அவன் வேகமாய் நடக்கும்போது, அவனது தலையை நோக்கி அவனது ரத்த சிவப்புக் குடுவை வீசப்பட்டது. அவன் அலறலுடன் சரிந்து தரையில் விழுந்தான். அவன் கலந்த நிறமும், அவனது ரத்தமும் ஒரே நிறத்தில் இருந்தது. வறண்ட நிலத்தின் இறுகிய மண்ணின் துகள்கள் அவன் கன்னத்திலும், வேர்வையில் ஊறிய நிறம் காயா உடம்பிலும் ஒட்டிக்கொண்டன. அவனது கால்கள் துடிக்க அவன் எழ முயற்சி செய்தான். எழுந்து நின்றபோது, அவன் கண்களின் பார்வை தெளிவடைய சிறிது நேரம் எடுத்தது, கூடியிருந்தவர்களின் சிரிப்பு கண்ணில் பட்டது. அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு கறுப்புத் திரையை நோக்கி நடந்தான். இறகை எடுத்து அவன் பின்னந்தலையின் காயத்தில் தோய்த்து எடுத்தான். அவன் பின்னிருந்து சினத்தின் கூச்சல் எழுந்தது. வயதில் மூத்தவர் அவனிடமிருந்து இறகைப் பிடுங்கி, ஒடித்து நசுக்கித் தரையில் விட்டெறிந்தார். அவன் கதறி அந்த இறகை எடுக்கக் குனிந்தான். அவனுக்குத் தலை சுற்றியது. அப்போது தரையைத் தொட்ட அவனது கூந்தலைப் பிடித்து இழுத்து, அவனைத் தரையில் வீழ்த்தினர், அடிவயிற்றில் முகத்தில் உடலெங்கும் உதைகள் விழுந்தன, அவன்மீது எச்சில் விழுந்தது. கதறும் அவன் குரல் முன்பே நகர்ந்து, தூரம் போய்விட்டவர்களையும் நிறுத்தித் திரும்பிப் பார்க்கவைத்தது. அவனது கண்கள் பெருகி வழிந்தன. சில கணங்களுக்குப் பின், மூத்தவர் கூட்டத்தை சத்தம்போட்டு அமைதிபடுத்தினார், அவனை சுட்டிக்காட்டிப் பேசினார். அவன் இது எதையும் கவனிக்க முடியாத நிலையில் இருந்தான். அவனது உடல் நைந்துபோனது போலிருந்தது. காயங்களில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது. அவன் ஒருக்களித்துப் படுத்து விம்மிக்கொண்டிருந்தான். தண்ணீரிலிருந்து கரையில் விழுந்துவிட்ட மீனின் கடைசி அசைவுகள் போல அவை இருந்ததன.
மூத்தவர் கண்காணிக்க, கூட்டம் அவனை மெல்லமாய் மேலே தூக்கியது, அமர்ந்த நிலையில் அவனைத் தாங்கிக்கொண்டு புது இறகை அடர்பச்சையில் தோய்த்து அவன் கையில் கொடுத்தது. அவன் கைகளில் திணிக்கப்பட்டவுடன், அவன் கண்கள் திறந்து பார்த்தான். பச்சை நிறத்தில் இறகு குளித்திருந்தது, அதை அவன் கைகள் பற்றிக்கொண்டிருந்தன. சில கணங்களுக்குப் பின், இடுப்பிலிருந்து நிறம் தடவும் கத்தியை எடுத்து வேகமாய் தன் கையைக் கிழித்தான். புடைத்துகொண்டு வெளிவரும் ரத்தத்தை விரலால் தொட்டு, திரையில் பூசப்போகும் முன், கூட்டம் அவன் உடம்பைத் தூக்கித் தரையில் வீசியது. இப்போது குழுமியிருந்தவர்களின் கண்களில் சினம் பொங்கி வழிந்தது. அவனது அலறல் நிற்காமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அவனது உடம்பைக் கறுப்புத் திரையை நோக்கி தரையோடு இழுத்துக்கொண்டு போய், அவனது கைக்குள் மீண்டுமொருமுறை அடர்பச்சை நிறத்தில் தோய்த்த இறகு திணிக்கப்பட்டது. அவன் கதறிக்கொண்டே தலையை இடம் வலமாக ஆட்டினான்.
அவனது கூடையில் இருந்த நிறக்குடுவைகள் அவனை நோக்கி வீசப்பட்டன. உறுதியான கல்லால் ஆன அவைகள் அவன் தலையில், நெஞ்சில், தொடையில், பிறப்புறுப்பில் அடித்து நிறத்தைக் கொட்டி தரையில் விழுந்தன. அவனது உடலைத் திருப்பிப்போட்டு அவனது மலத்துவாரத்தினுள் ஒவ்வொருவரின் குறியாக இறக்கினர். அவனது உடலை வலிமையான கரங்கள் அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தன. அவனது தொண்டையின் முழு சக்தியுடன் அவன் அலறல்கள் வெடித்துப் பிறந்தன. அவனது கதறலில் அவனது உடல் விடாமல் குலுங்கியது. கூடியிருந்தவர்களின் சிரிப்பு சத்தத்தையும் மீறி அது கேட்டது. அவனை மறுபடி திருப்பிப்போட்டு, அவன் கன்னத்தில் அறைந்து காறித் துப்பியபோது அவனது அழுகை குரலை வெளிப்படுத்தும் சக்தியை இழந்திருந்தது. அப்போது அடிபட்டிருந்த அவனது குறியை வாயில் எடுத்தனர். மறுபடியும் ஒரு முறை, அவன் வீரிட்டுக் கத்தினான், வாய்க்குள் வைத்து இழுத்து, பற்களால் காயப்படுத்தியபோது அவனது அழுகை பெரும் இறைஞ்சுதலை உள்ளடக்கி ஒலித்தது. இறுதியில், அவனது காயப்பட்ட குறி விந்துப்பாலைத் துடித்து துடித்து வெளியேற்றும்போது அந்த இடம் முழுவதையும் அவனது அழுகையின் ஒலி நிறைத்திருந்தது. கடைசி துடிப்பில் அவனது விந்துப்பால், நெருங்கிக் குனிந்து கால் மடித்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திற்குள் ஒருவரின் முகத்தில் பட்டுத் தெளித்தது. அவர் காறித்துப்பி எழுந்து அவன் மேல் சிறுநீர் கழித்தார். கூடியிருந்தவர்கள் சேர்ந்து அவன் மேல் சிறுநீர் கழித்தனர். பின்பு, களைந்து சென்றனர். அவனது அழுகை இப்போது நின்றிருந்தது. நிறக் கலவையில், ரத்தத்தில், சிறுநீரில் அவன் ஊறிக்கிடந்தான். அவனது வயிற்றில் வெள்ளைப் புள்ளிகளாய் அங்கங்கே விந்துப்பால் தெறித்துக் கிடந்தது.
அவர்கள் கலைந்தபோது சூரியன் உச்சியிலிருந்து இறங்கியிருந்தது. அதற்குப்பின்பும் அவன் பல மணி நேரம் அசைவின்றி அப்படியே கிடந்தான். சூரியன் மறைவதற்குத் தயாராக முடிவு செய்தபோது அவன் எழுந்துகொண்டான். உட்கார்ந்தபடியே ஊர்ந்து ஊர்ந்து திரையை நோக்கி முன்னேறினான். மிகச்சிறு இடம்தான் இலைகளுக்காகக் காத்திருந்தது. ஒருமுறை நிமிர்ந்து முழுமையாகத் தான் வரைந்திருந்ததைப் பார்த்தான். மீதம் இருந்த இடத்தில் தீட்ட வேண்டிய இலைகள், தேவைப்படும் ரத்தசிவப்பின் அளவு, நேரம் என சோர்வில் ஊறியிருந்த அவன் கண்கள் கடைசித் துடிப்பில் கணக்கிட்டன. இடுப்பிலிருந்து கத்தியை எடுத்தான். மணிக்கட்டின் நரம்பைத் தேர்ந்துகொண்டான். அப்போது காற்றில் வீசப்பட்ட குடுவை ஒன்று அவனது கத்தியைத் தட்டிவிட்டது. அவனிடம் அழுகைக்குக் குரல் மிச்சம் இல்லை. அவன் உணர்வின்றித் தரையை வெறித்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் ஒரு பெண் அவனை நெருங்கினாள். அவன் தலை உயர்த்திப் பார்த்தான். அவனது கண்களில் கொஞ்சம் ஆச்சரியம் மினுங்கியது. அவளது கூந்தலின் முடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருப்பதுபோல் இருந்தது. சில குறிப்பிட்ட இடத்தில் அறுத்து வீசியது போல் தோன்றியது. அவள் உடலெங்கும் வெட்டுப்பட்ட காயங்களும், சூட்டுக்காயங்களும் இருந்தன. அவளது இடது காது எரிந்து வடிவமற்று இருந்தது. அவள் அவனது நிறக்கூடை இருந்த இடத்தில் தான் எடுத்து வந்திருந்த கூடையை வைத்தாள். அவள் திரும்பியபோது, அவளது உதடு கிழிந்து புது ரத்தம் வந்து கொண்டிருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. அவளது மார்பெங்கும் தோலை மறைத்துக் காயங்களும், தழும்புகளும் இருந்தன. இடது மார்பின் காம்பு அறுபட்டிருந்தது. அந்த காயம் ஆறாமல், மஞ்சளாய் வீங்கி சலமும் ரத்தமும் பொங்கிக்கொண்டிருந்தன. அவள் நடக்கும்போது மண்ணில் நீர்மையான ரத்தம் சொட்டுவதை அவன் பார்த்தான். அவள் தள்ளி விழுந்திருந்த அவனது கத்தியை எடுத்துவந்து அவனது இடுப்பில் முடிந்து கொடுத்தாள். அவள் கூட எடுத்து வந்திருந்த இறகை எடுத்து அவள் தொடையில் வழிந்த ரத்தத்தில் தொட்டு, அவள் பிறப்புத் துவாரத்தினுள் விட்டு சுற்றி, தோய்த்து அவன் கைகளில் கொடுத்தாள். இறகின் சிறுசிறு மென்மையான முடிகளில் ரத்த சிவப்பு ஏறியிருந்தது. அவன் கண்கள் நிறைந்து வழிந்தன. அவள் உணர்வுகள் இன்றி கையால் திரையை சுட்டிக்காட்டினாள். அவன் மெல்லமாய் நகர்ந்து அருகில் போய், இலைகளை உருவாக்கத் தொடங்கினான். இலைகள் உயிரோட்டத்துடன் படர ஆரம்பித்தன. முடித்தபின்பு, கடைசி வண்ணப்பூச்சுக்காக அவன் திரும்பி அவளை நோக்கி கைகளை விரித்தான். அவளது பிறப்புறுப்பின் இதழ்களை விலக்கி, அவனது வலது ஆட்காட்டி விரலை உள்ளே வைத்து முன்னும் பின்னும் தோய்த்துக்கொடுத்தாள். பிசுபிசுப்பாய் அவன் விரலில் நிறம் ஒட்டிக்கொண்டது. அவன் தீட்டி முடித்தான். அவனது கண்கள் நிறைந்து, விம்மல்கள் வெடித்தன. திரும்பி அவளது அடிவயிற்றில் முத்தமிட்டு அழுதான். அவள் சரிந்து அவனருகில் அமர்ந்தாள். அவள் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. அவர்கள் முன்னே ரத்த சிவப்பு இலைகள் மயங்கிக்கொண்டிருக்கும் அந்திமாலை ஒளியில் கறுப்புத் திரைக்குள் உயிருடன் நீந்திக்கொண்டிருந்தன.