நாம் வாழும் சமூகத்தில் நம் அடையாளங்கள் பலவாகவும் பல படிநிலைகளிலும் இருக்கின்றன. சூழல்களைப் பொறுத்து ஒரு வகையில் சலுகைகள் உள்ளவராகவும் மற்றொரு வகையில் ஒடுக்கப்படுபவராகவும் இருக்கிறோம். எந்த ஒரு ஒற்றை அடையாளமும் அனைவருக்கும் பொருந்துவதாக இல்லை என்பதே உண்மை.
Pride கொடியானது உலகெங்கிலும் உள்ள பால்புதுமைச் சமூகத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகத்தின் பன்மைத் தன்மையை உணர்த்தும் வகையில் வானவில் நிறங்களைக் கொண்டதாக அது அமைந்துள்ளது. LGBTQ சமூகத்தினரை அடையாளப்படுத்துதல் என்பதோடு நில்லாமல், சமூக/அரசியல் சார் போராட்டங்களில் அதன் ஊடறுத்தன்மையைக் குறித்திடும் பொருட்டு அக்கொடியின் வடிவமைப்பில் மாறுதல்களும் செய்யப்படுகின்றன.
1978இல் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்த சேர்ந்த கில்பெர்ட் பேக்கர் எனும் கலைஞரால் வானவில் கொடி பால்புதுமைச் சமூகத்தின் அடையாளமாக பிரபலப்படுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு நிறவெறிச் சட்டங்கள் ஒழிக்கப்பட்டதற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் LGBT Pride கொடி, விடுதலையையும் பன்மைத் தன்மையையும் அடையாளப்படுத்தும் விதமாக அந்நாட்டின் தேசியக் கொடி மற்றும் வானவில் கொடி ஆகிய இரண்டின் கலப்பாக அமைந்துள்ளது. 2017 ஜூன், அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வானவில் கொடியில் கருப்பு மற்றும் பிரவுன் நிற கோடுகள் சேர்க்கப்பட்டன. அது பிரதிநிதித்துவப்படுத்தப்படாத விளிம்புநிலை மக்களான, புறக்கணிக்கவும் கவனமாக ஒதுக்கியும் வைக்கப்படும் நிறமானவர்களை அடையாளப்படுத்தியது.
ஒடுக்கப்படும் மக்களுக்கான சமத்துவத்தைக் கோரி களத்தில் செயல்படும் இயக்கங்களைப் புறக்கணித்து இங்கு சமூகநீதி பேசவியலாது. அனைத்து வகையிலும் பன்மையை தனது உட்கூறாகக் கொண்டது பால்புதுமைச் சமூகம். நம்மை பாதிக்கும், வடிவமைக்கும் பிற சமூகப் பிரச்சனைகளை தவிர்த்துவிட்டு, தனியாக பால்புதுமையினரின் உரிமைகளைப் பேச முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அம்பேத்கரிய, பெரியாரிய மற்றும் இடதுசாரி சித்தாந்தங்களும் இயக்கங்களும் சம உரிமைக்கானப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த வரலாற்றுப் பின்புலத்தில், பால்புதுமையினரையும் உள்ளடக்கி இம்மண்ணில் ஊறியிருக்கும் இச்சித்தாந்தங்கள் நம் அடையாளங்களை, அரசியலை, சமத்துவத்தைக் கோரும் போராட்டங்களை வடிவமைப்பதில் பெரும் தாக்கத்தைச் செலுத்துகின்றன. இப்பரந்த சமூகநீதிப் போராட்டத் தளத்தில் ஓரணியில் நின்றிட, பால்புதுமைச்சமூகத்தினர் தங்களின் சாதிய, வர்க்க, வாழும் நிலம்சார் மற்றும் சமூக-கலாச்சார ரீதியான சலுகைகள் எவ்வாறு ஒரு பிரிவு பால்புதுமையினரின் குரல்களை வலுவற்றதாக மாற்றுகின்றன என்பதைக் கண்டுணர வேண்டும். இம்மூன்று இயக்கங்களைச் சார்ந்த பால்புதுமையினர் அல்லாத பிறரும், பால்புதுமையினரின் சுயமரியாதைக்கான, ஒடுக்குமுறைக்கு எதிரான இப்போராட்டத்தில், இச்சமூகத்தில் அவர்களுக்கான வெளியை, பாதுகாப்பை உறுதிப்படுத்திட உடன்நிற்க வேண்டும் என்கிற அறைகூவலாகவும் இது அமைகிறது.