தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலவாரியம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது

2008-ம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அரவாணிகள் நலவாரியம் என்ற பெயரில் திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் மூன்றால் பாலினத்தவர் வாரியம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 

2020-ம் ஆண்டு ஆட்சியமைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த வாரியத்தை தற்போது மறுசீரமைப்பு செய்துள்ளது. திருநங்கைகள் நலவாரியமாக பெயர்சூட்டப்பட்ட இந்த வாரியத்தில் 10 திருநங்கைகள், 2 திருநம்பிகள் மற்றும் ஒரு சிஸ் பாலினப் பெண் அலுவல்சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக செயலற்ற நிலையில் இருந்து தற்போது மறுசீரமைக்கப்பட்ட இந்த வாரியம் மாநில சமூக நலன்  மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகத்தின் தலைமையின் கீழ் இயங்கும். 

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த A. ரியா, தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த  T பியுட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த சத்யஶ்ரீ ஷர்மிளா, M நீலா, மதுரை மாவட்டத்தைச் சார்ந்த ப்ரியா பாபு, திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த P மோகனாம்பாள் நாயக், தேனி மாவட்டத்தைச் சார்ந்த செல்வம் முனியாண்டி, சென்னையைச் சார்ந்த R அனுஶ்ரீ, M ராதா,  K அருணா, S சுதா, K அருண் கார்த்திக் மற்றும் வித்யா தினகரன் ஆகியோர் இந்த வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருநர் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் நலத்திட்டங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வுகாணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாரிய நியமனத்தை பால்புதுமையினர் மக்கள் வரவேற்று உள்ளனர். இந்த வாரியத்தில் இரண்டு திருநம்பிகள் நியமிக்கப்படிருப்பது மிகவும் முக்கியமான மற்றும் பாராட்டத்தக்க முடிவாகக் கருதப்படுகிறது.. 

திருநம்பிகளையும் உள்ளடக்கி அவர்கள் நலனிலும் கவனம் செலுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த வாரியத்திற்கு “திருநர் நலவாரியம்” எனப் பெயரிட்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என பால்புதுமையினர் சமுதாயம் எதிர்பார்கிறது .