நாட்கள் கடக்க கடக்க..
சிராய்ப்புகள் பழுப்பேறி,
உதிரத்தொடங்கி விட்டன.
ரத்த வாசனையுடன் கழட்டிப்போட்ட உன் சட்டை..
விறைத்து அடர்செம்மை பரவியிருந்தது.
நடந்தவை யாவும்..
ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்துவிட்டதைப்போல,
ஞாபகங்களில் பனிபூத்திருந்தது.
உனக்கும் எனக்கும் மத்தியில்..
நிலம் வறண்டு,
செம்மண் இறுகி,
பிளவுகளின் தடங்களில்
பூக்கள் கூட பூக்கத்தொடங்கியிருக்கிறது.
உன்னோடு பேசாமல்
நாள் ஒன்று கடந்து,
வாரம் ஒன்று தீர்ந்து,
மாதம் ஒன்று முடிந்து,
மற்றொரு மாதம் பிறந்திருக்கிறது.
ஊரும், நாடும், உலகமும்..
தவறாமல்
தினப்படி மரணங்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.
சகல நினைப்புகளிலும்..
உன் இருப்பின்மை
மீண்டும் மெல்ல,
சலனமற்ற அகாலங்களில் பரவத்தொடங்கியிருக்கிறது.
குளிர்ந்தும், தூர்ந்தும் போயிருந்த
நீ பேசிய வார்த்தைகள்
பார்ப்பவை, கேட்பவைகளிலெல்லாம்
விரவி விரவி மறைகிறது.
உன்னை அழைக்கவும்..
உன் மனம் அறியவும்..
உன்னிடம் இதையெல்லாம் சொல்லவும்,
கைகள் மீண்டும் நடுங்கத்தொடங்கியிருக்கிறது.
உன் புகைப்படங்கள்
எதேச்சையாக கண்முன் விழுவதும்..
இரவுகளில் துயரமொன்று தீவிரம் பெருகுவதும்
வாடிக்கையாகியிருக்கிறது.
இரண்டு வெவ்வேறு ராத்திரிகளில்..
கனவுகளில்..
நீயும், நானும்
பெரும் சண்டைகள் இட்டுக்கொள்வதாய் வந்தன.
சாத்தியங்களில் இருந்த தருணங்கள்..
தூரத்தில்..
நட்சத்திரமாய் மின்னிக்கொண்டிருக்கிறது.
விருப்பு வெறுப்புகளின் இடையே..
பிரியங்கள் தாழிடப்பட்ட கதவுகளுக்கு அப்பால்..
கோபங்கள், கேள்விகள் கடந்து..
தன்னிரக்கம் தாண்டி..
எப்போதும் உன் மீதிருக்கும் ஆதாரமான காதல் ஒன்று
சிரமத்துடன் சுவாசித்துக்கொண்டிருக்கிறது.
நீ வருவதாய் சொன்ன நாளில்..
காத்திருந்துவிட்டு,
நீ வராமல் தனித்து திரும்ப துளியும் தினவில்லை!
கிடப்பாய் கிடக்கும் உன் நினைவுகளையும்,
உன்னை பற்றிய யோசனைகளையும்,
உனக்காக செய்யப்பட்ட பிரயத்தனங்களையும்,
உன் மீதான வருத்தங்களையும்,
ஒரு பிடியும் குறையாத உன் மீதான அன்பையும்,
உன் சிரிப்பையும்,
கோபங்களையும்,
கவலைகளையும்,
பிரியப்பட்ட பாடல்களையும்,
புலப்பட மறுக்கும்
இந்த பிரிவின் பெரும் அழுத்தத்தையும்
இன்னுமொருமுறை
ஒரு மொழியில் பேசிக்கொள்ளவேனும்
சொன்ன நாளில் திரும்பி வா!