அலி முதல் திருநர் வரை

இந்தக்கட்டுரை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்களால் 2006-ல் எழுதப்பட்டது. பின்னர் விரிவாக விளக்கியக் கட்டுரை இங்கே வெளியிடப்படுகிறது.

பிறப்பால் ஒரு பாலினத்தைச் சார்ந்தவர்கள், சில உயிரியல் (Biological) மாறுபாட்டினால் எதிர்பாலினமாக அகவுணர்ந்தவர்கள்,பல உளவியல் சிக்கல்களைக் கடந்து, தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையையும் அவ்வாறே நடத்துபவர்கள் அலி/பேடி என்ற சொல்லால் அறியப்பட்டு வந்தனர்.

பேடி/அலி (நபும்சகன்)

பும்சவன கிரந்த முகூர்த்தப் பத்திரிக்கை என்பது கருவுற்ற பிறகு செய்யும் பன்னிரெண்டு சம்ஸ்காரங்களில் இரண்டாவது என்று சொல்கிறது OSL (Online Sanskrit Lexican). இதற்கு Male production rite என்று விளக்கம் இருக்கிறது. பும்ச-வன என்றால் ஆண் குழந்தை வேண்டி நடத்தும் சடங்கு என்று சொல்கிறார்கள்.

ந-பும்சக என்றால் ‘பால் இல்லாத’ என்று பொருள். ஆண்பால், பெண்பால் எதும் இல்லாதது. இதுவும் அல்ல, அதுவும் அல்ல. அதனால் அலி (பால் ஏதும் இல்லாதது). அலி வேறு, பேடி வேறு.

பெண் தோற்றமும், ஆண் இயல்பும் – அலி.

ஆண் தோற்றமும், பெண் இயல்பும் – பேடி.

பகையத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சும் அவன்கற்ற நூல் (குறள் : 727)

தோற்றத்தில் ஆண் போல் நின்றும், போர்முனையில் அஞ்சி ஒளிந்து கொள்பவன் கையில் வாள் எப்படி பயனற்றுப் போகிறதோ, அப்படி அவையைக் கண்டு அஞ்சி ஒதுங்குபவன் படித்த நூலும் பயனுற்றுப் போகும்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்

காணலும் ஆகான் உனளல்லன் இல்லையல்லன்

பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்

கோணை பொதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே.

(நம்மாழ்வார் திருவாய்மொழி)

கால மாற்றம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அலிகளை கேவலப்படுத்தி மகிழத்தக்கக்கூடிய இழிபிறிவிகளாகக் கருதச் செய்தது. அதற்கேற்ப அலி/ பேடி என்ற சொற்பயன்பாடும் ஒரு கேலிப் பொருளானது. இந்த சிறிய அறிமுகத்தோடு திருநங்கை என்ற பதத்திற்கான அவசியத்தைக் காண்போம்.

சமூகத்தில் அலிகளுக்கான விடுதலை எழத் துவங்கிய காலத்தில் அலி/பேடி என்ற சொல்லிற்கு இணையான, கண்ணியமான சொல் தேவைப்பட்டது. அதேகட்டத்தில், மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான அரவான் கோயில் (கூத்தாண்டவர்) திருவிழா அலிகள் நிமித்தம் கடந்த 20 வருடங்களாக பிரபலமடையத் துவங்கியது. அதன் அடிப்படையில், அலிகள் அரவானின் ஒரு நாள் மனைவியாக – கிருஷ்ணாவதாரமாக (மோகினி) கருதப்பட்டு அரவானி என்றழைக்கலாம் என்ற கருத்து முன்னிருத்தப்பட்டதையொட்டி அரவானிகள் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு நாம் அரவான் கதையை விரிவாக, கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அரவான் என்பவன் யார்? அர்ஜுனனின் மகன். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒரு நாகர் குலப் பெண்ணுக்கும், அர்ஜுனனுக்கும் பிறந்த மூத்த வாரிசு. ஆனால், உயர்ந்த ஜாதிப் பெண்ணுக்கு பிறந்த மகனான அபிமன்யுவைப் போலன்றி, தந்தை அர்ஜூனனின் அரவணைப்பின்றி சமூக அங்கீகாரமும் மறுக்கப்பட்டு வளர்ந்தவன். இந்த ஒடுக்கப்படுதலுக்காக அர்ஜூனன் மீதான கோபத்தோடு வளர்ந்தவன்.

பின்னாளில் கௌரவ-பாண்டவர்களின், வெற்றி தோல்வியை நிர்மாணிக்கக் கூடியவனாக (களப்பலியாகக் கூடிய தகுதி உடையவனாகிய) அரவானே இருந்தான். அப்போதுதான், யுத்த தந்திரம் என்ற பெயரில் கிருஷ்ணன் என்னும் மாயாவி சூது வார்த்தையால் அரவானைக் களப்பலிக்கு சம்மதிக்க வைத்தான். களப்பலியாவதற்கு முன்பாக தனக்கொரு மனைவியும், மனைவி மூலம் ஒரு வாரிசும் வேண்டிய அரவானை மணக்க யாரும் முன்வராத நிலையில், கிருஷ்ணனே பெண்ணாகவும் உருவெடுத்து அரவானை மணந்தான். அதாவது, வெற்றி ஒன்றே இலக்கு என்ற நிலையில் பெண் வேடமணிந்து சூது புரிந்தான்.

இன்று சமூக விடுதலை, சம அங்கீகாரம், சம உரிமை எனப் போரிடத் துவங்கியுள்ள அலிகள் ஒடுக்கப்படுவதலின் குறியீடாக, மேட்டுக்குடிகளின் சுயநலத்திற்காக பலிகடா ஆக்கப்பட்ட கதாப்பாத்திரம் மூலமாக அறியப்படுவது (அரவானின் மனைவியாக) எத்தகைய நகைமுரணாகிறது!?.

——————

மேலும், அதே மகாபாரதத்தில் அரவானின் தந்தையான அர்ஜூனனும் தான் பெற்ற சாபம் காரணமாக, அலியாக (பிரகன்நளை) சில காலம் வாழ்ந்த கதையுமுண்டு. இது, அரவான் – மோகினி கதையாடலுக்கு முன்பாகவே மகாபாரதத்தில் வரும் நிகழ்வு. மற்றொரு இதிகாசமான இராமாயணத்தில், ராமன் வனவாசம் செல்கையில் நாட்டு மக்கள் அனைவரும் அவர் பின் சென்றனர். அவர்கள் திரும்பிச் செல்லும் பொருட்டு ராமர் ”ஆண்கள், பெண்கள் அனைவரும் திரும்பி நாட்டுக்குச் செல்லுங்கள்” என்றார். ஆண்களையும், பெண்களையும் மட்டும் தானே திரும்பிச் செல்லுமாறு சொன்னார். எனவே, நாம் செல்ல வேண்டியதில்லை என்று அலிகள் அனைவருமே ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பும் வரை அவருக்காக பதினான்கு ஆண்டுகள் காத்திருந்த கதையும் உண்டு.

ஆக, அரவான் கதையாடலுக்கும் முன்பே அலிகள் வாழ்ந்த வரலாறு ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அரவானி என்ற சொல் வரலாற்று அடிப்படையிலும் பொருத்தமற்றதாகிறது.

————-

கிறுத்தவ மதத்தின் வேத நூலான பைபிளில் அன்னகர் என்ற சொல், தமிழ் மொழியில் பைபிள் அச்சான நாளிலிருந்தே கண்ணியமாக பயன்படுத்தபட்டு வருகிறது.

ஆண்/பெண் என்ற சொல் மதம்/இனம் அல்லாமல் பாலியலை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்படுகிறது. அலிகளோ சராசரி ஆண்/பெண் போலன்றி மதம்,இனம்,மொழி கடந்து, ஒடுக்கப்பட்டோர் என்ற வகையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருபவர்கள். அவர்கள் குறிப்பட்டதொரு மதம் சார்ந்து அழைக்கப்படுதல் ஜனநாயக அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும் பொருந்தாது.

—————

இனி திருநங்கை என்ற சொல்லைப் பார்ப்போம்,

சீவக சிந்தாமணியின் 2558ஆம் வரியில் பயன்படுத்தப்படும் திருநங்கை என்ற சொல் அழகிய பழந்தமிழ் சொல்லாக உள்ளது. மேலும் அலி என்னும் சொல்லிற்கிணையான பொருள் பொதிந்து குறிப்பாக மதம், இன அடையாளம் கடந்த பொதுப் பெயராக ஏற்புடையதாகிறது. இதனை முதலில் கண்டுணர்ந்து 90களின் ஆரம்பத்தில் நாட்டிய ஆளுமையான நர்த்தகி நடராஜ் இப்பதத்தை  தனது பேட்டி ஒன்றில் பயன்படுத்தி இருந்தார். 

இதனை அறிந்தபின்  தொடர்ச்சியாக நான் எனது இணையக் கட்டுரைகளில் வலியுறுத்தி வந்தேன். என்னை நேர்காணல் செய்யும் பத்திரிக்கையாளர்களிடமும்  திருநங்கை என்றே பயன்படுத்துமாறு வலியுறுத்தி வந்தேன். அந்நேரங்களில் பெரும்பாலான நமது தொண்டு நிறுவனத் திருநங்கை தோழிகள் ‘அரவானே எங்கள் கடவுள். அரவானியே எங்கள் அடையாளம்’என்றும் வாதிட்டு வந்தனர். 

நேர்காணல்கள் அல்லது செய்திகளிலும் அரவானி என்ற சொல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட நிலையில், நமது பாலின அடையாளமாக பயன்படுத்தும் சொல்லில் மதச்சாயம் இருந்துவிடகூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன். எனது இணையக்கட்டுரைகளிலும், மேடைப்பேச்சுக்களிலும் தொடர்ந்து திருநங்கை என்ற சொல்லை வலியுறுத்தியது. இது போன்ற தொடர் முயற்சிகளுக்குப்பிறகு,  சில மாற்றுச்சிந்தனை கொண்ட பத்திரிக்கை நண்பர்களும்   திருநங்கை எனும் பதத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர். அவ்வாறு இச்சொல் சற்று பரவலாகத் துவங்கியது.

அதன் அடுத்த கட்டமாக அப்போது ஆட்சியில் இருந்த  திமுக ஆட்சி தலைவர் கலைஞர் அவர்களால் திருநங்கை என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டுமென அரசாணை பிறப்பிக்கப்பட்டு இப்போது இச்சொல் பயன்பாட்டில் வந்துள்ளது. 

இப்பதத்தின் தொடர்ச்சியாக, அதாவது பால்மாறிய பெண்களுக்கு திருநங்கை என்னும் சொல்லைப் போல, பால் மாறிய ஆண்களுக்கு திருநம்பி என்னும் சொல்லை முதன்முதலில் பத்திரிக்கையாளர் கவின்மலர் தனது கட்டுரை ஒன்றில் பயன்படுத்தினார். இருவருக்கும் பொதுவாக (பாலின சிறுபான்மையினரான திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இருவரையும்) குறிக்க திருநர் என்னும் பதத்தை களப்பணியாளர் அநிருத் பயன்படுத்த துவங்கினார். இடையிடையே சிலர் மூன்றாம், முப்பதாம் பாலினம் என்றும் பயன்படுத்துவதுண்டு. அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பொதுவாக ட்ரான்ஸ்ஜெண்டர் என்று சொல்லும் போதே திருநங்கைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். ட்ரான்ஸ்ஜெண்டர் என்ற சொல் பாலின சிறுபான்மையினரை பொதுவாக குறிக்கும் சொல்லாகும். அதாவது திருநர் எனும் பதம் குறித்த இந்த தவறான புரிதலும், சொல்லாடலும் இதுவரை திருநம்பிகள் குறித்த விவாதத்தை துவங்காமல் தடுத்து நிறுத்தியுள்ளது. ஆகவே இச்சொல்லாடலிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். 

மூன்றாம் பாலினம் (Third Gender), இதரர் (Others) போன்ற மூடத்தனமான, அருவெருப்பான சொல்லாடல்களையும் தவிர்த்தல் மிக அவசியம்.

ஆக, முறையான சொற்கள்

Transgender  –  திருநர்

Trans woman  – திருநங்கை

Trans man   –  திருநம்பி